உச்சநீதிமன்றம் தீர்ப்பு
புதுடில்லி, ஜூன் 13 மத்தியப் பிரதேச மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அவசர மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மீனாட்சி நடராஜன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். எனினும், அய்தராபாத் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கு குறித்த விவரங்களை அவர் தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் மறைத்துவிட்டதாக பா.ஜ வேட்பாளர் மகேஷ் கேவத் மற்றும் பா.ஜ மாநிலப் பொதுச்செயலாளர் ராகுல் கோத்தாரி ஆகியோர் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில், கடந்த ஜூன் 9ஆம் தேதி மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரி சஞ்சய் சர்மா நிராகரித்தார். இதை எதிர்த்து காங்கிரஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது.
நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா மற்றும் ஏ.எஸ்.சந்துர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த மனு நேற்று (12.6.2026) அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களும் பின்வருமாறு அமைந்தன:
காங்கிரஸ் தரப்பு வாதம் (மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி): “தேர்தல் அதிகாரி தன்னிச்சையாகவும், தவறாகவும் செயல்பட்டு வேட்புமனுவை நிராகரித்துள்ளார். அய்தராபாத் நீதிமன்றத்தில் உள்ள தனிநபர் புகாரில் மீனாட்சி நடராஜனுக்கு எதிராக இன்னும் முறையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை. மக்கள் பிரதி நிதித்துவச் சட்டம் பிரிவு 33ஏ-இன்படி, 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கிடைக்கக்கூடிய வழக்குகளில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப் பட்டால் மட்டுமே அதை பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட வேண்டும். வெறும் நீதிமன்ற அறிவிக்கை நிலுவையில் உள்ளதைக் குற்றவியல் வழக்கு என்று கூற முடியாது.”
எதிர்மனுதாரர் தரப்பு வாதம் (மூத்த வழக்குரைஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் டி.எஸ்.நாயுடு): “அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 32-ன்கீழ் இந்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. தேர்தல் விதிமுறைப்படி, எந்தவொரு கட்டத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும், அது குறித்த முழு விவரங்களையும் வேட்பாளர்கள் பிரமாணப் பத்திரத்தில் வெளிப் படையாகத் தெரிவிக்க வேண்டியது அவர்களது கடமையாகும்.”
நீதிமன்றத்தின் தீர்ப்பு
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், காங்கிரஸ் தரப்பின் கோரிக்கையை நிராகரித்து மனுவைத் தள்ளுபடி செய்தனர். நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டதாவது:
அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 329(பி)-இன்படி, தேர்தல் செயல்முறைகள் தொடங்கப்பட்ட பிறகு, வேட்புமனு நிராகரிப்பு போன்ற விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிட அதிகாரம் இல்லை.
இந்த விவகாரத்தில் தலையிடுவது அரசியலமைப்பே வழங்காத ஒரு விதி விலக்கைப் புகுத்துவதற்குச் சமமாகும்.
வேட்புமனு நிராகரிப்பை எதிர்ப்ப வர்கள், ‘தேர்தல் வழக்கு’ என்ற சட்டப் பூர்வமான தீர்வு மூலமே அணுக வேண் டும்.
“இது ஒரு சீட் திருட்டு’ –
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மீனாட்சி நடராஜன், “இதில் ஒரு சீட் திருட்டு நடந்துள்ளது என்பது அனைவருக்கும் மிக தெளிவாகத் தெரிகிறது. இது எனது தனிப்பட்ட தோல்வி பற்றிய கேள்வி அல்ல, மாறாக ஜனநாயகம் மீண்டும் மீண்டும் சந்தித்து வரும் அதிர்ச்சிகளே அதிக கவலையளிக்கிறது” என்று குற்றம் சாட்டினார்.
