மேட்டூர் அணை திறக்கப்படாததால் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்படும்; டெல்டா விவசாயிகள் கவலை! ‘குறுவை சிறப்புத் தொகுப்பு’ ஏமாற்று வேலை என தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம்!

3 Min Read

சென்னை, ஜூன் 13–  காவிரி டெல்டா பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அணையின் நீர் இருப்பு மொத்த கொள்ளளவான 93.47 டி.எம்.சியில் பாதியளவு கூட இல்லாமல் (41.64 டி.எம்.சி) வறண்டு காணப்படுவதால் தண்ணீர் திறக்கப்படவில்லை. கருநாடக அரசும் உரிய தண்ணீரை வழங்காததால் குறுவை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தண்ணீர் திறக்காமல் அரசு அறிவித்துள்ள ‘குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம்’ விவசாயிகளை ஏமாற்றும் செயல் என்றும், விவசாயக் கடன் தள்ளுபடி வாக்குறுதியைப் போல இதுவும் ஒரு வஞ்சகமே என்றும் தமிழ்நாடு அரசுக்கு எதிராக திமுக மற்றும் எதிர்க்கட்சிகள் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன.

திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:

‘திராவிட மாடல்’ சாதனை

கடந்த அய்ந்து ஆண்டுகளில் இதே நாளில் டெல்டா விவசாயிகளுக்காக ஆறுகள், வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு, முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனால் வேளாண்துறையில் 9 சதவீத வளர்ச்சியும், குறுவை சாகுபடியில் சாதனை அளவும் எட்டப்பட்டது.

அலட்சியப் போக்கு

ஆனால், இன்று தண்ணீர் இல்லாமல் ஆறுகள் வறண்டு கிடக்கின்றன. தண்ணீருக்கு வழி செய்யாமல், வெறும் ‘குறுவை சிறப்பு தொகுப்பு’ அறிவிப்பது ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுவதைப் போன்றது.

கருநாடகப் பயணம் ஏன்?

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் படி 19 டி.எம்.சி தண்ணீரை கருநாடக காங்கிரஸ் அரசு தரவில்லை. தேர்தலுக்கு முன்பே தவெகவுடன் ரகசிய உறவில் இருந்த அதே காங்கிரஸ் அரசுடன் பேசி, முதலமைச்சர் ஜோசப் விஜய் காவிரித் தண்ணீரைக் கொண்டு வருவாரா? அல்லது சொந்த வேண்டுதலுக்காக மட்டும் சென்று விவசாயிகளின் வயிற்றில் அடிப்பாரா? என திமுக கேள்வி எழுப்பியுள்ளது.

திமுக விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“விவசாயக் கடன் தள்ளுபடி வாக்குறுதி அளித்து ஏமாற்றிய தவெகவினர், தற்போது அதை நிறைவேற்ற வக்கின்றி வெற்று அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். தனது ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற பயத்தில், மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கருநாடக காங்கிரஸ் அரசுக்கு எதிராக இந்த அரசு பேச மறுக்கிறது.”

மேலும், திமுக ஆட்சியில் 2 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டதையும், 42 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டதையும் சுட்டிக்காட்டிய அவர், மும்முனை மின்சாரம் மற்றும் குறுவை தொகுப்பு போன்ற வெற்று அறிக்கைகளை விடுத்து விளம்பரம் தேடுவதை நிறுத்த வேண்டும் என்றார். அண்டை மாநிலத்துடன் பேசி தண்ணீரைப் பெற அனைத்துக் கட்சி மற்றும் விவசாய அமைப்புகளின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பொய்க்கால் குதிரை அரசு

எதிர்க்கட்சிகள் கேள்வி!

முந்தைய அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போதைய அரசு அதனை 18 மணி நேரமாகக் குறைத்துள்ளது.

அறிவிக்கப்படாத மின் வெட்டால் மாநிலம் முழுவதும் மின்சாரம் இன்றி பம்பு செட்டுகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டு, நெற்பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன.

ரூ.10,000 கோடிக்கும் மேலாக இருக்கும் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யாமல், கடுகளவு கடனை மட்டும் தள்ளுபடி செய்ய அறிவித்துவிட்டு தற்போது ரூ.134 கோடிக்கு சிறப்புத் தொகுப்பு என மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து குறைவாக இருப்பது நேற்றுதான் தெரியுமா? ஆண்டுதோறும் நடக்கும் வழக்கமான நிகழ்வைக் கூட முன்கூட்டியே திட்டமிட முடியாத அளவிற்கு முதலமைச்சர் ரீல்ஸ் எடுப்பதில் பிஸியாகிவிட்டாரா?

வடிமுனைக் குழாய் பாசனம் சாத்தியமா?: மழைநீரும், அணை நீரும் இல்லாத சூழலில், தொடர் மின்வெட்டுக்கு இடையே வெறும் வடிமுனைக் குழாய்களை (Filter points) வைத்து லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பாசனம் செய்ய முடியும் என்று அரசு சொல்வது ‘கேப்பையில் நெய் வடியும் கதை’.

இழப்பீடு தேவை

எனவே, முறையான ஆய்வுக் குழுவை அமைத்து இப்பிரச் சினையை போர்க்கால அடிப் படையில் அணுக வேண்டும். அரசின் நிர்வாக அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட குறுவை விவசாயி களுக்கு ஏக்கர் வாரியாக தகுந்த இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும்.

குறைந்தது 3 லட்சம் முதல் 4 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்படுவதை உறுதி செய்ய, தடையற்ற மும்முனை மின்சாரத்தை அரசு தொடர்ந்து வழங்க வேண்டும். இதன் மூலமே உழவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க முடியும் என எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் அரசை வலியுறுத்தியுள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *