4,250 சதுர மீட்டர் பரப்பு, 1800 ஆண்டுகள் பழமை: பவளப்பாறை லட்சத்தீவில் கண்டுபிடிப்பு!

கடற்கரைகளை சூறாவளி மற்றும் சுனாமி போன்ற பேரிடர்களில் இருந்து பாதுகாப்பதில் பவளப்பாறைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

லட்சத்தீவின் கத்மத் தீவுக்கு அருகில், உலகிலேயே இதுவரை பதிவு செய்யப்பட்டவற்றில் மிகப்பெரிய அளவிலான வாழும் பவளப்பாறை காலனி ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். உள்ளூர் மக்களால் பொட்டேட்டோ பேட்ச் என்று அழைக்கப்படும்.

உலகில் இன்று நாம் பார்க்கும் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நவீன நாடுகள் உருவாவதற்கு முன்பே, கடலுக்கு அடியில் ஒரு உயிர் பிறந்து, வளர்ந்து, இன்றும் வாழ்ந்து வருகிறது என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். லட்சத்தீவு கடற்பகுதியில் உலகையே வியப்பில் ஆழ்த்தும் பிரம்மாண்ட வரலாற்று அதிசயத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அங்குள்ள கத்மத் (Kadmat) தீவுக்கு அருகில், உலகிலேயே இதுவரை பதிவு செய்யப்பட்டவற்றில் மிகப்பெரிய வாழும் பவளப்பாறை காலனி ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உள்ளூர் ஆழ்கடல் நீச்சல் வீரர்களுக்கு இந்த இடம் பல ஆண்டுகளாக அத்துப்படி. அவர்கள் இதனை செல்லமாக பொட்டேட்டோ பேட்ச் (Potato Patch – உருளைக்கிழங்கு திட்டு) என்றுதான் அழைத்து வந்தனர். காரணம், அறிவியல் பூர்வமாக இது ‘பவோனா கிளாவிஸ்’ (Pavona clavus) என்ற ‘உருளைக்கிழங்கு பவளப்பாறை’ வகையை சேர்ந்தது. ஆனால், விஞ்ஞானிகள் உள்ளே இறங்கி அளந்து பார்த்தபோதுதான் இதன் உண்மையான விஸ்வரூபம் தெரியவந்தது. இந்த ஒட்டுமொத்த பவளப்பாறையும் சுமார் 4,250 சதுர மீட்டர் பரப்பளவிற்குப் பரந்து விரிந்து கிடக்கிறது. அதாவது, உலகளவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பல பவளப்பாறைகளை விட இது பல மடங்கு பெரியது.

இந்த கண்டுபிடிப்பில் விஞ்ஞானிகளை உறைந்து போகச் செய்த விஷயம் என்னவென்றால், கடந்த பல நூற்றாண்டுகளாக இவ்வளவு பெரிய பரப்பில் வளர்ந்து கிடக்கும் இந்த பவளப்பாறை, வெவ்வேறு பாறைகள் அல்ல; இது ஒட்டுமொத்தமாக ஒரே ஒரு தனி உறைவிட உயிரினமாக தொடர்ந்து வளர்ந்து வந்துள்ளது. இதன் துல்லியமான வயதை கணக்கிடும் பணிகள் நடந்துவந்தாலும், இது 700 முதல் 1,800 ஆண்டுகள் வரை பழமையானதாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. ரோமானியப் பேரரசு, சோழர் காலம் போன்ற பழங்கால வரலாறுகள் நடந்து கொண்டிருந்த போதே கடலுக்கு அடியில் இந்த உயிர் தனது வாழ்க்கையைத் தொடங்கிவிட்டது.

இன்று உலகளவில் புவி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாகப் பவளப்பாறைகள் நிறமிழந்து (Coral Bleaching) மொத்தமாக அழிந்து வருகின்றன. ஆனால், லட்சத்தீவின் இந்த பொட்டேட்டோ பேட்ச் பவளப்பாறை நிஜ ‘சூப்பர் மேன்’ போலச் செயல்பட்டுள்ளது. கடந்த பல நூற்றாண்டுகளில் எத்தனையோ கடல் வெப்ப அலைகள், கடுமையான சூறாவளிகள், கடல் வெப்பநிலை உயர்வு போன்ற இயற்கைச் சீற்றங்கள் தாக்கிய பிறகும், இதன் 58.47% பகுதி இன்னும் செழுமையோடு, ஆரோக்கியமாக உயிர் பிழைத்திருக்கிறது. மற்ற பவளப்பாறைகள் அழியும் போது, இதுமட்டும் எப்படி இவ்வளவு கெத்தாக சுற்றுச்சூழல் அழுத்தங்களைத் தாங்கி நிற்கிறது என்ற இதன் உயிரியல் ரகசியத்தை ஆராய விஞ்ஞானிகள் ஆவலோடு முகாமிட்டுள்ளனர்.

மரங்களின் தண்டு வளையங்களை வைத்து அதன் வயதைக் கண்டுபிடிப்பது போல, இந்த பவளப்பாறையின் எலும்புக்கூடுகளை ஆய்வு செய்வதன் மூலம் கடந்த நூற்றுக்கணக்கான ஆண்டுகளின் உலக வானிலை எப்படி இருந்தது? இந்தியப் பெருங்கடலின் வெப்பநிலை எப்போது மாறியது? போன்ற பூமியின் ஒட்டுமொத்த கடல்சார் வரலாற்று ரகசியங்களையும் நம்மால் அறிந்துகொள்ள முடியும். உலகெங்கிலும் பவளப் பாறைகள் அழிந்து வரும் இந்த டிஜிட்டல் யுகத்தில், லட்சத்தீவு கடலுக்கு அடியில் நூற்றாண்டுகளாகப் போராடி உயிர்வாழும் கிரேட் பொட்டேட்டோ பேட்ச் ஒட்டுமொத்த உலகிற்கும் இயற்கை தந்துள்ள ஒரு அரியதொரு அரும்பெரும் கொடை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *