புதுச்சேரி, ஜூன் 8- பிஎம் சிறீ, மும்மொழிக் கொள்கை, உயர்கல்வி ஒரே ஆணையத்தை கண்டித்து சென்னை ஆளுநர் மாளிகை முன் 23ஆம் தேதி திமுக மாணவரணி அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று செயலாளர் வீரமணி தெரிவித்து உள்ளார்.
திமுக மாணவரணி செயலாளர் வீரமணி புதுச்சேரியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாஜக அரசின் கல்விக் கொள்கைகளுக்கு எதிராக திமுக மாணவர் அணி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
தமிழ்நாட்டின் கல்வி உரிமைகளுக்கு முட்டுக்கட்டை போடுவதற்கான முயற்சிகளை பாஜக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
திமுக ஆட்சிக் காலத்தில் கல்வியை அடமானம் வைக்கும் எந்தத் திட்டத்தையும் ஏற்க மாட்டோம் என்று மு.க.ஸ்டாலின் உறுதியாக தெரிவித்திருந்தார்.
ஆனால் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் பி.எம். சிறீ திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதற்கான முயற்சிகளை ஒன்றிய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாளே இதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.
ஆனால் தமிழக வெற்றிக் கழகம் இதுகுறித்து இதுவரை தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை.
பிஎம் சிறீ திட்டம், மும்மொழிக் கொள்கை மற்றும் விபிஎஸ்ஏ (உயர்கல்விக்கு ஒரே ஆணையம்) மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜூன் 23ஆம் தேதி சென்னை ஆளுநர் மாளிகை முன்பு திமுக மாணவர் அணி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
