வகுப்பறை என்பது பாடங்களை மட்டுமல்ல, வாழ்க்கையையும் கற்பிப்பதே!

4 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

‘ஸ்வயம்’ போன்ற இணையவழித் தளங்கள் மூலம் தங்கள் கல்விக்கான மதிப்பீட்டு அலகுகளின் (Credits) ஒரு பகுதியை மாணவர்கள் பெறலாம் என்று  டில்லி பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு அப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கங்களுள் ஒன்றான ‘செயல்பாடு மற்றும் மேம்பாட்டிற்கான கல்வியாளர் ஆசிரியர் சங்கம் (AADTA)’  கண்டனம் தெரிவித்துள்ளது;

தேசியக் கல்விக் கொள்கை 2020-இன் அடிப்படையில் டில்லி பல்கலைக்கழகம் ஜூன் 1 அன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு, மாணவர்கள் தங்கள் பாடத்திட்டத்திற்கான கிரெடிட்களில் 5 சதவீதம் வரை ஸ்வயம், பிற அங்கீகரிக்கப்பட்ட இணையவழிக் கற்றல் தளங்கள் மூலம் பெற அனுமதிக்கிறது. அதன்படி, நான்கு ஆண்டு இளங்கலைப் பாடத்திட்டத்தில் சேர்ந்துள்ள மாணவர்கள், அங்கீகரிக்கப்பட்ட இணையவழிப் பாடநெறிகள் மூலம் 8 கிரெடிட்கள் வரை பெற முடியும்.  இவை நேரடிப் பாடங்கள் அல்லாத ‘மதிப்புக் கூட்டுப் பாடங்கள்’ (VACs) ஆகவும், ‘திறன் மேம்பாட்டுப் பாடங்கள்’ (SECs) ஆகவும் இருக்கலாம். இவை இரண்டுமே நேரடியாக ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வருபவை. “மாணவர்கள் இணையவழி மாற்று வழிகளை அதிகளவில் தேர்ந்தெடுத்தால், இப்பாடநெறிகளுக்கான வகுப்பறை நேரங்கள் குறையக்கூடும்; இது ஆசிரியர்களின் பணி நேரத்தையும், பணியிடங்களுக்கான தேவையையும் பாதிக்க வாய்ப்புள்ளது,” என்று அச் சங்கம் கூறுகிறது. ஆனால், இது ஆசிரியர்களின் பணியிடம் தொடர்புடைய பிரச்சினை மட்டுமல்ல.

‘இனி வரும் உலகம்’ கண்ட தந்தை பெரியார், இத்தகைய காணொலிக் காட்சிகள் மூலம் பாடம் கற்பிக்கும் சூழல் வருங்காலத்தில் வரும் என்பதை 83 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்துரைத்துள்ளார். கல்வியில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது. தேவையான அளவுக்கு அவை பயன்படுத்தப்பட்டே ஆக வேண்டும். ‘கோவிட்’ போன்ற காலங்களில் இவற்றின் பயன் அதிகம் இருந்ததையும் நாம் மறுக்க முடியாது.

ஆனால், ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசால் கொண்டு வரப்பட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கைக்குத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கற்பிப்பதல்ல நோக்கம்!  மாறாக, வகுப்பறைகளை ஒழிப்பதிலேயே கவனம். கல்வி வளாகங்களையும், வகுப்பறைக் கல்வியையும் படிப்படியாகக் குறைப்பதன் மூலம், அதன் முக்கியத்துவத்தை ஒழித்து, மாணவர்கள் ஓரிடத்தில் கூடிப் படித்து, உரையாடி, சமூக – ஜனநாயக விழுமியங்களை அறிவதைத் தடுப்பதும், இணையம் வழியாகக் கல்வி வழங்குவதன் மூலம் அதை முழுக்க வணிகத்திற்கான வாய்ப்பாக உருவாக்குவதுமே பாசிச, கார்ப்பரேட் நலன் அரசாகவே செயல்படும் பா.ஜ.க.வின் நோக்கங்கள்!

இதற்கு முன்னோட்டமாகவே பள்ளிக் கல்வியை விடுத்து தனியார் பயிற்சி மய்யங்களுக்கு (Coaching Centers) முக்கியத்துவம் தரும் வகையில் நீட், கியூட் தேர்வுகளைத் திணித்தனர். குருகுலக் கல்வியையே பள்ளியாகக் கருதலாம் என்று சலுகை தந்தனர்.

கல்விக்கான அரசின் செலவுகளைக் (சமூக முதலீடுகளை) குறைத்து முழுக்க தனியார் மயத்திற்குத் தள்ளிவிட்டுவிடலாம். பணமிருப்பவன், வசதியிருப்பவன் படிக்கலாம் – அடித்தட்டு மக்கள் மேலும் அடித்தட்டிலேயே அமிழ்ந்து போகலாம்!

உளவியல் ரீதியாக இது மேலும் ஒரு முக்கியத் தாக்குதல்! கல்விக் கூடத்திற்கு வந்து பாடம் படித்தல் என்பது கல்வி மீது ஆர்வம் கொண்டவர்கள், ஆர்வம் இல்லாதவர்கள் என இரு தரப்பையும் ஓரிடத்தில் வைப்பதன் மூலம், சக வயதினரிடையே நேர்மறையான ஒரு நெருக்குதலை (Positive Peer Pressure) உருவாக்கும். ‘கல்வி கற்றே ஆக வேண்டும், அதற்கான நேரம் இது’ என்ற கட்டாயம் கவனச் சிதறலைத் தடுக்கும்.

வீட்டிலிருந்து கற்கிறாரா இல்லையா என்பதைப் பெற்றோரால் உறுதி செய்ய முடியாது. படிப்படியாகக் கல்வியின் மீதான ஈர்ப்பு மாணவர்களுக்குக் குறையும். வீட்டில் இருக்கும் வேலையையோ, பகுதி நேர வேலையையோ செய்வதென்று தொடங்கினால், அது பழைய குலக்கல்வித் திட்டம் போன்று, தொழிலாளர்களை உருவாக்கப் பயன்படுமே அல்லாமல், ஒரு போதும் கற்றவர்களாக மாணவர்களை உருவாக்காது. பல்கலைக்கழகத்தில் தொடங்கி, படிப்படியாக இதனைப் பள்ளிகள் வரை கொண்டுவரவே தேசியக் கல்விக் கொள்கை திட்டமிடுகிறது. பள்ளிகள் ‘வொர்க் ஃபிரம் ேஹாம்’ ஆக இயங்க முடியாது.

ஆசிரியர்களின் நேரடிக் கண்காணிப்பில் மாணவர்கள் ஒவ்வொருவர் குறித்தும் அறிந்து, பெற்றோருக்கு அறியத் தர முடியும். சமூகத்தில் எப்படி பழகுவது என்ற அடிப்படை மனிதப் பண்பு வளரும். ஏற்கெனவே, தனிக் குடும்பங்கள், ஒரு குழந்தை, அடுக்கக வாழ்க்கை, தனித் தீவுகளாக்கும் கைப்பேசிகள், இணைய வழி (ஆன்லைன்) விளையாட்டுகள் போன்ற பல காரணங்களால் பிற குழந்தைகளோடும், மனிதர்களோடும் பழவதற்கு வாய்ப்பற்றுப் போய்விட்ட சமூகச் சூழலில், கல்விக் கூடங்களே மனிதர்களை உருவாக்கும், நெறிப்படுத்தும். அவற்றையும் இல்லாமல் ஆக்குவது ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதாக அமையாது.

உளவியல் நெருக்கடிகளும், தனிமையும் இன்றைய இளைஞர்களின் பெரும் பிரச்சினை. இவற்றையெல்லாம் குறித்து ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வுக்கு அக்கறையே கிடையாது. கல்வித் துறையில் இவர்கள் சாதித்தவற்றுக்கு சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகளும், நீட் தேர்வு மோசடிகளுமே சான்றாக இருக்கும்போது, இதில் மட்டும் அக்கறையா இருக்க முடியும்?

ஆசிரியர்-மாணவர் இடையிலான தொடர்பு, வகுப்பறை விவாதங்கள், வழிகாட்டுதல், வளாகம் சார்ந்த கற்றல் ஆகியவை உயர்கல்விக் கூடங்கள் வாயிலாகப் பெறும் நன்மைகள். அவற்றை இணையவழிக் கல்வி மூலம் முழுமையாக ஈடுசெய்ய முடியாது. உயர்கல்வியை வெறும் கல்விசார் கிரெடிட்களாகவும், மதிப்பெண் அலகுகளைப் பெறும் செயல்முறையாகவும் மட்டும் பார்க்கக்கூடாது; மாறாக, அது அறிவுசார் ஈடுபாடாகவும், கல்விச் சமூகத்தை உருவாக்கும் ஒரு களமாகவும் இருக்க வேண்டும். அந்த வாய்ப்புகளைப் பறிக்கும் எதையும் சமூகநீதியாளர்கள், கல்வியாளர்கள் ஏற்கக் கூடாது!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *