பெரியார் பன்னாட்டமைப்பு (அமெரிக்கா) நடத்திய
‘திராவிடப் பொழில்’ இதழின் இணைய வழி ஆய்வரங்கம்
பெரியார் பன்னாட்டமைப்பு,அமெரிக்கா சார்பாகத் ‘திராவிடப் பொழில்’ (ஏப்ரல்-ஜூன் 2025) இதழின் இணைய வழி ஆய்வரங்கம், கடந்த மே 17, 2026 அன்று மாலை 7.30 மணிக்கு (தமிழ் நாட்டு நேரம்) நடைபெற்றது.
‘திராவிடப் பொழில்’ இதழின் பணி!
நிகழ்வினைத் தொடங்கி வைத்து மருத்துவர் சோம.இளங்கோவன் உரையாற்றினார். அவர் தனது உரையில்,
“அருமைத் தமிழ் நெஞ்சங்களே, உலகெங்கும் வாழும் திராவிடப் பற்றாளர்களே, உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம். இன்று ‘திராவிடப் பொழில்’ என்ற அரசியல் சார்பற்ற, திராவிடப் பண்பாட்டை, கோட்பாடுகளை விளக்கும் ஆராய்ச்சிப் பதிப்பாக மூன்று மாதத்திற்கு ஒருமுறை வரும் ஏடாக நான்காண்டுகளாக நடத்தி வருகின்றார்கள் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தினர் (நிகர்நிலை). இது அரசியல் சார்பற்றது. திராவிடச் சித்தாந்தத்தை, பண்பாட்டு அடிப்படையை விளக்கும் ஆராய்ச்சி மதிப்பீடுகள், இதில் பலர் பலவிதமான கட்டுரைகளை எழுதி இருக்கிறார்கள். நாங்கள் ஒவ்வொரு இதழில் இருந்தும் இரண்டு கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து அதை ஆராய்ந்து எழுதியவர்கள், அவர்களுடைய கருத்துகளைச் சொல்லுமாறு வேண்டிக் கொண்டு இந்த நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.
இதன் தேவை என்னவென்றால் இன்று திராவிடம் என்றால் என்னவென்று புரியாதவர்கள் பலர் இருக்கிறார்கள். திராவிடக் கோட்பாடுகளை அறியாதவர்கள் இருக்கிறார்கள். இந்தியா என்றால் அவர்கள் ‘கீதை’ என்பதைச் சொல்கிறார்களே தவிர, ‘திருக்குறளை’ யாரும் சொல்வதில்லை. ‘கீதை’ ஒரு கொலைகார நூல். ஒருவன் தன்னுடைய உறவினர்களைக் கொல்ல மறுக்கின்றான். போர் நடக்கின்ற இடத்திலே, அவன் ஏன் கொலை செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு பெரிய நூல். அதில் ஆயிரம் கருத்துகள் உள்ளன என்றும், அதனை ‘உலகிலே பெரிய இந்தியப் பண்பாடு’ என்று சொல்லி பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உலகெங்கும் வாழும் அனைவருக்கும் பொதுவான திருக்குறளை எடுத்துச் சொல்ல மறுக்கிறார்கள். திராவிடப் பண்பாட்டை எடுத்துச் சொல்ல மறுக்கிறார்கள். அதற்காகத்தான் இந்த இதழ் தொடங்கப்பட்டது. அதனை நாம் தொடர்ந்து ஆராய்ச்சி செய்வோம். இன்றைய நிகழ்விலே இரண்டு கட்டுரைகள் ஆராய்ச்சி செய்யப்பட இருக்கின்றன. முதல் கட்டுரையை எழுதியவரை அறிமுகப்படுத்தி, நிகழ்வுகளைத் தொடங்குமாறு பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் ‘திராவிடப்பொழில்’ ஆசிரியர்களில் ஒருவரான நேருவை அழைக்கின்றேன். என்று குறிப்பிட்டார்.
முனைவர் வா.நேரு
‘திராவிடப் பொழில்’ இதழ் என்பது பெரியார் மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஆசிரியர் அவர்களால் முன்மொழியப்பட்டு 4 ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கித் தொடர்ச்சியாக இதழ்கள் என்பன வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு இதழும் வெளிவந்து அது மற்றவர்களால் வாசிக்கப்படுகிற பொழுது, நமது பெரியார் பன்னாட்டு அமைப்பு அமெரிக்கா சார்பாக இதழ் குறித்துத் தொடர்ச்சியாக ஆய்வரங்கக் கூட்டங்கள் என்பது நடந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு ஏப்ரல் முதல் ஜூன் 2025 திராவிடப் பொழில் இதழை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிகழ்வுக்கு அடிப்படையாக மருத்துவர் சோம.இளங்கோவன் இருக்கிறார்கள். ஓர் இளைஞரைப் போல மிக உற்சாகமாகத் தொடர்ச்சியாக இந்தத் ‘திராவிடப்பொழில்’ இதழ் வெளிவருவதற்கும், கட்டுரைகள் வருவதற்கும் அவர் அடிப்படைக் காரணமாக இருக்கிறார். அந்த வகையில் ‘திராவிடப்பொழில்’ இதழின் ஆசிரியர் குழுவின் சார்பாகப் பெரியார் பன்னாட்டு அமைப்பு அமெரிக்காவிற்கு எங்களின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த இதழில் இரண்டு கட்டுரைகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். முதல் கட்டுரையாக முனைவர் அழகுசெல்வம் எழுதிய ‘மனித மாண்புகள் வளர்க்கும் மரபுக் கலைகள்’ என்ற கட்டுரையை எடுத்து இருக்கிறோம் இதனைப் பற்றிப் பேச இருப்பவர் பகுத்தறிவு கலைத்துறை மாநிலச் செயலாளர் தோழர் மாரி கருணாநிதி ஆவார். அவர் ஆசிரியராகப் பணியாற்றக் கூடியவர். என்று அவரைப் பற்றி அறிமுகம் செய்து. அவர் இப்போது மதிப்புரை வழங்குவார் எனக் கூறி அவரைப் பேச நேரு அழைத்தார்.
மாரி.கருணாநிதியின் ஆய்வுரை

அனைவருக்கும் வணக்கம். பெரியார் பன்னாட்டு அமைப்பு அமெரிக்கா நடத்தக்கூடிய ‘திராவிடப்பொழில்’ இதழ் ஆய்வு நிகழ்வில் இன்றைக்கு ஒரு கட்டுரையை ஆய்வு செய்யும் வாய்ப்பினை எனக்கு வழங்கி இருக்கிறார்கள். நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மிகுந்த நன்றிப்பெருக்கோடு இந்த ஆய்வுக் கட்டுரையை ஆய்வு செய்கிறேன்.
கற்பித்தல் முறைகள் என்று இந்த உலகம் பல்வேறு முறைகளை வைத்திருக்கிறது விளக்கம் சொல்லி நடத்தக் கூடிய முறை, விரிவுரை முறை தொடங்கி இன்று பல்வேறு விதமான கற்பித்தல் முறைகள் வந்துவிட்டன. குறிப்பாகச் செயல்வழி கற்றல், ஸ்மார்ட் வகுப்பறை உருவாக்கப்பட்டுக் கற்பித்தல் என்பன ஒரு தொழிலாக, இன்னும் குறிப்பாக நவீன தொழில்நுட்பத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்திக் கற்பிக்கும் முறையாக இன்றைக்கு மாறி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அப்படி நடக்கக்கூடிய இந்தக் கற்பித்தல் முறையில் ஆசிரியர் மய்யக் கல்வியாக இருந்த கல்வி முறை இன்று மாணவர் மய்யக் கல்வி முறையாக மாறிவிட்டது. மாணவர் மய்யக் கல்வி முறை என்பதை விடக் குழந்தைகள் மய்யக் கல்வி முறையாக இன்றைக்கு மாறிவிட்டது.
மாணவர்களை மய்யப்படுத்திக் கற்பிக்கக்கூடிய இந்தச் சூழலில் எத்தனையோ கோட்பாடுகள் இன்றைக்குக் கல்வியில் இருக்கிறது, நடத்தை இயல் கோட்பாடு, ஆட்கள் நிறை கோட்பாடு, முயன்று தவிர்த்தல் கோட்பாடு, முழுக் காட்சிக் கொள்கைக் கோட்பாடு என்று இப்படி நிறைய அடுக்கிக் கொண்டே போகலாம். பல்வேறு கருத்துகள், கோட்பாடுகள் இருக்கின்றன. கற்றல் முறை இருக்கிறது. கற்பித்தல் முறை இருக்கிறது. கற்பித்தல் கோட்பாடு இருக்கிறது. இத்தனை கோட்பாடுகளும் இதற்கான ஏற்பாடுகளும் எதை நோக்கிப் பயணிக்கிறது?. கல்வி என்பது மனிதரை மனிதனாக்குவது என்று சொல்கிறார்கள் அப்படி மனிதனை மனிதனாக்கும் கல்வியை நாம் இன்றைக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறோமா? நாம் கொடுத்த கல்வி உண்மையிலேயே அவர்களை மனிதர்களாக மாற்றி இருக்கிறதா? இந்தக் கல்வி மனிதநேயக் கல்வியாக இருக்கிறதா? மனிதநேயக் கோட்பாடாக மாறி இருக்கிறதா? என்று பல்வேறு சந்தேகங்கள் நமக்குள் எழுகின்றன.
எதை நாம் கற்றுக் கொடுத்தோமோ, அதைக் கற்றுக்கொண்டு, ஏற்றுக் கொண்டு இன்றைக்கு மாணவர்கள் எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறார்களா என்கின்ற அடிப்படைக் கேள்வி இருக்கிறது. அப்படி நாம் கற்பித்ததை மாணவர்கள் ஏற்றுக்கொண்டு நடக்கவில்லை என்றால் அதற்கான காரணம் என்ன? பகுத்தறிவை, பண்பாட்டை, அறிவியல் நெறிமுறைகளைக் கற்றுக் கொடுத்த பிறகும் நாம் எதைக் கற்பித்தோமோ எதை அவர்கள் கற்றுக் கொண்டார்களோ அதைப் பயன்படுத்திக் கொள்ளாமல் வழி வழியாகப் பாரம்பரியமாகச் சொல்லப்படக்கூடிய அல்லது இதுதான் சரி என்று நம்பக்கூடிய அறிவியலுக்குப் புறம்பான ஜாதியை, மதத்தை ஏற்றுக் கொண்டு, தான் கற்ற கல்வியை அறிவியலை புறம் தள்ளக்கூடிய ஒரு சமூகத்தை நாம் உருவாக்கி வைத்திருக்கிறபோது அப்படி நாம் எதைத் தவறவிட்டோம்? அப்படித் தவறவிட்டது எது? நாம் தவறவிட்டதை எப்படி நாம் மறு கட்டமைப்புச் செய்வது என்கின்ற அடிப்படையில் இந்த ஆய்வுக் கட்டுரை அமைந்திருப்பதாக நான் கருதுகிறேன்.
10 பக்கங்கள். 10 பக்கங்களும் நம்மைப் பற்ற வைக்கும் பக்கங்களாக இந்த ஆய்வுக் கட்டுரை அமைந்திருக்கிறது. அடுக்கடுக்கான நெறிமுறைகளைக் கொடுத்து, அழகிய வழிமுறைகளைச் சொல்லி இந்தக் கட்டுரை ஒரு புதிய தளத்தை நோக்கி நம்மை நகர்த்துகிறது குறிப்பாக மதிப்பு மிக்க மாணவர்களை உருவாக்குவது எப்படி என்ற கேள்வியோடு இந்தக் கட்டுரை தொடங்குகிறது.
ஒரு மனிதன் கற்பதற்கு அவனுடைய உடல் செயல்பாடும், அவனுடைய மனம் செயல்பாடும் அடிப்படையாக அமைகிறது. அதில் ‘கற்பித்தல்’ என்பது ஒரு மாற்றம். அந்த மாற்றம் என்பது பண்பாட்டு நடவடிக்கையாக அமைகிறது. கற்றலில் இருந்து பெறக்கூடிய வரலாற்று செயல்பாட்டின் அடிப்படையில் அமைந்த சமூகம் என்பது மதிப்புமிக்க மாணவர்களை உருவாக்கத்தை நோக்கி நகர வேண்டும் என்ற ஆவலை இந்தக் கட்டுரை நமக்குத் தருகிறது
எப்படிப்பட்ட பண்பாட்டு சூழலை
உருவாக்க வேண்டும்?
நான் இந்தப் பத்துப் பக்கங்களை 10 பகுதிகளாகப் பிரித்துப் பார்க்கிறேன்.மதிப்பு மிக்க மாணவர்களை எப்படி உருவாக்குவது என்ற கேள்வியை எழுப்பக்கூடிய முன்னுரை முதலில். பள்ளிக்கூடப் பண்பாட்டுச் சூழலில் மரபுக் கலைகளின் தேவை என்ன?. மரபுக் கலைகளைப் பற்றி இந்தக் கட்டுரை விரிவாகப் பேசவில்லை என்றாலும் தேவையான அளவு பேசியிருக்கிறது. குறிப்பாக உடல், மனம் செம்மைப்படுவதற்கு மரபுக் கலைகள் ஏன் தேவை, ஒரு மனிதனுடைய உடல் நலமாக இருக்க வேண்டும் பலமாக இருக்க வேண்டும், அவனுடைய மனமும் நலமாக இருக்க வேண்டும் – பலமாக இருக்க வேண்டும், என்று சொன்னால் அதற்கு எப்படிப்பட்ட பண்பாட்டு சூழலை நாம் உருவாக்க வேண்டும், அந்தப் பண்பாட்டு சூழல் எப்படி மரபுக் கலைகளை நோக்கி நகர வேண்டும்? என்ற செய்தியை இந்தக் கட்டுரை பதிவு செய்திருக்கிறது.
மிக முக்கியமாக எல்லோரும் விரும்பக்கூடிய கற்றலில் எளிமை. மாணவர்கள் பலருக்கும் ‘கற்றல் என்பது ஒரு தேவையற்ற நடைமுறை’ என்ற எண்ணம் இருக்கிறது. கேள்வி என்பதும் கற்றல் என்பதும் மாணவர்களுக்கு ஒரு மிகப்பெரிய எதிர்வினை ஆற்றக்கூடிய ஒரு செயலாக இன்றைக்கு இருக்கிறது. கற்றுக் கொள்வதைப் பயன்படுத்திக் கொள்வதற்கோ அதையும் தாண்டி தேர்வு எழுதி வெற்றி பெறுவதற்தோ மாணவர்கள் தயாராக இல்லை. இது இயல்பாக இருக்கிறது. தேர்வைப் பார்த்து பயமில்லை. தேர்வே கூடாது என்ற நிலையைத்தான் இன்றைக்கு மாணவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.தேர்வு மிக மிக எளிமையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
அப்படி இருக்கக்கூடிய ஒரு சூழலில் சமூகம், பெற்றோர், மாணவர், ஆசிரியர் என்கிற உறவுகளைக் கொண்டு மரபுக் கலைகள் வழியாகக் கற்றுக் கொடுத்தல் என்பது சாத்தியமா?. கற்றல் இனிமையை எப்படிக் கொண்டு வருவது? நிகழ்த்துக் கலைகள் மூலமாக நம்மால் கற்றலில் இனிமையைக் கொண்டு வர முடிந்தால் அது சிறப்பாக இருக்குமா என்ற கேள்வியைக் கற்பதில் முன் வைக்கிறது. கற்றல் என்பது சமூகத்தில் இருந்து தொடங்கி, பெற்றோர் வழியாக வளர்ந்து, கல்வியில் நிலை பெற்று வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடிய ஒரு பொருளாக நாம் அறிகிறோம். அப்படிக் கற்கின்ற பொழுது அந்தக் கற்றல் செயல் வழியாக ஒருங்கிணைந்திருக்கிறதா?, செயல் வழி ஒருங்கிணைந்து கற்றல் என்பது எப்படிப்பட்ட மனப்பான்மையை உருவாக்குகிறது?. குழு மனப்பான்மை, ஈடுபாடு, கடமை உணர்வு, படைப்பாக்கம் இப்படிப் பல்வேறு விழுமியங்களைக் கற்றல் மாணவர்கள் மனதில் கடத்தி இருக்க வேண்டுமே, ஆனால் நடக்கவில்லையே.
கற்றலில் அறிவியல் பார்வை தேவை
மொழி, சமூகம், வரலாறு, பண்பாடு எனப் பாய்ந்து பரிணமித்து இயற்கை, வாழ்க்கை, கலைகள் எனக் கொடுக்கல் – வாங்கல் தன்மையில் கற்றல் கொண்டிருக்க வேண்டும் என்பது அறிவியல் பார்வை. அதுதான் மிக முக்கியம். அறிவியல் பார்வையை இன்றைக்கு நாம் முன் வைக்க வேண்டிய அவசியத்தை, காலத்தின் கட்டாயத்தை இந்தக் கட்டுரையில் நான் பார்க்கின்றேன். கற்றல் எப்போது ஆழமாக இருக்கும் என்று சொன்னால் கலைகளைக் கற்கும் பொழுது, தான் கலைகளைக் கற்றுக் கொள்வதுடன் நில்லாமல் அதில் உள்ள அரசியலைப் புரிந்து கொண்டு நாம் கற்க வேண்டும். அந்த அரசியலைப் புரிந்து கொண்டு கலைகளைப் பயன்படுத்தி மாணவர்களை வார்த்தெடுக்க வேண்டும் என்பதுதான் இன்றைய தேவையாக இருக்கிறது.
அதைவிட ஒரு மாய மரபு இருக்கிறது. என்ன மாய மரபு என்றால் மேலோர் மரபு. அதாவது ‘உயர்ந்த மரபு மக்களுக்கானது’, ஒரு குறிப்பிட்ட மக்களுக்கானது என்ற அந்த அறமற்ற நிலைப்பாடு இருக்கிறதே அந்த நிலைப்பாட்டை நாம் ஒழித்தாக வேண்டும்; முற்றிலுமாக ஒழித்தாக வேண்டும். வேரோடும் வேரோடி மண்ணோடும் பின்னிப் பிணைந்து இருக்கின்ற கலைகள் மனிதனின் உடலையும் மனத்தையும் வாழ்க்கையையும் அழகாக மாற்றுகிறது. அப்படிப்பட்ட கலைகள் ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமா என்றால், இல்லை – இது அனைவருக்கும் ஆனது. அனைவருக்கும் ஆன கலைகளை நாம் எப்படி வார்த்தெடுப்பது என்கின்ற செய்தியை, அந்தச் சிந்தனையை நமக்குள்ளே இந்தக் கட்டுரை கொடுக்கிறது.
பரந்து கிடக்கக்கூடிய தமிழின் சிறப்பு
இரண்டாவது பகுதியாகத் தமிழும் அதனுடைய சிறப்பும். தமிழ் என்றாலே பலருக்கும் வராத சிறப்பு ‘ழகரம்’. அந்த உச்சரிப்பு என்பது நமக்கு இன்னும் சரியாக வரவில்லை, கற்பிக்கப்படவில்லை என்கிற செய்தியைச் சுட்டிக் காட்டுவதோடு தமிழுக்கே இருக்கக் கூடிய சிறப்பான சங்க இலக்கியங்கள் பற்றி இந்தக் கட்டுரை பேசுகிறது. முதல் பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற கவிதை முறை, இயல், இசை நாடகம் என்ற முத்தமிழ். நீதி இலக்கியங்கள், காப்பியங்கள், சமய இலக்கியங்கள் என்று என்று விரிந்து பரந்து கிடக்கக்கூடிய தமிழ் இலக்கியத்தில், அதனுடைய சிறப்பை இன்றைக்கு மாணவர்கள் புரிந்து கொள்ளக்கூடிய அளவிற்குக் கற்பிக்கப்படுகிறதா? என்றால் இல்லை.
இன்றைக்குக் கற்பித்தல் தொழிலாக மாறி இருக்கிறது. பலரும் கல்வியை மிக எளிதாகக் கற்றுக்கொண்டு அதன் மூலம் வருமானத்தைப் பெறக்கூடிய வாய்ப்புப் பெற்றிருக்கிறார்களே ஒழிய, தமிழையும் அதன் சிறப்பையும் சிறப்பாகக் கற்பிக்கக் கூடிய, மாணவர்களைச் சிந்திக்க வைக்கக் கூடிய மரபை உருவாக்குகிறதா என்ற கேள்வியை இந்தக் கட்டுரை எழுப்புகிறது. தமிழ் எப்போதுமே சிந்தனை மரபாகத்தான் இருக்கிறது. நாம் இன்றைக்கு ஜாதி இல்லை, மதம் இல்லை, பகுத்தறிவு வேண்டுமென்று பேசுகிறோமே அந்தப் பேச்சுக்கு, அந்த வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருப்பது இலக்கியங்கள். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கின்ற செய்தி எல்லாம் இலக்கியங்கள் சொல்லுவதுதான்.
வாழ்வதற்கான தத்துவ மரபைக் கொண்டது
அதை மாணவர்கள் புரிந்து கொண்டார்களா, அதைக் கற்றுக் கொண்டார்களா, அறிவியல் மரபை உருவாக்கிய நம்முடைய மொழி, தத்துவ மரபை உருவாக்கிய நமது மொழி, நம்முடைய வாழ்வியலை நமது வாழ்க்கையை நாம் எப்படி வாழ வேண்டும், அதை எப்படிச் சரியாக வாழ வேண்டும் என்ற செய்திகளைக் கற்பிக்கக் கூடிய தத்துவ மரபை கொண்டது நமது தமிழ் மொழி. இந்த மொழி உணர்வு எப்படிக் கடத்தப்பட வேண்டும், நம்முடைய தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு மிக லாகவாகமாகக் கடத்தப்பட வேண்டும். மொழியின் மூலமாக ஓர் இனம் தனது பண்பாட்டை, அதனுடைய தத்துவத்தை, அறிவியல் பார்வையைக் கொண்டு சென்றிருக்க வேண்டும். கொண்டு சென்றிருக்கிறோமா என்ற கேள்வியை ஆய்வு செய்ய வேண்டிய தருணம் இது என்று இந்தக் கட்டுரை நமக்கு வலியுறுத்துகிறது.
இசைத்தமிழ்
மூன்றாவதாக இசைத்தமிழைப் பற்றி இந்தக் கட்டுரையைப் படித்தால் பல பேருக்கும் இசைத்தமிழ் எளிதாகப் புரியும். தொல்காப்பியம் தொட்டு இன்றைய காலம் வரை இசை என்பது தனியாக எதுவும் இல்லை. ஓர் எழுத்து நீண்டு ஒலித்தால் அது இசையாக மாறுகிறது என்ற செய்தியை மிக அழகாக இந்தக் கட்டுரை சொல்லி இருக்கிறது. சொல், பொருள், யாப்பு, அணி என்று இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு அசையில் தொடங்கி இசையாய் வளர்கிறது என்பதைச் சொல்கிறது.
மக்கள் இசை எப்படித் தோன்றியது, அது கழனிப் பாட்டாக, உழவர் பாட்டாக, ஏற்றப்பாட்டாக, நடவுப் பாட்டாக, நெற்களப்பாட்டு, போர்க்களப்பாட்டு, வெற்றிப் பாட்டு எனப் பாடல் பல வகை இருக்கிறது. அந்தப் பாடல்கள் எல்லாம் எப்படி வந்தன என்பதைப் ‘பள்ளு’ என்று சொல்லக்கூடிய பள்ளத்து வழி வந்தவை என்ற செய்தி இதில் அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையெல்லாம் கடந்து கதை வடிவிலான, நாடக வடிவலான கற்பித்தல் முறைகள் பற்றிக் கட்டுரையாளர் பதிவு செய்திருக்கிறார்.
நான்காவது பகுதியாக ‘பண்ணத்தி’ என்ற சொல்லை மட்டும் ஆய்வு செய்து இருக்கிறார். அந்தச்சொல் இசையை, தாளத்தை(ராகத்தை) குறிப்பதாக இதில் சொல்லப்பட்டுள்ளது. அங்கே குறில், நெடில் எழுத்துகள் எப்படி ஒலிக்கின்றன, எப்படி இசையாக எழுத்து மாறுகிறது என்கின்ற செய்தி தக்க முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அசை என்பது எப்படி ஓசைகளாக மாறி செப்பலோசை, துள்ளலோசை, அகவல் ஓசை என்று எப்படிப் பாடப்படுகிறது என்பதை மிக எளிமையாக இந்தக் கட்டுரை விளக்குகிறது.
கலைகள் வழியே கற்போம்
கணிதத்துக்கும் இசைக்குமுள்ள தொடர்பை இந்தக் கட்டுரை அழகாகச் சுட்டிக் காட்டுகிறது. தமிழ் இசைக்கருவிகள் பற்றியும், இயற்கையில் இருந்து இசையையும், இசைக்கருவிகளையும் பெற்ற நாம், தமிழிசையை நம் மரபு சார்ந்து இருக்கக்கூடிய மொழியை, அறிவியல் முறை கொண்டு முறையாகப் பயன்படுத்திக் கொள்கிறோமா என்ற கேள்வியைக் கேட்கிறார். இந்த நிகழ்த்து கலையை, இசைக்கலையை, பறையடித்தால் ஆடாத ஒரு குழந்தையை நாம் பார்க்க முடியுமா? எந்த இசையை இசைத்தாலும் குழந்தை ஆடுகிறது. எந்தப் பாட்டைப் பாடினாலும் குழந்தைகள் பாடுகின்றன. ஒரு நான்கு அடி இருக்கக் கூடிய ஆங்கிலப் பாடலை படிக்க முடியாமல் குழந்தை திணறுகிறது.அதே ஆங்கிலப் பாட்டை இசையோடு சொல்லிக் கொடுத்தால் 10 வரிகள் 15 வரிகள் கூட அதனால் படிக்க முடிகிறது. சினிமாப் பாடல்களைக் குழந்தைகள் மிக எளிமையாகக் கேட்டுத் திரும்ப்ப் பாடிவிடுகிறார்கள். எனவே எழுத்து என்பதும், பாட்டு என்பதும், இசை என்பதும், கலை என்பதும் அது மக்களுக்காக இருக்கிறதா?. மக்களுக்கான கலையை நாம் கற்றுக் கொடுக்கிறோமோ, மக்களுக்கான கல்வியை நாம் கொடுத்து இருக்கிறோமா?. அதை மரபுக் கலைகள் வழியாகக் கொடுத்தால், இசை வழியாகக் கொடுத்தால், நாடக வடிவில் கொடுத்தால், கலை வடிவில் கொடுத்தால் நிச்சயம் கற்பித்தல் என்பது சிறப்பாக இருக்கும்.
நிகழ்கால அரசியலையும் நிகழ்காலச் சமூகத்தையும் புரிந்து கொள்வதற்கு ரசிக மாயையில் இல்லாமல் இந்த வாழ்க்கையை, இயற்கையான வாழ்க்கையை உண்மையான வாழ்க்கையை வாழ முடியும் என்ற செய்தியை இக்கட்டுரை நமக்குப் புரிய வைக்கிறது. நம்முடைய கடந்த காலத்தை நினைவூட்டி, கற்பித்த ஆசிரியர்களை, கற்பித்தலை புரிந்து கொள்ளச் செய்து எதிர்காலத்தில் நடக்கக்கூடிய கற்பித்தலுக்காகச் சில கேள்விகளை முன்வைக்கிறது. கலைகள் மூலமாகக் கற்போம், கலைகள் வழிக் கற்போம், ‘கலைகள் வழிக் கற்பிப்போம்’ என்ற செய்தியை மிக ஆழமாக இந்தக் கட்டுரை சொல்கிறது. எனவே மனிதனை மனிதனாக்கும் கல்வியை, மரபுக் கலைகள் வழியாகத் தருவதற்கு வழிகாட்டும் இது ஒரு கொள்கைக் கட்டுரை. இந்தக் கட்டுரை மேலும் விரிவுபடுத்தப்பட்டு ஒரு புத்தகமாக வரவேண்டும். அப்படி வருமானால் அதையும் ஆய்வு செய்வோம். மரபு சார்ந்த, மரபுக் கலைகள் சார்ந்த மனிதநேயத்தை வலியுறுத்தக்கூடிய ஒரு கல்வி முறை வருவதற்கு அடிப்படையாக அந்தப் புத்தகம் அமையும்” என்று உரையாற்றினார்.
பேரா. முனைவர் அழகுச்செல்வம் ஆய்வுரை

அனைவருக்கும் வணக்கம். இந்தக் கட்டுரையைத் ‘திராவிடப்பொழில்’ இதழில் வெளியிட்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்த ‘திராவிடப் பொழில்’ ஆசிரியர் குழுவிற்கும், மருத்துவர் அவர்களுக்கும் என்னுடைய வணக்கத்தையும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கட்டுரையைப் பற்றிப் பேசிய தோழர் மாரி கருணாநிதி மிக அற்புதமாக அவருடைய பார்வையின் வழியாக ஆய்வு செய்தார்.
கடந்த 15, 20 ஆண்டுகளாக இந்தப் பயிற்சியை நான் மேற்கொண்ட பொழுது கிடைத்த அனுபவங்களின் வாயிலாகத்தான் இந்தக் கட்டுரையை நான் எழுதி இருக்கிறேன்.ஆய்வாளர் சொன்னது போலக் கிட்டத்தட்ட ஓர் ஏழு, எட்டு தலைப்புகளின் கீழே தமிழ் மரபு, தமிழ் இசை, தமிழ் கலைகள், கற்றல், கற்பித்தல், தொழில்நுட்ப ரீதியாகக் கற்றல், கற்பித்தலை எப்படிக் கொண்டு செல்வது என்பது மாதிரி பிரித்துக் கொண்டுதான் இந்தக் கட்டுரையை நான் எழுதினேன். ஆனால் ஒவ்வொரு கட்டுரையின் தலைப்பும் ஒரு சிறு நூலாக ஆக்குவதற்கு உரிய தலைப்புகள் அதனை அழகாக ஆய்வாளர் மாரி.கருணாநிதி குறிப்பிட்டார்கள்.
சமூக ஊடகங்கள் வழியே…
கட்டுரையை மீண்டும் இந்த ஆய்வாளர் வழியாகக் கேட்கிற பொழுது நிறைய தகவல்களை அவர் முன்மொழிந்திருக்கிறார். குறிப்பாக இந்த இயற்கை, சமூகம், கற்றல் கற்பித்தல் மீண்டும் இயற்கை, சமூகம் என்கிற அந்தச் செயல் நெறியை ஓர் அறிவியல் பூர்வமான பார்வையாக இப்பொழுது எடுக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறோம். இது ரொம்ப முக்கியமான விடயமாக எனக்குத் தெரிகிறது. இந்த அறிவியல் பார்வை தான் இப்போது நமது குழந்தைகளுக்குத் தேவை. இன்றைக்கு இருக்கக்கூடிய வெகுஜன சமூக ஊடகங்கள், சோசியல் மீடியா என்று சொல்லக்கூடிய சமூக ஊடகங்களின் வழியாகக் கிட்டத்தட்ட உலகமே அதற்குள் வந்துவிட்டது ஊடகங்கள் வழியாகத்தான் இந்த உலகம் இயங்குகிறது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை.
நினைவுபடுத்துவதற்காகச் சொல்ல வேண்டும் என்று சொன்னால் தமிழ்நாடு அரசியல் சூழலில் இந்த ஊடகங்கள் ஆற்றிய பங்கு மிகப் பெரியது.. இது நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ ஒரு மாற்றத்தை கொடுத்திருக்கிறது. என்னுடைய தனிப்பட்ட முறையில் அல்லது ஓர் ஆய்வாளராக, ஒரு சமூக ஆய்வாளனாக, மொழி குறித்து, கலை குறித்து, பண்பாடு குறித்து, வாழ்வியல் குறித்து யோசிக்கக் கூடிய ஒருவனாக இந்த மாற்றம் என்பது ஓர் எதிர்மறை என்றுதான் நான் பார்க்கிறேன். ஏனென்று சொன்னால் அறிவியல் பூர்வமாக இயங்குவதற்குப் பதிலாக உணர்வுப்பூர்வமாக இந்தச் சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. உணர்வுப் பூர்வமாக இயங்குவது என்பதைக் கலைகள்தான் சொல்லும். ஆனால் கலைகள் உணர்வுப் பூர்வமாகக் கற்றுக்கொண்டு அல்லது புரிந்துகொண்டு அல்லது அறிந்துகொண்டு தெரிந்துகொண்டு அறிவியல் நிலைக்குப் போவதற்கு உதவும். கடந்த ஒரு பத்து ஆண்டுகளாகக் குறிப்பாக உலகம் முழுக்க இந்தக் கற்றல், கற்பித்தல் புத்தகங்களில் இருந்தும், கரும்பலகைகளில் இருந்தும் வெளியேறி வந்துவிட்டது. அதாவது மாணவர்கள் குறிப்பெடுத்துக் கொண்டு படிக்கிற முறையில் இருந்து வெளியே வந்து விட்டார்கள். கரும்பலகையில் எழுதி, ஆசிரியர் சொல்கிற நிலையில் இருந்து மாறிவிட்டது.
மடை மாற்றம்
உலகம் முழுக்க ஒரு பாதிப்பை ஏற்படுத்திய கரோனா காலகட்டத்தில் இவர்கள் எல்லாம் கல்லூரி மாணவர்களாக இருந்தவர்கள். அவர்களுக்கு வழங்கப்பட்ட கைப்பேசி வழியாக அவர்கள் காட்சியைக் கண்டு, அந்தக் காட்சியைக் கண்டு கொண்டதன் வழியாக அவர்கள் உணர்வு வயப்பட்டவர்களாக மாறி இருக்கிறார்கள். அதனுடைய விளைவாகத்தான் இந்த அரசியல் மாற்றம் நிகழ்ந்திருப்பதாக நான் பார்க்கிறேன். எனவே இந்தக் கட்டுரை மாணவர்களை அல்லது குழந்தைகளை நேரடியாகக் கற்றுக் கொள்வதற்கான ஒரு விடயத்தைத் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறது. என்னுடைய அமெரிக்கப் பயணமாக இருக்கட்டும் அல்லது சிங்கப்பூர் பயணமாக இருக்கட்டும், மலேசியப் பயணமாக இருக்கட்டும் அல்லது இலங்கைப் பயணமாக இருக்கட்டும் நானே குழந்தைகளோடு விளையாடுவதைத் தொடங்கி வைத்திருக்கிறேன். அதன் வழியாக நான் கற்றுக் கொள்கிறேன், கற்றுக் கொடுக்கிறேன்.

விளையாட்டின் மூலம் கற்றல்
ஓர் எடுத்துக்காட்டு சொல்ல விரும்புகிறேன். தட்டாங்கல் விளையாட்டு.தட்டாங்கல் விளையாடுகிற போது ஒரு கல் எடுத்தால் ஒரு சொல், இரண்டு கல் எடுத்தால் இரண்டு சொல். ஒரு சின்ன மடைமாற்றத்தை உருவாக்குகிறேன். ஒரு கல்லுக்கு ஒரு சொல்.முதல் கல்லுக்கு அம்மா என்று சொல்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டாவது கல் எடுக்கிற போது அப்பா என்று சொல்லக்கூடாது, அண்ணன் என்று சொல்லக்கூடாது. உறவு முறையைச் சொல்லாமல் வேறு ஒன்றைச் சொல்ல வேண்டும். முதல் கல்லுக்கு ‘அம்மா’ அல்லது ‘அப்பா’ என்று சொன்னால் இரண்டு கல்லை எடுக்கிறபோது ‘சோறு – தோட்டம்’ என்று சொல்ல வேண்டும். மூன்று கல்லை எடுக்கிற போது அவர்கள் ‘இயல் – இசை – நாடகம்’ என்று சொல்வார்கள். இப்படிச் சொற்களை நாம் நீடித்துக் கொண்டே போகின்றபொழுது ‘சொற்களஞ்சியம்’ உருவாகிறது. அந்தச் சொற்களுக்கான பொருளை நாம் சொல்லித் தர வேண்டும்.விளையாட்டு வழியாகச் சொல்லுகிற போது குழந்தைகள் ஈடுபாட்டோடு கற்றுக் கொள்கிறார்கள், மகிழ்ச்சியாகக் கற்றுக் கொள்கிறார்கள். பொழுதுபோக்கு வழியாகக் கற்றுக் கொள்கிற ஒரு விடயமாக, அறிவுத்தளத்திலே வேலை செய்வதாக மாறுகிறது என்று நான் கருதுகிறேன். எனவே அந்தப் பயிற்சியை நான் அமைக்கிறேன்.

அதுபோல ஒத்தையா-ரெட்டையா விளையாட்டு. அதை நாம் தமிழில் சொல்கிற பொழுது அவர்கள் ஆங்கிலத்தில் அதனை மாற்றிக் கொள்கிறார்கள். இருந்தாலும் நான் தமிழில்தான் சொல்வேன். அப்படிச் சொல்கிறபோது அதில் விளையாட்டு இருக்கிறது, கணிதம் இருக்கிறது, அறிவியல் இருக்கிறது. அதில் பண்பாடு இருக்கிறது.இவற்றையெல்லாம் ஒருங்கிணைக்கக் கூடிய மொழி அங்கே இருக்கிறது. இப்படித்தான் இந்த விளையாட்டைக் குறிப்பாகப் புலம்பெயர்ந்து வாழக்கூடிய பெற்றோரின் குழந்தைகள், அந்தக் குழந்தைகளுக்கு, ஓரளவு இளைஞர்களுக்கு, பெற்றோர்களுக்குக் கூடக் கற்றுக்கொடுத்தோம். ஆனால் இது அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் நடத்த முடிகிறது.
சமூக ஊடகங்களின் மூலம் படைப்பாற்றல்
தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகள் பின்னடைவை கண்டிருக் கின்றன. தமிழ் நாட்டில் ஏறத்தாழ 12,500 பஞ்சாயத்துக்கள் இருக்கின்றன.அதே அளவு அரசுப் பள்ளிகள் இருக்கின்றன.. இந்தப் புள்ளி விவரங்களோடு தான் நான் ஆய்வினைத் தொடங்கி இருக்கிறேன். ஒரு பள்ளியிலே மாலையிலே விளையாடுவதற்காக, இந்த விளையாட்டு என்பது தமிழ்நாட்டில் இருக்கிறது. விளையாண்டு கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இதை அறிவு ஊக்கத்துக்கான விடயமாக மாற்றுவதற்குத் தடை செய்வது செல்லிடைப் பேசி வழியாக வந்த சமூக ஊடக முறைமைகள்தான். இந்தச் சமூக ஊடக முறைமைகள் அதாவது சோசியல் மீடியா அது வேறொரு உலகத்திற்குக் குழந்தைகளை அழைத்துச் செல்கிறது, வேறொரு நிலையிலே நிறுத்திவிட்டது. சோசியல் மீடியாவிலே வரக்கூடிய ஒரு விளையாட்டு என்பது அதில் எத்தனை விளையாட்டுக்கள் நாம் வைத்திருக்கிறோமோ அதைத்தான் அது காட்டுகிறது. 100 விளையாட்டுகள் வைத்திருக்கிறோம் என்றால் 100 விளையாட்டுக்கள் மட்டும்தான் விளையாட முடியும். விளையாட்டை அதுவாக, தானாகக் கணினி தராது. ஆனால் நேரடியாகக் குழந்தைகள் விளையாடுகிற போது 100, 200 ஆக மாறும். 200 என்பது 1000மாக 10000மாக மாறும். புதிய புதிய விளையாட்டுகளை அவர்கள் கண்டடைவார்கள், உருவாக்குவார்கள், இந்தப் படைப்பு ஊக்கம், படைப்பாற்றல் என்பது சமூக ஊடக முறைமைகளில் அடிபட்டுப் போகிறது.

இன்றைக்குச் சமூக ஊடக முறை வழியாகத்தான அரசுப் பள்ளிகளும் நடத்தப்படுகின்றன. தனியார் பள்ளிகளில் ‘ஸ்மார்ட் கிளாஸ் ரூம்’ என்பது இருக்கிறது. இந்த முறைமை என்பது, சிஸ்டம் என்பது இயற்கையை, பண்பாட்டை, மொழியைப் புரிந்து கொள்வதைத் தடை செய்வதாக மாறி இருக்கிறது. இப்படி இருப்பதை மீட்டெடுக்க வேண்டும் என்றால் இது போன்ற பயிற்சிகள் அல்லது இதுபோலக் கற்றல் முறைகளைச் செய்ய வேண்டும் என்பதற்கான ஓர் அறிவு நிலையில் இந்தக் கட்டுரை உருவாக்கப்பட்டது.
வாழ்வியல் கலைகள்
இசை என்று சொன்னால் இப்போது அவர்கள் கருநாடக இசையைத்தான் சொல்கிறார்கள். தமிழ் மரபிசைச் சொற்களைக் குறிப்பாகத் தமிழ் நாதசுவரம், உருமி, பம்பை, தாளம் என்ற தமிழ் அடிப்படை மரபு இசையைப் பற்றி எல்லாம் யாரும் பேசுவது இல்லை.இந்த மரபு இசைகளை இசைக்கின்ற மரபு பற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சொல்லி இருக்கிறார்கள் ஆனால் இசையைக் குறித்த சொல்லாடல்கள், நிறையச் சொற்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. அவற்றைத் தொகுப்பது இசைச் சொல் மரபு அகராதி, மரபிசைச் சொல் அகராதியை உருவாக்குவது, தமிழ் மரபும் பண்பாடும் சார்ந்த வாழ்வியல் கலைகளைக் கற்றல், கற்பித்தலுக்குப் பயன்படுத்துவது என்பது குறித்த ஒரு நூலை உருவாக்குவது. இந்தச் சமூக ஊடக முறைமைகளுக்கு எதிராக அல்லது இந்தச் சமூக ஊடக முறைமைகளின் வழியாகக் கூடத் தமிழ் மரபுக் கலைகளை, தமிழ் மரபு இசையை, மரபு வழிக் கற்றல் கற்பித்தல்களைக் கொண்டு வர வேண்டும் என்ற என்ற இந்த மூன்று பெரும் முயற்சிகளை, ஆய்வுகளை நான் செய்து கொண்டிருக்கிறேன்.
அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறேன். அதற்கான நிதியைத் திரட்டுவது பற்றிக் கூட நான் பேசிக் கொண்டிருக் கிறேன் அதற்கான வேலையைச் செய்ய வேண்டும் ஏனென்றால் நூல் ஆக்குகிற பொழுது நூலாக நின்று விடாமல் குறிப்பாக ஆசிரியர்களும் பெற்றோர்களும் பயிற்றுநர்களாக மாற வேண்டும். அதுதான் என்னுடைய முக்கியமான குறிப்பாக நான் சொல்ல விரும்புகிறேன்“ என்று குறிப்பிட்டு ஏற்புரை ஆற்றினார்.
பறை பற்றியும் இசை பற்றியும் தொல்காப்பியம் பற்றியும் குறிப்பிட்டு உடல் வலுவாக இருக்கும்பொழுதுதான் மனம் வளமாகும்.அதற்கு விளையாட்டு அவசியம் என்று குறிப்பிட்டு தனக்கு ஒரு கனவு இருக்கிறது என விளக்கி சிறப்பாக ஏற்புரையைப் பேரா.முனைவர் அழகு செல்வம் ஆற்றினார்.
மருத்துவர் சோம இளங்கோவன்
ஆய்வுரை
திராவிடப்பொழில் ஓர் ஆராய்ச்சி இதழாக, நாம் ஒவ்வொருவரும் எப்படிச் செயல்பட முடியும் என்பதை ஆக்கப்பூர்வமாகச் செயல்படுத்த உதவும் ஒரு கருவியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.இந்தப் படம் உங்களுக்கு எல்லாம் தெரியும், ‘வள்ளுவர் கோட்டம்’. வள்ளுவரை எப்படி எல்லாம் உலகிற்கு அறிமுகப்படுத்த முடியும் என்ற சிந்தனையின் வெளிப்பாடாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் உண்டாக்கியது இந்த ‘வள்ளுவர் கோட்டம்’. இந்த அரங்கிலே பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதனுள் பல கருத்துகள் அடங்கியிருக்கின்றன. இதே போல் கன்னியாகுமரியில் ‘வள்ளுவர் சிலை’ வைத்து, உலகமே போற்றும் படி வள்ளுவரை உலகம் அறிந்து கொள்ளும் ஆர்வத்திலே உண்டாக்கப்பட்டது வள்ளுவர் சிலை.
‘திராவிடப் பொழில்’ இதழிலே ஒவ்வொரு அட்டையும் எப்படிச் சிறப்பாக இருக்கிறது என்பதற்கு இதனை இங்கு நான் காட்டினேன். ஓர் இதழ் பல கருத்துகளைச் சொல்ல வேண்டும். பலரை ஊக்குவிக்க வேண்டும். அவர்களைச் செயல்படத் தூண்ட வேண்டும். இங்கே மரபுக் கலையைப் பற்றித் தோழர்கள் பேசினார்கள். பல்லாங்குழி விளையாண்டோம், பம்பரம் விளையாண்டோம், எத்தனை விளையாட்டுகள் நாம் விளையாண்டோம். இன்றைய குழந்தைகள் கையில் கைப்பேசி வைத்துக்கொண்டு உட்கார்ந்து இருக்கின்றன. சாப்பிடும்போது கூட நாங்கள் ஊட்டி விடுகிறோம்,ஆனால் பேத்தியின் கையில் கைப்பேசி இருக்கிறது. இந்த மாதிரியான கைப்பேசி பரம்பரை வளர்ந்திருக்கிறது. அய்யா சொன்னார்கள். அதை மாற்ற வேண்டும். அப்படி மாற்றும் கருவியாகத் திராவிடப்பொழில் இதழ் இருக்க வேண்டும். என்று நினைக்கின்றோம். இன்று இரண்டு கட்டுரைகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.ஆய்வு ஒன்றைப் பார்த்து விட்டோம்.
இன்னொரு கட்டுரை திருவள்ளுவர் பற்றியது.’Valluvar’s ten commandments for Good Governance’ என்னும் கட்டுரை. இதனை எழுதியிருப்பவர் மிகச்சிறந்த ஆளுமையான அய்யா பிரபாகரன். முனைவர் பிரபாகரன் அவருடைய தந்தையாரின் வழிகாட்டுதலில் மிக அருமையாகப் படித்தவர். ஓர் அண்ணன் போர்ப்படையிலும், இன்னொரு அண்ணன் அய்ஏஎஸ் ஆக, பெரிய அதிகாரியாகப் பணியில் இருந்தவர். இவருடைய படிப்பு வேறு, படித்ததெல்லாம் கணக்கு மற்றவைகள். ஆனால் ஆராய்ச்சி எல்லாம் திருவள்ளுவர், சங்க இலக்கியம் அந்த மாதிரி தான். அமெரிக்க அரசு, நாசா இவற்றில் எல்லாம் பணியாற்றியவர். திருக்குறள் மாநாடு நடத்தியவர். புறநானூறு மாநாடு நடத்தியவர். திருக்குறளைப் பற்றிப் படமாக எடுத்து ஆங்கிலத்தில் அது வெளியானது. அது இப்பொழுது மற்ற மொழிகளிலே மொழிபெயர்க்கப்பட்டுப் படமாக காண்பிக்கப்பட்டு வருகின்றது.தனது வாழ்நாளை தமிழுக்காகவும் தமிழ் இலக்கியங்களைப் பரப்புவதற்காகவும் அர்ப்பணித்தவர். அவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் ஏராளமாக எழுதி இருக்கிறார். உலகெங்கும் உள்ள தமிழர்கள், எந்த நாட்டில் தமிழர்கள் வாழ்ந்தாலும் பிரபாகரன் கட்டுரையைப் படிக்கிறார்கள். பிரபாகரனுடைய வெப்சட்டைப் பார்த்தால் தெரியும், எங்கெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்கள் என்று.
மொழிப்பெயர்ப்பு
அருமையான கட்டுரை. இன்றைக்குத் தேவையான கட்டுரை. இன்றைக்கு அரசுகள் எப்படி நடக்கின்றன?. திருக்குறள் படித்து அதன்படி அரசை நடத்த ஆரம்பித்தால் மக்கள் எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பது தான் கட்டுரையின் கருத்து. மிகவும் அழகாக எழுதியிருக்கிறார்.ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் போது மிகவும் அருமையாக உள்ளது. அருமையாக மொழி பெயர்த்து இருக்கிறார் என்பதுதான் சிறப்பு.. ஓர் அரசு எப்படி இருக்க வேண்டும், 2000 ஆண்டுகளுக்கு முன்பு மன்னர் ஆட்சி நடந்து கொண்டிருந்த பொழுது எழுதிய கருத்துக்கள் இன்று மக்களாட்சி நடக்கும்போது ஒத்து வருகிறது என்பதைப் பார்க்கின்ற பொழுது நம்மால் வியப்படையாமல் இருக்க முடியாது.
அரசு எப்படி நடைபெறவெண்டும் என்பதைப் பற்றித் திருவள்ளுவர் எப்படி எல்லாம் சொல்லி இருக்கிறார் என்றால், ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதற்குத் திருவள்ளுவர் ரொம்ப அழகாகச் சொல்லுகிறார்.
உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு
இதையெல்லாம் யார் செய்ய முடியும்?. அந்தக் காலத்தில் மன்னர் ஆட்சி. இந்தக் காலத்தில் மக்களாட்சி. மூன்று பிரிவுகள். : legislative, judicial, and executive. அந்தக் காலத்தில் இந்த மாதிரி இருந்துதா?. திருவள்ளுவர் சும்மா எழுதி வைத்துவிட்டுப் போகவில்லை வாழ்க்கை முறையை எழுதி வைத்திருக்கிறார். தனி மனிதனுக்கு, அரசாக இருந்தாலும் சரி, இல்லற வாழ்க்கையாக இருந்தாலும் சரி எப்படி இருக்க வேண்டும் என்ற வாழும் முறையைத்தான் திருவள்ளுவர் எழுதி வைத்திருக்கிறார. ஆகவே இது எக்காலத்திற்கும் பொருந்துவது. இன்றைய காலத்திற்கும் பொருந்தி வருகிறது. அதுதான் முக்கியம். ஆள்பவன் எப்படி இருக்க வேண்டும் அதற்கு என்னென்ன எல்லாம் இருக்க வேண்டும் என்பதையெல்லாம் மிக நன்றாகச் சொல்லி இருக்கிறார் நான் சில எடுத்துக்காட்டுகளோடு சொல்கிறேன், புரிந்து கொள்ள வேண்டும்.
கருத்துச் சொல்வதற்குப் பெரிய எம்.ஏ.,பி.ஏ.படித்திருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மக்களிடம் கேட்கவேண்டும். ஒரு சிறுவனை, ஏன் பள்ளிக்கூடம் போகவில்லை என்று காமராசர் கேட்கிறார். ‘பள்ளிக்கூடம் போனால் நீ சோறு போடுவாயா?’ என்று அந்தப் பையன் எதிர்த்துக் கேட்கிறான். உடனே காமராசர் என்ன செய்தார், ‘நான் சோறு போடுறேன் நீ பள்ளிக்கூடம் போறியா’ அப்படீன்னு கேட்டார். அப்படித்தான் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார் காமராசர். அந்த மாதிரி யார் சொல்கிறார்கள் என்பது முக்கியமல்ல, கருத்து தான் முக்கியம்.
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு
இந்த நான்கும் நான் நினைத்துப் பார்த்தேன்,இது உண்மையா பொய்யா என்று. இப்படி இருந்தது யார் என்று பார்த்தேன். அறிஞர் அண்ணாதான் இப்படி இருந்தவர். காங்கிரஸ் அன்றைக்குப் பெரிய இமயமலை. தகர்ப்போம் என்ற கிளம்பினார். தன்னைத் திட்டியவர்களுக்குக் கூடப் பெருமை செய்து, எல்லாருக்கும் பாராட்டுக்கள் செய்து பெருமைப்படுத்தினார். அவர் எம்.ஏ.பொருளாதாரத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில்,விடை திருத்தும்போது ஒரு பேராசிரியர் மிகவும் ஈர்க்கப்பட்டார். அப்படி ஒரு மகிழ்ச்சி அந்தப் பேராசிரியர் அடைந்தார் என்று சொல்வார்கள். அண்ணா தன்னுடைய முதல் ஆட்சியில் முதல் பட்ஜெட். அதைத் தாக்கல் பண்ணும்போது அவரு சொல்றாரு, நான் அந்தக் காலத்தில் பொருளாதாரம் படித்தது இப்போது எனக்கு உதவியாக இருக்கிறது என்று. அந்தப் பட்ஜெட் பேச்சே அதை அடிப்படையாக வைத்துத்தான் பேசுகிறார். அருமையான பேச்சு என்று சொல்வார்கள்.
இன்னொரு குறள்.
தூங்காமை கல்வி துணிவுடமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு
இந்தக் குறளுக்கு நான் நினைத்துப்பார்த்தேன்.முத்தமிழறிஞர் கலைஞர் வந்து எவ்வளவு உழைப்பு. உழைப்பு என்றால் ஒரு மனிதத் தன்மைக்கு மேலே உழைப்பு. கணினி ஆகட்டும். தமிழ்நாடு முன்னேற வேண்டும் என்பதற்காக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அந்தக் காலத்தில் தோற்றுவித்த டைட்டல் பார்க்கும் மற்ற நிறுவனங்களும் தான். இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் உலகத்தில் பெரிய பெரிய நாடுகள் இருக்கின்றன. அமெரிக்காவில் ஜான் எஃப் கென்னடி நிலவுக்கே போகவேண்டும் என்று சொல்லி, நிலாவுக்குப் போக வைத்தார்.ஆனால் சின்ன நாடு கியூபாவிடம் தோற்றார். அவருக்குச் சரியான ஆலோசகர்கள் இல்லை.
அந்தக் காலத்தில் பெரிய பெரிய கட்டுமானங்கள், கட்டடங்கள் இல்லை என்றாலும் கூடப் பெரிய பெரிய அறிஞர்களை வைத்து அவர்கள் போய் மன்னனிடம் அறிவுரை சொல்லி ஆட்சியை நடத்தி இருக்கிறார்கள். இந்த அறிவுரை என்பதைத் திருவள்ளுவர் மிக நன்றாகச் சொல்லி இருக்கிறார்.அதை பிரபாகரன் மிக அழகாக எழுதியிருக்கிறார். ஓர் அரசை ஆள்பவன் நல்ல அறிவார்ந்த அறிஞர்களை வைத்துக் கொள்ள வேண்டும். அந்த மாதிரி அறிவு உள்ளவர்களும் அரசாங்கத்திற்குப் பயன்படக்கூடியவர்களாக இருக்க வேண்டும். சும்மா படிச்சு பெரிய நோபல் பரிசு வாங்கி எல்லாம் பயன் இல்லை. ஒருவருடைய அறிவு மக்களுக்குப் பயன்படவேண்டும்
சாதாரணக் குடும்பத்திலே பிறந்து வாழ்க்கையை எளிமையாக ஆரம்பித்தவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். தந்தை பெரியாரின் மாணவராக மாறினார். அந்தக் காலத்தில் பெரியார் சொல்லித்தான் காமராசர் பள்ளிக்கூடங்களைத் திறந்தார். கல்வியிலே நாமெல்லாம் முன்னே வந்ததற்குக் காரணம் தந்தை பெரியார் அவர்கள். ஆனால் ஆசிரியர் வீரமணி அவர்கள் கருத்து வேறுபாடுகள் இருந்த அரசாங்கங்கள் இருந்தபோதும் சமூக நீதிச்சட்டங்களை அமல்படுத்த வைத்தவர். எம்.ஜி.ஆர். 9000 ரூபாய் வருமான வரம்பு சட்டம் கொண்டுவந்தபொழுது எதிர்த்துப்போராடினார். வெற்றி பெற்றார். பின்பு திருத்தம் செய்யக் காரணமாக இருந்தார். அதே போல ஜெயல்லிதா அம்மையார் முதலமைச்சராக இருந்தபொழுது 69 சதவீதம் இட ஒதுக்கீட்டை ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்க 31சி என்னும் சட்டம் தந்தார். ஆனால் மிக எளிமையாக இருப்பார்.
அறிஞர் அண்ணா அவர்கள் சுயமரியாதைத் திருமணம் சட்ட வரைவை எழுதினார். அந்தச் சட்ட வரைவை அய்யா ஆசிரியர் வீரமணி அவர்களிடம் கொடுத்து தந்தை பெரியாரிடம் காட்டி ஏதாவது மாற்றம் செய்யவேண்டுமா என்று கேட்டு வரச்சொன்னார்.அன்றைக்கு இருந்த அதிகாரிகள் எல்லாம் இதற்காக முணங்கினார்கள். பெரியாரிடம் சென்று வருவதற்கு நாளாகும்,சீக்கிரம் நிறைவேற்றவேண்டும் என்றார்கள். இருந்தாலும் தந்தை பெரியாரிடம் கேட்டு வரச்சொன்னார் அண்ணா.அதே மாதிரி ஆசிரியர் அவர்கள் கொண்டு சென்று காண்பித்தார்.தாலி கட்டி, மணமாலை மாற்றித் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருந்ததைத் தாலி கட்டி அல்லது மணமாலை மாற்றித் திருமணம் செய்துகொள்ளலாம் என்று பெரியார் நுட்பமாகக் கண்டுபிடித்து திருத்தம் செய்தார்.And என்பதற்குப் பதிலாக or என்று மாற்றியது எவ்வளவு பெரிய மாற்றம் என்பதை அண்ணா உணர்ந்து, ஆசிரியர் அவர்களிடம் சொல்லி பெரியார் என்றால் பெரியார்தான் என்று தந்தை பெரியாரின் நுண்ணறிவை அண்ணா வியந்தார் என்பது வரலாறு. அந்த மாதிரி ஆள்பவர்களுக்கு அறிவுடையவர்கள் சொல்வதைக் கேட்கும் தன்மை இருக்கவேண்டும்.
அந்த வகையில் இன்றைக்கும் திருக்குறள் பொருத்தமாக இருக்கிறது என்பதைக் கட்டுரை ஆசிரியர் மிக நன்றாகச் சொல்லி இருக்கிறார். நாம் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறோம்.எல்லோரும் விரும்புகிறார்கள். தாமஸ் சபர்சன் என்பவர் பெரிய அறிஞர். ஒரு நாடு நன்றாக இருக்கிறதா என்பதற்கு அளவுகோல் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? என்பது என்றார். மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு அரசு உதவி செய்கிறதா என்பதும் முக்கியம்.
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.
இதனை ஆங்கிலத்தில் மிக அழகாக மொழிபெயர்த்து இருக்கிறார். ஆங்கில மொழிபெயர்ப்பு மிக அருமையாக இருக்கிறது. அந்தக் காலத்தில் யார் யாரோ கட்டளைகள் கொடுத்தார்கள் என்று எழுதினார்கள்.கடவுள் எழுதிக் கொடுத்தார் என்றெல்லாம் சொல்லுவார்கள். அதெல்லாம் கட்டளைகள் கிடையாது. ஒரு மனிதர் எழுதி வைத்ததுதான் உண்மையான கட்டளைகளாக இன்றைக்கும் பயன்படுகிறது.
அந்தப் பத்துக் கட்டளைகள்
- Let virtue guide all your actions and decisions. 2. Continuously seek knowledge by learning and listening to wise individuals. 3. When making important decisions or enacting laws, consult ethical and wise advisors. 4. In judging crimes, consider all relevant factors, remain impartial, and, when needed, consult legal experts before using your authority to deliver justice. 5. Investigate the nature of each crime thoroughly and assign punishments that match the severity of the offense while also deterring future wrongdoing. 6. While administering justice, appear firm but ensure the final punishment is measured and fair. 7. Safeguard the well-being of your citizens by ensuring they are healthy, free from hunger and disease, and able to pursue a fulfilling life. 8. Acquire, develop, protect, and wisely manage resources for the benefit of the people. 9. Promote agricultural prosperity and ensure the safety and security of citizens from both internal disorder and external threats. 10. Always remember: no matter how prosperous a nation may be, it is meaningless without good governance.
இன்றும் இந்தக் கட்டளைகள் அரசுக்குச் தேவையாக இருக்கிறது. ஒரு நாடு பத்தி அப்பவே சொன்னேன். “உறுபசியும்…” என்று. அந்தக் காலத்தில் யானையை வைத்து போர் அடித்தார்கள் என்று சொல்கிறார்கள்.யானையைப் பரிசாகக் கொடுத்திருக்கிறார்கள். அந்த மாதிரி எல்லாம் இருந்த நாடு,தமிழ்நாடு. அய்ந்து ஆண்டுகள் மிகச் சிறப்பாக ஆட்சி இருந்தது. இப்போது அய்யா சொன்னது மாதிரி உணர்ச்சி வயப்பட்டு மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், அவர் யாரைத் துணை கொண்டு ஆட்சி புரியப் போகிறார் என்பதைப் பொறுத்து தான் ஆட்சி இருக்கப் போகிறது.
‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்’ என்றார் வள்ளுவர்.
பல எடுத்துக்காட்டுகள் உண்டு. வெனிசுலா, வடகொரியா, நைஜீரியா போன்ற பல நாடுகள். நல்ல வளம் நிறைந்த நாடுகள். கொள்ளையடிக்கப்படுகிறது. மக்கள் பட்டினியால் சாகிறார்க.ள் இன்று உலகத்திலே பசி பட்டினிக் கொடுமை குழந்தைகளை மிகவும் பாதிக்கிறது. மூன்று லட்சம் தமிழர்கள் ஒரே மாதத்தில் இலங்கையில் கொல்லப்பட்டார்கள் ஒரு மதவெறியனால். இன்றைக்குக் காசாவில் நடந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும் பொழுது நாம் செய்ய வேண்டிய கடமை திருக்குறளைப் பரப்பவேண்டும்.பல மொழிகளிலும் கொண்டு செல்லவேண்டும். படமெடுத்து காண்பித்து அய்யா பிரபாகரன் எழுதுவதை நாம் பரப்ப வேண்டும். தமிழர் அல்லாத மற்ற நண்பர்களுக்கு நாம் சொல்ல வேண்டு.ம் அவர்கள் மூலமாக இந்த மனித குலம் வளம் பெற வேண்டும். மகிழ்ச்சி வர வேண்டும். திருக்குறள் என்பது ஒரு வழிமுறை வாழ்வியல் முறை நூல் மட்டும் அல்ல. ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய கடமைகளை மிகவும் சிறப்பாகச் சொல்லி இருக்கக்கூடிய நூல். இவ்வளவு சிறப்பான கட்டுரையைக் கொடுத்திருக்கும் அய்யா பிரபாகரன் அவர்களை இப்போது அன்புடன் அழைத்து ஏற்புரை தர வேண்டிக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டு உரையாற்றினார்.
முனைவர் பிரபாகரன்
வணக்கம். என்னுடைய கட்டுரையை ஆய்வு செய்து அருமையான ஓர் ஆய்வு உரையை வழங்கிய மருத்துவர் இளங்கோவன் அவர்களுக்கு நன்றி. ‘திராவிடப்பொழில்’ ஆசிரியர் குழுவிற்கும் நன்றி. கட்டுரையில் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் வள்ளுவருடைய கருத்துக்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் அவர் எழுதியிருந்தாலும் அது இன்றைக்கும் பொருந்தும்.. எல்லா நாட்டிற்கும் பொருந்தும்.
பல காலமாகவே உலகத்தில் பசி பட்டினி வன்முறை எல்லாம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலக வரலாற்றில் பார்த்தால் ஓர் 50 ஆண்டுகள் போர் இல்லாமல் இல்லை. அதற்கு முக்கியமான காரணம் ஆட்சி செய்தவர்கள்தான் காரணம். ஆட்சி ஒழுங்காக இருந்தால் நாடு ஒழுங்காக இருக்கும். ஓர் ஆட்சி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்றால் legislative, judicial, and executive பிரிவுகள் வேண்டும். குடியாட்சியாக இருந்தாலும் அதில் மூன்று பிரிவுகள் உண்டு. இந்த லெஜிஸ்லேடிவ் பிரான்ச் அந்தக் காலத்தில் கிடையாது. முடி ஆட்சி காலத்தில் இல்லை. இந்த மூன்று துறைகளுக்கும் மன்னர்தான் தலைவன். இந்தக் காலத்தில் மக்களாட்சி வளர்ச்சியில் முக்கியமாகப் பார்க்க வேண்டியது லெஜிஸ்லேடிவ் பிரான்ச். அது தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டது. மக்கள் தங்களை ஆள சரியான ஒருவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மக்கள் சரியான ஒருவனைத் தேர்ந்தெடுக்காவிட்டால் அந்த ஆட்சி நிலையாகச் சரியாக இருக்காது. இருக்க முடியாது. அதைத்தான் பிளாட்டோ சொல்லுகின்ற பொழுது யார் ஒருவன் அரசனாக இருக்க வேண்டும் என்றால் தத்துவவாதி அரசனாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்.
வள்ளுவர் தத்துவவாதி அரசனாக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை.ஆனால் ஓர் அரசன் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்று சொல்கிறார். கல்வியைத்தான் முக்கியமாகச் சொல்கிறார். மன்னர் அக்பர் போன்றவர்கள் எல்லாம் 13 வயதிலேயே அரச பதவிக்கு வந்தவர். அக்பருக்குக் கல்வி அறிவெல்லாம் கிடையாது. ஆனால் அவருக்கு நவரத்தின குழு என்ற ஒரு குழு இருந்தது. அந்தக் குழுவில் இருக்கும் பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு, அவர்களின் துணை கொண்டுதான் ஆட்சி நடந்தது. அதுபோல இன்றைக்கும் தமிழ்நாட்டிலே ஏதோ ஓர் உணர்ச்சிவசப்பட்டு அரசியல் மாற்றங்கள் நடந்திருக்கிறது. ஆனாலும் ஆட்சி ஒழுங்காக நடைபெற வேண்டும் என்றால், பெரியவர்களை- எப்படி ஆட்சி நடத்த வேண்டும் என்பதைத் தெரிந்தவர்களை, எப்படி முந்தைய ஆட்சிகள் ஒழுங்காக நடைபெற்றன என்பதைத் தெரிந்து அதன்படி நடக்க வேண்டும். அதைப் பின்பற்றி நடக்க வேண்டும். கல்வி முக்கியம். ஆட்சி என்றாலே அதனுடைய அடிப்படையான கொள்கை மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். மக்களுக்குத் தேவையான கல்வி வேண்டும். அவர்களுக்கு வேண்டிய மருத்துவம், செல்வம் இவையெல்லாம் துணை இருக்க வேண்டும்.
.செல்வத்தைப் பற்றிச் சொல்லுகின்ற பொழுது வள்ளுவர் சொல்லுகின்றார், ஒரு மன்னன் அல்லது ஆட்சியில் இருப்பவன் செல்வத்தை உருவாக்க வேண்டும். நல்ல அறிஞர்கள் வாழும் நாட்டிலே செல்வத்தை உருவாக்க வேண்டும். எப்படிச் செல்வத்தை உருவாக்க வேண்டும் என்றால், இன்றைக்குத் தொழில் முனைவோர்கள் இருந்தால்தான் செல்வத்தை உருவாக்க முடியும். அதனால்தான் முன்னாள் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் பல இடங்களுக்குச் சென்று, பல தொழில் முனைவோர்களைக் கொண்டு வந்து தமிழ்நாட்டில் பல புதிய தொழில் தொடங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். அதுபோல மக்களுக்குக் கல்வி, மக்களுக்கு மருத்துவம் என எல்லாவற்றிலும் கடந்த அய்ந்து ஆண்டுகளில் பல முன்னேற்றங்கள் நடைபெற்று இருக்கின்றன. இது போன்ற முன்னேற்றங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும். அதைப்போல நல்ல ஆட்சி என்றால் ஊழல் இல்லாமல் இருக்க வேண்டும். ஊழல் தான் எல்லாவற்றையும் கெடுக்கிறது. ஊழல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.நல்ல ஆட்சி அமைவது என்பது மக்களைப் பொருத்தது, மக்களுக்கும் தொடர்ந்து நாம் பரப்புரை செய்ய வேண்டும். எப்படிப்பட்ட ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது மக்களுக்குச் சென்றடைய வேண்டும். உணர்ச்சிவசப்பட்டுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கக்கூடாது. அதுபோல மக்களும் ஒருவர் கொடுக்கக்கூடிய பரிசுகளுக்காகவோ,பணத்திற்காகவோ வாக்கு அளிக்கக் கூடாது என்பதை எல்லாம் மக்களுக்கு நாம் சொல்ல வேண்டும். மக்கள் கையில் தான் அதிகாரம் இருக்கிறது. சரியாக அதிகாரத்தைப் பயன்படுத்தாவிட்டால் சரியான தலைவர்களைத் தேர்ந்தெடுக்க முடியாது. முக்கியமான ஒரு குறளில் வள்ளுவர் சொல்லுகிறார்.
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு
மருத்துவர் இளங்கோவன் சொன்னதைப் போலப் பல நாடுகளில் வேந்தமை நன்றாக இல்லாத நாடுகளில்தான் பிரச்சினை.இந்தியாவிலும் அப்படித்தான். அதற்காகத்தான் வள்ளுவருடைய இந்தப் பத்துக் கட்டளைகள், விதிமுறைகள் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். பலரும் படிக்க வேண்டும். வள்ளுவருடைய கருத்துகள் என்றைக்கும் பொருந்தும், எந்த நாட்டுக்கும் பொருந்தும்.இந்த ஏற்புரைய வழங்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி “ என்று குறிப்பிட்டு உரையாற்றினார்.
நிகழ்வின் முடிவில் ‘திராவிடப்பொழில்’ ஆசிரியர் குழு உறுப்பினரான முனைவர் வா. நேரு அனைவருக்கும் நன்றி கூறினார்.
தொகுப்பு: முனைவர் வா.நேரு
