சென்னை, ஜூன் 05 தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் உள்ள 152 உயர்சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு சரண்டர் செய்யப்படுவதைத் தடுக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச் சர் ஜோசப் விஜய்க்கு, எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
உச்ச நீதிமன்ற உத்தரவு அதிர்ச்சியளிக்கிறது
“சூப்பர் ஸ்பெஷாலிட்டி என அழைக்கப்படும் ‘உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு’களுக்கான 152 இடங்களை ‘அகில இந்திய தொகுப்பிற்கு’ மாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் 29.5.2026 அன்று உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்வாணி என்பவர் தொடர்ந்த வழக்கில், தங்கள் தலைமையிலான புதிய அரசின் சார்பில் முறை யான வாதங்கள் எடுத்து வைக்கப்படாத காரணத்தால் இச்சூழல் உருவாகியுள்ளது. இது தமிழ்நாட்டின் பொது சுகாதாரக் கட்டமைப்புக்கு ஆபத்தாக அமைந்திருக்கிறது.
இந்த வழக்கில் முந்தைய திமுக அரசின் சார்பில் வெற்றி கரமாக வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டு, நிரப்பப்படாமல் உள்ள 152 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு செல்வது தடுத்து வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போதோ, இந்த வழக்கில் அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞரே ‘அந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டிக்குரிய 152 இடங்களை சரண்டர் செய் கிறோம்’ என ஒப்புக்கொண்ட காரணத்தால், ‘நிரப்பப்படாமல் உள்ள 152 சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களை அகில இந்திய தொகுப்பிற்கு மாற்ற வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
கிராமப்புற மருத்துவ சேவைக்கு பாதிப்பு
அரசுப் பணியில் உள்ள மருத்துவர்கள் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு மேற்கொள்ளும் இடஒதுக்கீடு, திமுக அரசு எடுத்த நடவடிக்கைகளால் கடந்த 2022-இல் மீண்டும் உறுதி செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவர்கள் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு மேற்கொண்டு, அதன் மூலம் கிராமப்புற மக்களுக்கு உயரிய மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு இது மிக முக்கியமான காரணியாக இருந்து வந்தது.
“தற்போது புதிய அரசின் அலட்சியத்தால் அந்த இடங்கள் பறிபோகும் சூழல் எழுந்துள்ளது வேதனையாக இருக்கிறது.
முதலமைச்சருக்கு கோரிக்கை
ஆகவே, முதலமைச்சர் ஜோசப் விஜய் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண் டும். அந்த 152 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்களும் அகில இந்திய தொகுப்பிற்கு சரண்டர் செய்யப்படுவதைத் தடுத்து, தமிழ்நாடு அரசுப் பணி மருத்துவர்களே அந்த இடங்களில் சேருவதற்கான சூழலை அவசர மாக ஏற்படுத்த வேண்டும் எனத் தங்களைக்கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
