மேட்டூர், ஜூன் 4 மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,816 கனஅடியாக சரிந்துள்ளது. நீர்மட்டம் 80 அடிக்கும் கீழ் உள்ளதால் வரும் 12ஆம் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என்பதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணை
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்றுமுன்தினம் 2.6.2026) 5,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 4,000 கனஅடியாக சரிந்துள்ளது. இதேபோல் மேட்டூர் அணைக்கு நேற்று 4,312 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று (3.6.2026) காலை 3,861 கன அடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்கு வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இந்த நீரின் அளவை காட்டிலும், அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணை நீர்மட்டம் உயர்ந்த வண்ணம் உள்ளது. 1.6.2026 அன்று 79.26 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று (3.6.2026) காலை 79.76 அடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களில் நீர்மட்டம் அரைஅடி உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 41.71 டிஎம்சியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 90 அடிக்கும் மேல் இருக்கும்பட்சத்தில் டெல்டா பாசனத்திற்கு ஆண்டு தோறும் ஜூன் 12ஆம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை தொடங்குவது தாமதமாகி உள்ளது. மேலும் இயல்பை விட குறைவாகவே பருவமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஒவ்வொருஆண்டும் ஜூன்12ஆம் தேதி மேட்டூர் அணையில்இருந்து ஜூன் மாதம் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 80 அடிக்கும் கீழ் உள்ள நிலையில் அடுத்த 10 நாட்களில் 90 அடியை தாண்ட வாய்ப்பு இல்லை. கருநாடக அணைகளிலும் நீர்மட்டம் குறைவாகவே உள்ளது. தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கினாலும் அங்குள்ள அணைகள் நிரம்பினால்தான் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கப்படும். இந்தாண்டு ஜூன் 12ஆம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என்பதால் டெல்டாவில் குறுவை சாகுபடிக்கு வாய்ப்பு இல்லை. சம்பா சாகுபடிக்காவது தண்ணீர் கிடைக்குமா என்ற நிலையில் விவசாயிகள் உள்ளனர். தவெக அரசு கூட்டணியில் உள்ள கருநாடக காங்கிரஸ் அரசிடம் பேசி சம்பா சாகுபடிக்காவது முழுமையாக நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
நீர்மட்டம் மேலும் சரியும் அபாயம்!
கடந்த 5 ஆண்டுகளில் 2024ஆம் ஆண்டை தவிர்த்து பிற ஆண்டுகளில் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு மட்டும் ஜூலை 28இல் தாமதமாக மேட்டூர் அணை திறக்கப்பட்டது. 2022இல் மே 24ஆம் தேதியே திறக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போதைய மேட்டூர் அணை நீர் இருப்பு, கர்நாடகா அணைகள் நீர் இருப்பு கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைவாக உள்ளது. குறிப்பாக மேட்டூரில் 79 அடி, கே.ஆர்.எஸ் 81 அடி, கபினியில் 33 அடி, ஹேமவதியில் 86 அடி நீர் மட்டம்தான் உள்ளது. இந்நிலையில் தாமதமாக துவங்கும் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடையும் சூழலும் இல்லாத காரணத்தால் ஜூன் மாதத்தில் பருவமழை காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் இயல்பைவிட குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் கருநாடாக அணைகள் தமிழ்நாட்டின் அணைகள் நீர் இருப்பு மேலும் சரிவடைய வாய்ப்பு உள்ளது.
