சொந்தங்களுக்குள் நடக்கும் திருமணங்களுக்குத் தடை: பாராட்டுக்குரிய சுவீடன் சட்டம்

3 Min Read

சுவீடன் நாட்டு நாடாளுமன்றம் கடந்த மே 26 அன்று ஒரு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. அதன்படி முதல் நிலை உறவினர்களுக்குள்ளோ (அத்தை மகன், மாமன் மகள், சித்தப்பா, பெரியப்பா உள்ளிட்ட உறவினர்கள்) அல்லது பிற நெருங்கிய உறவினர்களுக்குள்ளோ திருமணங்கள் நடைபெறுவதைச் சட்டப்படி தடை செய்ய அந்நாட்டு நாடாளுமன்றமான ரிக்ஸ்டாக் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் புதிய சட்டம் உறவினர்களுக்கிடையேயான திருமணங்களுக்கு நிபந்தனையற்ற தடையை விதிக்கிறது.  இத்திருமணங்கள் சுவீடனில் அங்கீகரிக்கப்படாது. அத்துடன், வெளிநாடுகளில் நடைபெறும் இத்தகைய திருமணங்களும் இனி சுவீடனில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாது என்றும் உறுதிபட அறிவித்துள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு முதலே விவாதிக்கப்பட்டு வந்த இந்த மசோதா, இவ்வாண்டு மே மாதம் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. அண்மையில் ஓர் ஆய்வும், இதனை மீண்டும் உறுதி செய்துள்ளது. நெருங்கிய உறவினர்களுக்கு இடையேயான திருமணங்கள், ஒத்த மரபுநிலை உருவாகக் காரணமாகின்றன. இது அடுத்தடுத்த சந்ததியினருக்கு தன்னியக்கப் பின்னடைவுகளும், மரபணுக் கோளாறுகள் (Autosomal recessive genetic disorders) பிறவிக் குறைபாடுகளும் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கின்றது. ‘பார்ன் இன் பிராட்ஃபோர்ட்’ என்ற ஆய்வு, நெருங்கிய உறவுத் திருமணங்கள், பிறவிக்குறைபாடு அபாயத்தை ஏறக்குறைய இருமடங்காக (3% முதல் 6% வரை) அதிகரிப்பதுடன், அந்த ஆய்வில் ஏற்பட்ட அனைத்து பிறவிக் குறைபாடுகளில் 30% அளவுக்கும், சிசு மரணங்களில் 25% க்கும் இந்த நெருங்கிய உறவுத் திருமணங்கள் காரணமாக அமைந்ததை எடுத்துக்காட்டியுள்ளது.  அறிவியல் காரணங்களுக்காகவும், பண்பாட்டு ரீதியாகவும் இச்சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது அந்நாடு.

சுவீடன் ஒரு முற்போக்கான நாடு. 2009-ஆம் ஆண்டே திருமணத்திற்கு இருவருக்கும் 18 வயது ஆகியிருக்க வேண்டும் என்பதே போதுமானது – எந்தப் பாலினம் என்பது அவரவர் விருப்பம் என்று சட்டம் இயற்றிய நாடு. அதாவது ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்வதை 17 ஆண்டுகளுக்கு முன்பே அனுமதித்த நாடு. மக்களுக்கான சமூக நலத் திட்டங்களிலும், அனைவருக்கும் இலவசக் கல்வி, மருத்துவம், முதியோர் நலன், சுற்றுச்சூழல் ஆகியவற்றில் முற்போக்காகச் சட்டங்களும், திட்டங்களும் கொண்ட நாடு. அந்த நாட்டில், நெருங்கிய உறவுகளுக்கிடையே திருமணத்தைத் தடை செய்து சட்டம் இயற்ற வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்பது குறித்துப் பலரும் விவாதித்துள்ளனர். அந்நாட்டில் பெருகிவரும் அயல்நாட்டவர் குடியேற்றங்கள், முற்போக்கான சுவீடனிலும் கூட வலதுசாரிகளின் எண்ணிக்கையை மெல்ல அதிகப்படுத்தியுள்ளது. வலதுசாரிக் கண்ணோட்டத்துடன் கருத்துருவாக்கங்கள் அதிகப்பட்டுள்ளன.

இது அந்த நாட்டில் சொந்தங்களுக்கிடையே திருமணத்தை அதிகப்படுத்தியுள்ளது. மணமக்களுக்கு அழுத்தம் கொடுத்தும், பாரம்பரியம், குடும்பப் பெருமை என்ற பெயரிலும் இத்தகைய நெருங்கிய உறவுத் திருமணங்கள் அதிகரித்திருப்பதை அந்த அரசு கவலையோடு நோக்கி இந்த முடிவை எடுத்துள்ளது. உண்மையில் சுவீடனில் இத்தகைய நெருங்கிய உறவுத் திருமணம் செய்யும் பண்பாடு எதுவும் இருந்ததில்லை. ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வரும் குடியேற்றங்கள் இத்தகைய புதிய போக்கைத் தோற்றுவித்திருப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. எனவே தான், அந்த நாட்டு நீதித்துறை அமைச்சர் குன்னர் ஸ்ட்ராம்மர் இச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்.

அது மட்டுமல்லாமல், கன்னிப் பரிசோதனை, கன்னிச் சான்றிதழ்கள் மற்றும் கன்னித்திரை சீரமைப்பு அறுவை சிகிச்சை ஆகியவற்றைக் குற்றமாக்கும் சட்டத்தையும் கடந்த ஆண்டே கொண்டுவந்துவிட்டது அந்த நாடு. கட்டாயத் திருமணம், குழந்தைத் திருமணம் குறித்துத் தெரிவிக்கத் தவறுவதையும் அச் சட்டம் குற்றமாக்குகிறது. ஆணவத்தின் (கவுரவத்தின்) அடிப்படையிலான வன்முறை பரவலாக உள்ள சமூகங்களில் வாழும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதே இதன் நோக்கம் என்று, அச் சிறுவர் சிறுமியர்களைப் பாதுகாப்பது தங்கள் கடமை என்றும் அவர் (குன்னர்) அப்போது தெரிவித்தார். நார்வேயும் இத்தகையதொரு சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது. வேல்ஸிலும், இங்கிலாந்திலும் இது குறித்து விவாதம் நடந்தாலும், இன்னும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல், இவற்றை அனுமதித்துக் கொண்டுதான் இருக்கிறது.

முற்போக்கான ஒரு சமூகத்திலேயே வலதுசாரிகளால் இத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தி, புதிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டிய தேவை ஏற்படுகிறதென்றால், காலம் காலமாகப் பழைமையில் ஊறித் திளைத்து, ஜாதி வெறி, ஆண்ட பரம்பரை, ஜாதி ரத்தம், குடும்பப் பெருமை, லவ் ஜிஹாத் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் இந்தியாவில் இத்தகைய சட்டங்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை உணர முடிகிறது. ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் உடனடியாக அவசியம். அதன் தொடர்ச்சியாக, இத்தகைய நெருங்கிய உறவுத் திருமணங்களைத் தடை செய்யும் சட்டங்கள் வர இன்னும் கொஞ்ச காலம் ஆகலாம். ஆனால், இந்த மடமைகள் மனித குலத்திற்கு ஆபத்தானவை என்பது இந்திய ஜாதிய சமூகத்திற்குப் புரிந்தே ஆக வேண்டும். அந்த வகையில் இதற்கு முன்னோடியாகத் திகழும் சுவீடன், நார்வே ஆகிய நாடுகள் பாராட்டுக்குரியன!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *