உயரத்தில் அமர்ந்திருப்பதாலேயே தாங்கள் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் என்கின்ற எண்ணங்களை நீதியர்களில் பலர் பெற்றுவிடுகின்றனர். ஆங்கில ஆட்சிக் காலத்தின் மனநிலை விடுதலை அடைந்து 80 ஆண்டுகளைத் தொட்டும் நீங்கவில்லை என்பது வியப்புதான்.
அரசு அலுவலர்களை
அழைக்கும் போக்கு
இந்த நிலையில், அரசு அலுவலர்களை மட்டுமல்லாது உயர் பொறுப்பில் இருக்கும் உயர் அலுவலர்களையும் நீதிமன்றத்திற்கு அழைத்து இழிவுபடுத்துவதை நீதிமன்றங்கள் அண்மைக் காலங்களில் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றன. வழக்குரைஞர்கள் வழியாக விளக்கங்களைக் கேட்காமல், குறிப்பிட்ட அலுவலர்களையே வழக்கு மன்றத்திற்கு வரவழைத்து அவர்களை வினாக்களில் துளைத்தெடுப்பது வழக்கமான நடைமுறையாகிவிட்டது.
தனிமனித உரிமைகள் மீறப்படுகின்றபொழுது அல்லது நீதிமன்ற ஆணைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படும்போது உயர் அலுவலர்களை நீதிமன்றத்திற்கு அழைப்பது தவறில்லைதான்.
ஆனால், எளிதில் விவரங்களைப் பெறக்கூடிய வழக்குகளில்கூட உயர் அலுவலர்களை மட்டுமல்லாது, பிற அலுவலர்களையும் நீதிமன்றத்திற்கு அழைப்பது ஏனென்று தெரியவில்லை.
தெரு நாய்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களைத் தரவில்லை என்பதற்காக மாநிலத் தலைமைச் செயலாளர்கள் பலரை நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு அண்மையில் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. காணொலி வாயிலாக விளக்கம் தருவதற்கு மறுப்பு தெரிவித்ததால், பல மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் பெரும் பொருட்செலவில் டில்லிக்குப் பறந்து தங்கள் விளக்கங்களை அளித்தனர். அவர்களது ஒரு நாள் பணி ஆக்கமின்றிக் கழிந்தது. அதற்கும் மேலாக, அவர்களிடம் மன்னிப்பையும் உச்ச நீதிமன்றம் கேட்டுப் பெற்றுக்கொண்டது. இது ஓர் எடுத்துக்காட்டுதான்.
உயர்நீதிமன்றங்களும் இத்தகைய போக்கையே கடைப்பிடிக்கின்றன. திருப்பரங்குன்ற மலையில் விளக்கேற்றுவது தொடர்பான வழக்கில், மாலைக்குள் நிறைவேற்ற வேண்டுமெனக் காலையில் ஆணையிட்டார் நீதியர் ஜி.ஆர். சுவாமிநாதன். தனது ஆணையினை ஏன் நிறைவேற்றவில்லை என்பதை நேரில் தோன்றி விளக்கமளிக்குமாறு மாவட்ட ஆட்சியர், நகரக் காவல் ஆணையர் ஆகியோருக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது.
கோயில் நடைமுறைகள், பல்லாண்டு கால வழக்கங்கள், சட்டம் ஒழுங்குச் சிக்கல் போன்றவற்றை மாவட்ட ஆட்சியர் அல்லது காவல் ஆணையர் முடிவுசெய்துவிட முடியாது. கோயில் குழுவினர், மாநில அரசு போன்றவையே இவற்றில் முடிவெடுக்க முடியும். அவர்களது எண்ணங்களையும் வழிகாட்டுதல்களையும் பெறாமல் மாவட்ட ஆட்சியர் அல்லது நகர ஆணையர் செயல்பட முடியும் என்று நீதியர் சுவாமிநாதன் நம்புகிறாரா என்பது தெரியவில்லை.
நீதிமன்றத்துக்கு அழைத்துச் சிறைப்படுத்துதல்
இந்த நோய் தற்போது மாவட்ட நீதிமன்றங்களுக்கும் பரவிவருகிறது. காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதியராக இருந்த செம்மல் என்பவர், ஒரு வழக்கில் போதுமான நடவடிக்கையை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி மாவட்டத் துணைக் காவல் கண்காணிப்பாளரைச் சிறைப்படுத்தினார். நீதிமன்ற ஆணையை அவர் செயல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுகூட அப்போது எழவில்லை. நீதிமன்ற ஆணை எதுவும் அப்போது இருக்கவுமில்லை. காவலரின் அன்றாடப் பணிகளை அல்லது வழக்கமான பணிகளை அவர் செய்யவில்லை என்றாலும், அதனை மேற்பார்வையிட மேல்நிலை காவல் அலுவலர்கள் உள்ளனர். அத்துடன், வழக்கில் நடவடிக்கை எடுக்கும் பணி காவல் நிலைய ஆய்வாளரைச் சார்ந்தது. இது நேரடியாகத் துணைக் காவல் கண்காணிப்பாளரின் உடனடிப் பொறுப்பும் இல்லை.
தனிப்பட்ட வாழ்வின் நிகழ்வுகளால் அத்து மீறியதால், உயர் நீதிமன்றமே இதில் தலையிட்டு அந்த நீதியரைப் பணியிடைநீக்கம் செய்யும் நிலை ஏற்பட்டது.
நீதியர் சுவாமிநாதனின் அத்து மீறல்
அண்மையில் சென்னை உயர்நீதிமன்ற விடுமுறைக் கால அமர்வில் நீதியர்களாக இருந்த ஜி. ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் ஆகியோரது ஆணையும் செயல்பாடுகளும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன என்றுதான் கூறவேண்டும்.
தனியார் கட்டுமான நிறுவனரான சந்தோசு சர்மா என்பவர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை நீக்கவேண்டிய ஆள்கொணர்வு வழக்கு அது.
தே.மு.தி.க. பொருளாளர் சதீசு மற்றும் அவரது துணைவியரது நிலத்தில் 234 வீடுகளைக் கட்டி, 78 வீடுகளை நில உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டு மென்பது உடன்பாடு. ஆனால், பொய்க் கையெழுத்திட்டு சந்தோசு சர்மா ரூ. 43 கோடிக்கு விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டதாகக் காவலரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதில் சந்தோசு சர்மா குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். குண்டர் தடுப்புச் சட்டத்தில் தளைப்படுத்தியது தவறு என்றால் அதை நீக்குவதோடு வழக்கினை நீதியர் சுவாமிநாதன் அமர்வு முடித்திருக்கலாம். ஆனால், தளைப்படுத்திய அப்போதைய சென்னை மாநகரக் காவல் ஆணையராகவும் தற்போது கையூட்டு (லஞ்ச) ஒழிப்புப் பிரிவு இயக்குநராகவும் துணைக் காவல் தலைவர் (ஏ.டி.ஜி.பி.) நிலையில் உள்ள அருண் நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டார். விளக்கம் பெறவே அழைத்ததாக உயர் நீதிமன்றம் கூறியது. தொடர்பான ஆவணங்கள் யாவும் நீதிமன்றக் கோப்புகளில் இருந்தன.
நேரில் வந்த அருணை உடனடியாக விளக்கங்களைக் கேட்டு அனுப்பவில்லை. அவருக்கான அழைப்பாணையை நேரில் கொடுக்க வந்த நீதிமன்ற ஊழியரை இரண்டு மணிக் கால அளவு காக்கவைத்ததாகக் கூறி, அருண் உதவியாளரையும் நேரில் வருமாறு நீதியர்கள் ஆணை யிட்டனர். அத்துடன் நில்லாமல், அவர் வரும்வரை அருண் நீதிமன்றத்தில் காத்திருக்கவேண்டுமென்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
உயர் அலுவலர்களோடு கலந்தாய்வுக் கூட்டத்தில் இருந்ததால் அவரிடம் மட்டுமே வழங்கப்படவேண்டிய அழைப்பாணையைப் பெறுவதற்கு இரண்டு மணிக் கால அளவு காத்திருக்கவேண்டியிருந்தது என்பதையும் நீதியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இரண்டு மணி அளவுக் காத்திருப்பு என்பது அரசு அலுவலகத்தில் மிகைப்படுத்தக்கூடியதல்ல என்பதையும் நீதியர்கள் கணக்கில் கொள்ளவில்லை.
குற்றம் சாட்டப்பட்ட சந்தோசு சர்மா தொடர்ந்து பொய்க் கையெழுத்திட்டு விற்பனைகள் செய்ததாலும், ஓர் இல்லத்தையே பலருக்கும் விற்றதாலும் ஏற்பட்ட நிலைமைகளை ஆய்ந்துதான் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது என்ற விளக்கத்தைக் கூறியும் நீதியர்கள் ஏற்கவில்லை. அரசு அலுவலர்களின் சில செயல்பாடுகள் நீதிமன்றத் தீர்ப்புப் போலவே கருதத் தக்கன. இதில் காவலர் அல்லது அரசு எடுத்த முடிவு தவறாகத் தோன்றவில்லை.
பெருங்குற்றங்கள் செய்துவிட்டு நீதிமன்றத்தின் தலையீட்டால் பிணையில் வெளிவரும் கடுங்குற்ற வாளிகளைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஓராண்டுக்கு உள்ளே அடைப்பது என்பது கடந்த பல ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்படும் நடைமுறையாக உள்ளது. வேறு பல மாநிலங்களிலும் இத்தகைய முறை பின்பற்றப்படுகிறது. வெவ்வேறு கட்சிகளின் ஆட்சிகளிலும் இந்த நடைமுறை தொடர்கிறது. ஏதோ அருண் மட்டுமே இதைச் செய்தது போல் நீதியர் சுவாமிநாதன் தலைமையிலான அமர்வு கருத்துக் கூறிருப்பது உண்மைகளுக்கு மாறானதாகவே தோன்றுகிறது. குண்டர் தடுப்புச் சட்டத்தில் தளைப்படுத்தப்படும் குற்றவாளிகளை எளிதில் விடுதலை செய்யும் நீதிமன்றங்கள், அரசியல் சார்புடையோரை விடுவிக்க முன்வருவதில்லை என்பதையும் மக்கள் அறியாமலில்லை.
நீதியர்களது தீர்ப்பு எதுவாக இருந்தாலும், அருணை அழைக்காமலேயே அவர்கள் ஆணை பிறப்பித்திருக்க முடியும். அரசு அல்லது காவல் உயர் அலுவலர்களை நேரில் அழைத்து அதில் பெருமையும் மகிழ்வும் காணும் உணர்வுதான் மேலோங்கியிருப்பதாகத் தெரிகிறது.
காவல் அலுவலர் வெளிப்படுத்திய துணிவு
அந்த உயர் அலுவலரான அருண் தன்னுடைய 28 ஆண்டுக் காலப் பணியில் எந்தவொரு சிறு குறையும் குற்றச்சாட்டும் காணாமல் செயல்பட்டிருப்பதாகவும் தனது பதிவேடுகள் அவற்றைத் தெரிவிப்பதாகவும் நீதியர்களிடம் பேசியிருப்பது, உண்மையிலேயே துணிவுள்ள நேர்மை யான ஒரு மனிதரின் வெளிப்படையான குரலாகவே ஒலித்திருக்கிறது.
அந்த நிலையிலும், லஞ்ச ஒழிப்புப் பிரிவில் முன்னர் இயக்குநர்களாக இருந்த குறிப்பிட்ட உயர் வகுப்பைச் சார்ந்த இரண்டு உயர் காவல் அலுவலர்களான சி.வி. நரசிம்மன், சி.எல். ராமகிருட்டிணன் ஆகியோரது பெய ரைக் குறிப்பிட்டு, அவர்களிருந்த இடத்தில் இவர் இருக்கிறார் என்று கூறுவதற்கு நீதிமன்றத்திற்கு எந்த உரிமையுமில்லை, தகுதியுமில்லை. இதனைத் தரம் தாழ்ந்த செயலாகவே காணவேண்டும். உயர் அலுவலர் ஒருவரைப் பிறருடன் ஒப்பிடுவது நீதிமன்றத்தின் பணியும் பொறுப்புமல்ல.
மேலும், அருண் தொடர்பான தனிப்பட்ட வழக்காக இது இல்லாது, ஆள்கொணர்வு வழக்காக இருப்பதால், அரண் பற்றித் தனிப்பட்ட முறையில் கூறுகின்ற உரிமையும் கட மையும் தகுதியும் நேர்மையும் நீதிமன்றத்திற்கு, குறிப்பாக நீதியர் சுவாமிநாதனுக்கு இல்லவேயில்லை.
தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்த சந்தோசு சர்மா என்ற ஒரு தனி மனிதனின் வாழ்வுரிமையைக் காப்பதாகக் கூறும் இந்த நீதியர்கள், நேர்மையான உயர் அலுவலர் ஒருவரைச் சில மணிக் கால அளவு நீதிமன்றத்திலேயே காத்திருக்கச் செய்தது அவரை நீதிமன்றக் காவலில் வைத்ததற்கு ஒப்பானதாகும். இங்கு அந்த அருண் என்ற அரசு அலுவலரின் நிலையினைக் கேட்காமலேயே அவரது வாழ்வுரிமையை, நீதிமன்றம் ஒருதலையாகப் பறித்துத் தண்டம் வழங்கிவிட்டது என்றுதான் கருதவேண்டியுள்ளது. ஒருவேளை சந்தோசு சர்மா என்ற பெயர் முன்னின்றிருக்கலாம்.
நீதியர் சுவாமிநாதன் வழங்கிய பல தீர்ப்புகள் மேல்முறையீட்டில் மாற்றப்பட்டுள்ளன. திருப்பரங்குன்றம் தொடர்பான வழக்கில் அவர் வழங்கிய தீர்ப்புகள் தடை செய்யப்பட்டிருந்தாலும் தனக்கு நீதிமன்றம் மதிப்பிழிவு தொடர்பான வழக்கை நடத்தத் தடையில்லை என்று தொடர்ந்து கூறிக்கொண்டிருந்தவர்தான் இந்த நீதியர். பின்னர் மேல்முறையீட்டில் அவரது அனைத்து ஆணை களும் தடுத்துநிறுத்தப்பட்டன.
மதுரையில் நடத்தவேண்டிய துணைவேந்தர் வாழ்க்கைச் சென்னை விடுமுறை அமர்வில் விதி களுக்கு மாறாக நடத்தித் தந்த தடையாணை உச்ச நீதிமன்றத்தால் தடுக்கப்பட்டது. இவற்றுக்காக நீதியர் சுவாமிநாதனை நேரில் வந்து விளக்கம் தருமாறு மேல் முறையீடுகளிலிருந்த நீதியர்கள் அழைக்க
வில்லை. வழக்குரைஞர்கள் வழியாக விவரங்களைக் கேட்டுத் தடையாணைகளைப் பிறப்பித்தனர்.
பொதுவாக வழக்குரைஞர்கள் இல்லாமல் வழக்காடு வோர் தாங்களாகவே நீதிமன்றத்தில் தோன்றுவதை நீதியர்கள் ஏற்பதில்லை. ஆனால், அரசு வழக்குரைஞர்கள் இருக்கும்போது, அரசின் உயர் அலுவலர்களை நேரில் அழைப்பதை அத்துமீறல் என்றுதான் கூறவேண்டும்.
அரசின் செயல்பாடுகளில் உள்ள தவறுகளை நீக்கவே நீதிமன்றங்கள் உள்ளன. இத்தகைய கடமைகளை எவரும் மறுக்கவில்லை. ஆனால், சில அத்துமீறல்களையும் நீதியர்கள் தவிர்க்கவேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின்
முடிவுகள்
உயர் அலுவலர்களின் பெயரில் வெளியிடப்பட்டாலும், பெரும்பாலான இன்றியமையா முடிவுகள் தேர்ந்தெ டுக்கப்பட்ட அரசின் கண்ணோட்டம், கொள்கை, கோட்பாடு, நோக்கம், எதிர்பார்ப்பு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்படுகின்றன. அரசு எடுக்கும் பல முடிவுகள், நிலைபெற்றுள்ள ஓர் அமைப்பின் வழிப்பட்டது. இவற்றை மீறும் உரிமை அலுவலர்களுக்கு இல்லை என்பதுதான் அரசாட்சி நடைமுறையாகும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் போன்றோரை நீதிமன்றத்திற்கு நேரில் அழைப்பது அரசியலாகி, முட்டல்களில் முடிந்துவிடும் என்பதற்காக, அரசின் மீதான பழியை அலுவலர்கள் மேல் திருப்பி நீதிமன்றங்கள் தப்பிக்க முயல்கின்றன. பழி ஓரிடம் பகை ஓரிடம் என்பது போல, அலுவலர்கள் நீதிமன்ற வாயிலில் நிற்க வேண்டியதாகிறது.
பொறுப்பில் உள்ள அரசு அலுவலர்களும் தவறு களில் ஈடுபடலாம். அவர்களில் பலர் அரசுக்கு உடந்தை யாக உள்ளனர் என்பதையும் மறுப்பதற்கில்லை. அலுவலர்களைக் கட்டுப்படுத்தும் ஆட்சியாளர்களையும், ஆட்சியாளர்களுக்குக் கட்டுப்பட்டுத் துணையாகும் அலுவலர்களையும் குற்றக்கூண்டில் நிறுத்துவதற்கு வேறு பல வழிகள் இருக்கின்றன.
இவ்வாறான உண்மைகளைப் புறக்கணித்துவிட்டு, அனைத்துக்கும் அலுவலர்களை மட்டும் பொறுப்பாக்குவது பொருத்தமாகாது. ஆட்சியாளர்களைத் தட்டிக் கேட்க அஞ்சுவதால்தான் அலுவலர்களைக் கண்டிக்கும் நிலை பெரிதும் ஏற்படுகிறது.
அரசு அலுவலகங்களில் மக்களைக் காக்கவைப்பது பெரும் தவறு. அதே போன்று, நீதிமன்றங்களுக்கு அழைத்து உயர் அலுவலர்களைக் காக்கவைப்பதும் தவறுதான். நீதிமன்றத்தின் உயர் இடத்தில் அமர்ந்திருப்பதால் மட்டுமே நீதியர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்னும் உரிமை அவர்களுக்கு வழங்கப்படவில்லை. வழக்குக்கு அப்பால் அவர்கள் கூறும் ஒவ்வொரு சொல்லும் ஊடகங்களில் பதிவாகின்றன என்பதை அவர்கள் மறந்துவிடுகின்றனர்.
அண்மையில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி வேலையில்லாதோரைக் குறிப்பிட்ட சொற்கள் நாடெங்கிலும் பெருத்த எதிர்ப்புகளை ஏற்படுத்தின. அந்த எதிர்ப்புகள் பெரும் புரட்சியாகவே வெடித்து வருவதைக் காணலாம்.
கோடிக் கணக்கில் பல்லாண்டுகளாகத் தேங்கிக் கிடக்கும் வழக்குகளுக்குத் தீர்வு காண்பதில் நீதியர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்வதே அவர்களது முழுமுதற் கடமையாகும்.
நீதிமன்றங்களுக்கு வெளியே என்ன நடக்கிறது என்பதையும் இந்த நீதியர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.
நன்றி: ‘ஜனசக்தி’, 07.06.2026
