பீஜிங், ஜூன் 6– தைவான் சென்றதற்காக நியூசிலாந்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீனாவுக்குள் நுழைய அந்த நாடு தடைவிதித்துள்ளது. கடந்த மே மாதம் நியூசிலாந்தை சேர்ந்த பல்வேறு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களான லாரா மெக்ளூர், டங்கன் வெப். மவுரீன் பக், டேவிட் வில்சன் ஆகியோர் 5 நாள் பயணமாக தைவானுக்கு சென்றனர்.
தொடர்ந்து அந்த நாட்டின் துணை அதிபர் சியாவ் பி-கிம் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளைச் சந்தித்தனர். இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாகவும், பிரிவினைவாத சக்திகளுடன் கைகோர்ப்பதாகவும் சீனா குற்றஞ்சாட்டியது.
இந்தநிலையில் தைவானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட 4 நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப் பினர்களும் சீனா, ஹாங்காங் மற்றும் மெக்காவிற்குள் நுழைய பீஜிங் அரசு ஒரு ஆண்டுக்கு தடை விதித்துள்ளது. நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து சீனா இத்தகைய பயணத் தடையை விதிப்பது இதுவே முதல் முறையாகும்.
அணு ஆயுத புதிய ஆலை: வட கொரியா திறந்தது: அதிபர் கிம் ஜாங் உன் ஆய்வு
பியோங்யாங், ஜூன் 6– வடகொரியா, தனது அணு ஆயுத உற்பத்தியை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அணு ஆயுதத்திற்கான எரிபொருள் மற்றும் பிற பொருட்களை உற்பத்தி செய்வதற்கான புதிய ஆலையை அந்நாட்டு அரசு திறந்துள்ளது. பன்னாட்டு தடைகளை தாண்டி, திறக்கப்பட்டுள்ள இந்த ஆலையை, அதிபர் கிம் ஜாங் உன் நேரில் ஆய்வு செய்தார். வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நேற்று (5.6.2026) அதிபர் கிம் ஜாங் உன் இந்த புதிய ஆலையை பார்வையிட்டார்.
அப்போது, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் வடகொரியாவின் அணுசக்தி பொருட்கள் உற்பத்தி திறன் இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய ஆலை நாட்டின் எந்த பகுதியில் அமைந்துள்ளது என்ற விவரங்களை பாதுகாப்பு காரணங்களுக்காக வடகொரியா வெளியிடவில்லை. மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் நீடித்து வரும் சூழலில் வடகொரியாவின் இந்த நடவடிக்கை கவனம் பெற்றுள்ளது.
23 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு
ரூ.85 கோடி ஜீவனாம்சம் பெற்ற
இந்திய வம்சாவளி பெண்
லண்டன். ஜூன் 6– பிரிட்டன் தலைநகர் லண்டனை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் வர்ஷாவுக்கும், மூத்த வழக்குரைஞர் பத்ரேஷுக்கும் 30 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு 3 பிள்ளைகள் பிறந்தன.
அதன்பின் பல பெண்களுடன் பத்ரேஷுக்கு தொடர்பு ஏற்பட்டதால் 2002ஆம் ஆண்டில் லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வர்ஷா வழக்கு தொடர்ந்தார். அப்போது அவருக்கு ரூ.3.5 கோடி ஜீவனாம்சம், ஒரு கார் வழங்கப்பட்டது. இருவரும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றனர்.
ஆனால், கடந்த 2011இல் பத்ரேஷ் பண மோசடி வழக்கில் சிக்கிய போது அவருக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகள் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கூடுதல் ஜீவனாம்சம் கேட்டு லண்டன் நீதிமன்றத்தில் வர்ஷா மீண்டும் வழக்கு தொடர்ந்தார். விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவை வர்ஷாவுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து பத்ரேஷ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வில்லியம்ஸ், ‘‘வருமானத்தை மறைத்து மனைவிக்கு குறைந்த ஜீவனாம்ச தொகையை பத்ரேஷ் வழங்கியுள்ளார். எனவே, அவருக்கு ரூ.85 கோடி ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். இதன்படி சுமார் 23 ஆண்டுக்குப் பிறகு வர்ஷா ரூ.85 கோடி ஜீவனாம்சத்தைப் பெற்றிருக்கிறார்.
