முதுகுளத்தூர் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு!

ராமநாதபுரம், மே 4- ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மேலத்தூவலில் பழமையான சமணத் தீர்த்தங்கரர் சிலை இருப்பதாக காவல் துறையில் பணியாற்றும் காவலர் வேல்முருகன் என்பவர் தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் சென்னையில் உள்ள அகிம்சை நடை குழுவை சேர்ந்த தமிழ் சமணர்கள் அச்சிற்பத்தை உள்ளூரை சேர்ந்த கருப்பண்ணன் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் பாதுகாக்க ஏற்பாடு செய்தனர். இதை நேரில் ஆய்வு செய்த ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு இதுபற்றி கூறியதாவது:-

மகாவீரர் சிற்பம்

இந்த சிற்பம் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை பெருவழியில் புல்லக்கடம்பன், புல்லூர், மேலஅரும்பூர், புல்லுக்குடி, புல்லங்குடி, கோரைக்குட்டம், பொக்கனாரேந்தல், மேலக்கிடாரம், மேலச் செல்வனூர், மாறந்தை ஆகிய ஊர்களிலும், திருப் புல்லாணியில் இருந்து மதுரை, கேரளா செல்லும் பெருவழியில் கீழச்சீத்தை, கீழச் சாக்குளம், பசும் பொன், கமுதி ஆகிய ஊர்களிலும், ராமநாதபுரம் மதுரை பெருவழியில் மஞ்சூர், கலையூர், அருங்குளம், சூடியூர் ஆகிய ஊர்களிலும், தொண்டியிலிருந்து ஆனந்தூர் வழியாக மதுரை செல்லும் பெருவழியிலும் சமண மதம் பரவி இருந்த தடயங்களும், தீர்த்தங்கரர் சிற்பங்களும் கிடைத்துள்ளன.

இம்மாவட்ட பெருவழிகள் அடுத்த மாவட்டங்களில் தொடரும்போது அப்பகுதியிலும் சமணத் தடயங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது மேலத் தூவலில் 3 அடி உயரம், 2 அடி அகலம் உள்ள கருங்கல் சிற்பத்தில் தாமரைப்பீடத்தின் மேல் மகரத்தண்டுள்ள சிம்மாசனத்தில் அர்த்தபரியங்க ஆசனத்தில் அசோக மரத்தின் கீழ் அமர்ந்த நிலையில் மகாவீரர் காட்சியளிக்கிறார்.

அவர் தலையின் மேல் முக்குடை அமைப்பும், பின்புறம் பிரபாவளி எனும் ஒளிவட்டமும் உள்ளன.

இரு சாமரதாரிகள் இருபுறமும் உள்ளனர். முக்குடை சமண சமய சின்னம் ஆகும். இதன் காலம் கி.பி.11ஆம் நூற்றாண்டாக கருதலாம்.

பல இடங்களில் தீர்த்தங்கரர் சிற்பத்தை மட்டும் வைத்து வழிபடும் எளிமையான பள்ளிகள் தான் இருந்துள்ளன.

அத்தகைய ஒரு சமணப்பள்ளி இவ்வூரில் இருந்துள்ளது. இங்குள்ள திடலில் இரும்பு காலத்தை சேர்ந்த வழுவழுப்பான கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள் 20 ஏக்கர் பரப்பளவில் சிதறி கிடக்கின்றன.

எனவே, சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இரும்பு காலம் முதல் இவ்வூர் மக்கள் குடியிருப்பாக இருந்துள்ளதற்கு இது ஆதாரமாக உள்ளது என கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *