சென்னை,ஜூன் 8- மின்வெட்டு பிரச் சினையால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளா கின்றனர். இரவு நேரத்தில் தூக்கத்தை தொலைத்து வீதிகளில் இறங்கி மக்கள் போராடி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த மே மாத இறுதியில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. பகல் நேரங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
மேலும், இரவு நேரங்களிலும் வெப்பத்தின் தாக்கம் காணப்பட்டது. இதனிடையே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் நீண்ட நேரம் மின்சாரம் தடை பட்டது.
இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பொதுமக்கள் சாலைகளில் இறங்கி போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து, சில நாட்கள் மின்வெட்டு பிரச்சினை ஏற்படாமல் இருந்தது.
ஆனால், கடந்த சில நாட்களாக மீண்டும், நள்ளிரவு நேரங்களில் ஏற்படும் மின்வெட்டு காரணமாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மருத்துவப் பயனாளிகள் தூக்கமின்றி தவித்து வருகின்றனர்.
மின்தடை குறித்துப் பொதுமக்கள் மின்வாரிய அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்க முயன்றால், முறையான பதில்கள் அதிகாரிகளிடம் இருந்து கிடைப்பதில்லை என்றும், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப் படுவதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மக்கள் போராட்டம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்வெட்டு பிரச்சினை தீவிரமாக உள்ளது. ஒருசில இடங்களில் பல மணி நேரம் மின் வெட்டு ஏற்படுகிறது. வியாசர்பாடி பகுதியில் நேற்றுமுன்தினம் (6.6.2026) மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலாங்கரை பகுதியிலும் நேற்று முன்தினம் (6.6.2026) மின்வெட்டு ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முட்டுக்காடு பகுதியில் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் விஜயராஜிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சட்டமன்ற உறுப்பினர் சமாதானம் செய்ய முயன்றார்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளை யம் அடுத்த ஆரணியிலும் மின்வெட்டு கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: பெரம்பூர் தொகுதியில் தாழ்வழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட பழுது காரணமாக மின்தடை ஏற்பட்டது.
உடனடியாக, மாற்று கம்பிகளை பொறுத்தி அந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டோம். இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட வெப்பமும், அதிக சுமையும் முக்கிய காரணிக ளாக உள்ளன.
மின்விநியோக கட்டமைப்பில் இருக்கும் கருவிகளில் அதிக வெப்பம் ஏற்படும் போது அவை பழுதடைகின்றன.
மின்னகம்
சேவை மய்யம்
இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படும் போது மக்கள் கோபமடை வது நியாயம் தான். இருந்தாலும் உடனடியாக அந்த பகுதியின் உதவி பொறியாளரை தொடர்ந்து அழைத்து அவர்களிடம் கேட்பது, சீரமைப்பு பணிகளை பாதிக்கிறது.
மக்கள் மின்னகம் சேவை மய்யத்தை 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்தாலே போது மானது.
மக்கள் அளிக்கும் புகார் எங்கள் பொறி யாளர்களுக்கு தெரிந்து விடும், பிரச்சினை சரி செய்யப்பட்டதை மக்களும் உறுதி செய்து கொள்ள முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
