கருநாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சிப்பது
அரசியலமைப்புச் சட்டத்திற்கும் விரோதம், நியாயத்திற்கும் விரோதமாகும்!
எதிர்கால சந்ததிகளின் உரிமைகளுக்காக
நம் உயிரையும் கொடுக்கத் தயார்!
அரசியலமைப்புச் சட்டத்திற்கும் விரோதம், நியாயத்திற்கும் விரோதமாகும்!
எதிர்கால சந்ததிகளின் உரிமைகளுக்காக
நம் உயிரையும் கொடுக்கத் தயார்!
திருவாரூர், ஜூன் 3 ‘‘ கருநாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சிப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கும் விரோதம், நியாயத்திற்கும் விரோதமாகும்! எதிர்கால சந்ததிகளின் உரிமைகளுக்காக நம் உயிரையும் கொடுக்கத் தயார்’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
திராவிடர் கழகத்தின் சார்பில்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
மேகதாது அணை கட்டும் முன்னெடுப்பு, தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் ஆபத்து! தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையில், கருநாடகாவின் பிடிவாதத்தையும், ஒன்றிய அரசு, உச்சநீதிமன்றத்தின் மெத்தனப் போக்கையும் கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில், 31.5.2026 அன்று காலை திருவாரூரில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவ் வார்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அவரது கண்டன உரை வருமாறு:
மிகக் குறுகிய காலத்திலே, சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு என்ற அளவிலே இருந்தாலும், இவ் வார்ப்பாட்டம் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
எதிர்கால சந்ததிகளின் உரிமைகளுக்காக நம் உயிரையும் கொடுக்கத் தயார்!
காவிரியின் குறுக்கே மேகதாது அணைகளைக் கட்டும் கருநாடக அரசினுடைய முயற்சிகள் கைவிடப்பட வேண்டும், உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், தமிழ்நாட்டினுடைய அண்டை மாநிலங்களான குறிப்பாக புதுச்சேரி போன்றவையினுடைய நீர் ஆதார உரிமைகளை எல்லாம் பறிக்கக் கூடாது என்பதற்காகவே இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம். எதிர்காலத்திலே இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், தமிழ்நாடு, அதுவும் வெறும் டெல்டா பகுதி மட்டுமல்ல, மற்ற பகுதிகளும் பாலைவனமாக ஆகக் கூடிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. நம்முடைய வாழ்வாதாரம், உணவு இவை எல்லாம் பாழாகும். ‘சோழ வளநாடு சோறுடைத்து’ என்பதை எல்லாம் பொய்யாக்கக் கூடிய அளவிற்கு, சோழ வளநாடு அல்ல; தமிழ்நாடே வறுமை உடைத்து என்று சொல்லக்கூடிய அளவிற்கு மாறக்கூடிய ஒரு பேரபாயம் இருக்கிறது. அதற்காகத்தான் கொளுத்தும் வெய்யிலாக இருந்தாலும் தாய்மார்களும், விவசாயத் தோழர்களும், ஒத்த கருத்துள்ள அனைத்து இயக்கத் தோழர்களும் இங்கே வந்து வெய்யிலோ, வெப்பமோ நமக்கு பொருட்டல்ல; எதிர்கால வாழ்வுக்கு, எதிர்கால சந்ததிகளின் உரிமைகளுக்கு நாம் போராடி, அந்த உரிமைகளுக்காக நம் உயிரையும் கொடுக்கத் தயார் என்று சொல்லக்கூடிய, அந்த உணர்ச்சியோடுதான் இந்த நேரத்திலே அவசர அவசரமாக இந்த ஆரூரிலே இந்தக் கிளர்ச்சியை தொடக்கி இருக்கிறோம்.
திருவாரூரிலே இப்படிப்பட்ட கிளர்ச்சியை நடத்துவதற்கு நான் சொன்ன நேரத்திலே, முக மலர்ச்சியோடு அதற்கான ஏற்பாடுகளைச் செய்து, கடந்த மூன்று நாள்களும் நாகை, திருவாரூர் மற்ற மற்ற மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்த மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அருமைத் தோழர்கள் ஜெயக்குமார் அவர்களே, குணசேகரன் அவர்களே, இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்றிருக்கக்கூடிய திருவாரூர் மாவட்டத் தலைவர் எஸ்.எஸ்.எம்.கே. அருண்காந்தி அவர்களே, விவசாய தொழிலாளர் அணியின் மாநில செயலாளர் செயல்வீரர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மோகன் அவர்களே, அதுபோல மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி அவர்களே, இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு சிறப்பிக்கின்ற நம்முடைய கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்களே, திருவாரூர் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக செயலாளரும், என்றும் நம்மோடு இரட்டைக்குழல் துப்பாக்கியாகவே இருந்து கொண்டிருக்கக்கூடிய அருமைச் சகோதரர் பண்பாளர் சட்டமன்ற உறுப்பினர் தோழர் சகோதரர் பூண்டி கே.கலைவாணன் அவர்களே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் அன்பிற்குரிய தோழர் முருகையன் அவர்களே, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய நகர செயலாளர் டி.முருகையன் அவர்களே, திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் முருகையன் அவர்களே மற்றும் நகர செயலாளர் பிரகாஷ் அவர்களே, மக்கள் நீதி மய்யத்தினுடைய மாவட்டச் செயலாளர் ஹாஜா மைதீன் அவர்களே, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளர் ஆரூர் சீனிவாசன் அவர்களே, மனிதநேய மக்கள் கட்சி யின் மாவட்டச் செயலாளர் குத்புதீன் அவர்களே, எஸ்டிபிஅய்யினுடைய மாவட்ட தலைவர் மாஸ் அஜீஸ் வைஜி அவர்களே, ஒன்றிய திமுக செயலாளர் தேவா அவர்களே, திராவிட விவசாய சங்கத் தொழிலாளர்களே, அருமை விவசாயிகளான தாய்மார்களே, பல மாவட்ட தலைவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் அத்தனை பேரும் இந்த அறிக்கையை பார்த்து கடலூர் மாவட்டத்தில் இருந்தும்கூட மிக அதிக அளவில் வந்திருக்கிறார்கள்.
அந்த மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள், பொறுப்பாளர்கள், தாய்மார்கள் எல்லாம் வந்திருக்கி றார்கள் நேரத்தின் நெருக்கடியைக் கருதி ஒவ்வொரு வரையும் தனித்தனியே குறிப்பிடவில்லை. தஞ்சை மாவட்டம் தொடங்கி, கடலூர் மாவட்டம், சிதம்பரம் மாவட்டம், புதுச்சேரி மாநிலம், காரைக்கால் இப்படிப்பட்ட பகுதிகள்; அதேபோல இந்த பகுதியிலே பட்டுக்கோட்டை வரையிலே, எல்லா பகுதிகளில் இருந்தும் வந்திருக்கக்கூடிய இயக்கத்தினுடைய முக்கிய பொறுப்பாளர்களான தலைவர், செயலாளர், போராட்ட வீரர்களே, அதுபோலவே நன்றி உரை கூற இருக்கக்கூடிய மாவட்டச் செயலாளர் தோழர் பிளாட்டோ அவர்களே, தாய்மார்களே, பெரியோர்களே, செய்தியாளர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பார்ந்த வணக்கம்.
அரசியலமைப்புச் சட்டத்திற்கும் விரோதம், நியாயத்திற்கும் விரோதமாகும்!
மேகதாது அணையை பொறுத்தவரையிலே, ‘‘உச்சநீதிமன்றம் தான் நமக்கு நீதி கொடுக்கும்’’ என்று கடைசி நேரத்திலே நம்பிக்கை வைத்தோம். நாம் சட்டபூர்வமாக போராடுவதற்கு அதுதான் வழி. ஏற்கெனவே காவிரி நடுவர் மன்றம் என்ற காவிரி விசாரணைக் குழு – நீரளிப்புக் குழு இருக்கிறதே, அக்குழுவே நமக்குச் சாதகமாக அமையவில்லை. இன்னும் கேட்டால், அது ஒருதலைபட்சமாகத்தான் பல நேரங்களில் இருக்கிறது. தமிழ்நாட்டுக்குரிய பங்களிப்பு நீர் என்பதுபற்றி, கொஞ்சம் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள் இதனை நன்றாக அறிந்து மக்கள் மத்தியிலே பரப்பவேண்டும். நம்ம விவசாயிகளுக்கு – முழுக்க முழுக்க அவர்களுக்கு இந்தப் பிரச்சினை என்ன என்று தெரியாது. கருநாடக அரசு, காவிரி எங்கள் பக்கத்தில் தான் உற்பத்தியாகிறது; ஆகவே, அதற்கு நாங்கள்தான் உரிமை உடையவர்கள். வேறு எந்த மாநிலத்துக்கும் உரிமை இல்லை என்று ஓர் அகங்காரம், ஓர் ஆணவத்தோடு இருக்கிறது. அது அரசியலமைப்புச் சட்டத்திற்கும் விரோதம், நியாயத்திற்கும் விரோதமாகும்.
மேகதாதுக்காக மட்டும்
நாம் போராடவில்லை!
நாம் போராடவில்லை!
அங்கே உற்பத்தியாகலாம். ஆனால், அந்த ஆறு எந்த மாவட்டம் வரைக்கும் ஓடி வருகிறது. அதனால்தான் மேட்டூரில் தண்ணீர் திறந்தால், கடைமடை காரைக்கா லுக்கு அடுத்து சிதம்பரம் எல்லையையொட்டிப் போய்ச் சேர வேண்டும் என்று நினைக்கிறோம். ஆகவே, எல்லாருக்கும் உரிமை உண்டு. அதுமட்டுமல்ல, ‘உலக நதி நீர் தாவா’ என்று வந்தால், அந்த நதிநீர் சட்டத்தில் கூட நியாயங்கள், சில வரைமுறைகள் உண்டு. அப்படியில்லையானால், அறச்சீற்றம் ஏற்படும். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், அதற்காகத்தான் நாம் ஆரம்பத்திலிருந்து போராடுகிறோம். வெறும் மேக தாதுக்காக மட்டும் நாம் போராடவில்லை.
தாய்மார்களுக்குச் சொல்கிறேன், இன்றைக்கு இருக்கிற இளைஞர்களுக்குச் சொல்கிறேன். 1986 ஆம் ஆண்டு, முதலமைச்சராக எம்.ஜி.ஆர். இருந்தார். அப்போது இதே திருவாரூரில் ஒரு வாரம், நான் தங்கி இருந்து, எல்லா கிராமங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து, தாய்மார்கள், சகோதரிகள், விவசாயத் தொழிலாளர் சார்பாக, திராவிட விவசாயத் தொழிலாளர்கள் சார்பாக போராட்டம் நடத்தியதால், கைதானோம். திருச்சி சிறைச்சாலையில், நான் ஒரு வாரம் இருந்தேன். காரணம், நடுவர் மன்றம் வேண்டும் என்று அப்போது கேட்டோம். எப்போது? 40 ஆண்டுகளுக்கு முன்னால். இன்றைய இளைஞர்களுக்கு இந்த வரலாறு தெரியாது. இதே கோயில் சன்னதிக்கு முன்புதான் போராட்டம் நடந்தது. எங்களைக் கைது செய்தார்கள். மாலை வரையில் வைத்திருந்தார்கள். பிறகு அதிகாரிகள் என்ன சொன்னார்கள் என்றால், ‘‘முதலமைச்சரிடமிருந்து எந்த உத்தரவும் வரவில்லை. ஆகவே, எங்களுக்கு ரிமாண்ட் செய்வதைத் தவிர வேறு வழி இல்லை’’ என்றார்கள்.
1986 ஆம் ஆண்டு காவிரி நதிநீர் நடுவர் மன்றம் கோரி நடைபெற்ற போராட்டத்தில் 600 தாய்மார்கள் சிறையேகினர்!
‘‘அய்யா, நாங்கள் சிறைச்சாலைக்குச் செல்வ தற்காகத்தான் வந்திருக்கோம். வீட்டுக்குப் போவதற்காக அல்ல’’ என்றேன். அப்போது என்ன நடந்து என்றால், 600 தாய்மார்கள் அந்தப் போராட்டத்தில் பங்கேற்றார்கள். போராட்டம் நடைபெற்றுவதற்கு ஒன்றி ரண்டு நாள்களுக்கு முன்பாக விவசாய சங்கத்திற்குச் சென்ற நான், ‘‘இந்த முறை போராட்டத்திற்கு ஆண்கள் வர வேண்டாம்; ஆண்களையெல்லாம் வீட்டிலே விட்டுவிட்டு, தாய்மார்களாகிய நீங்கள் அதிக அளவில் போராட்டத்தில் பங்கு பெறுங்கள். அப்பொழுதான் குடும்பத்தை நடத்துவது எவ்வளவு கஷ்டம் என்று ஆண்களும் உணர்வார்கள். ஆகவே, பெண்களுக்கு இந்த முறை ஓய்வு கொடுக்க வேண்டும். சிறைச்சாலைதான் ஓய்வெடுப்பதற்கு வாய்ப்பாகும். ஆகவே, தாய்மார்கள் வாருங்கள்’’ என்று சொன்னேன்.
அப்போது நான் வேடிக்கையாக சொன்னதை, சீரியசாகவே எடுத்துக் கொண்டு, போராட்டத்திற்கு 600 தாய்மார்கள் வந்தார்கள். ஆயிரம் பேருக்குமேல் அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்கள். இவ்வளவு பேருக்கு பேருந்து கிடையாது, இவ்வளவு பேரையும் கைது செய்ய முடியாது என்று, இந்த மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள், தனிப்பட்ட முறையில் என்னிடம் வந்து, ‘‘அய்யா, கண்டன ஆர்ப்பாட்டம் செய்து முடித்துவிட்டீர்கள். கொஞ்சம் பேரை மட்டும் கைது செய்கிறோம். மீதி பேரை வீட்டுக்குப் போகச் சொல்லுங்கள். மேலிடத்தில், அதிகம் பேரை கைது செய்யவேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள்’’ என்று வேண்டுகோள் விடுத்தார். அவர் என் கூட படித்த நண்பர். அவர்தான் என்னை கைது செய்தார்.
அவர் சொன்னதை, தோழர்களிடம் சொன்னேன். ‘‘அதெல்லாம் இல்லீங்க, நாங்கள் வீட்டில் சொல்லிவிட்டு வந்துவிட்டோம். இனிமேல் நாங்கள் வீட்டுக்குப் போனால் அவமானமாக இருக்கும். நாங்கள் வீட்டிற்குத் திரும்பவே மாட்டோம்’’ என்றார்கள். அவ்வளவு உறுதி படைத்த தாய்மார்கள் இந்த பகுதியில் இருக்கிற சகோதரிகள், தாய்மார்கள். ஆகவே, அவர்களைக் கைது செய்து ஆண்கள் திருச்சி சிறைச்சாலையிலும், பெண்கள் மதுரை சிறைச்சாலையிலும் இருந்தார்கள். அந்தப் போராட்டம் எதற்காக தெரியுமா? ‘காவிரி நதிநீர் நடுவர் மன்றம் வேண்டும்’ என்று கேட்டுத்தான்.
நடுவர் மன்றத்தை காங்கிரஸ் கட்சியும், மற்றவர்களும் புறக்கணித்தாலும், வி.பி.சிங் அவர்கள் பிரதமராக வந்தவுடன்தான், நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. முதலமைச்சராக கலைஞர் இருந்த காலத்தில் மிகப்பெரிய அளவிற்கு வாய்ப்பாக இருந்தது.
ஒவ்வொரு கட்டத்திலேயும்,
நாம் போராடி வருகிறோம்!
நாம் போராடி வருகிறோம்!
இப்படி ஒவ்வொரு கட்டத்திலேயும், நாம் போராடிப் போராடி வருகிற போது, இப்போது, திடீரென்று நம்முடைய அனுமதியே இல்லாமல், சட்டத்திற்கு விரோதமாக, நீதிமன்றத் தீர்ப்புக்கு விரோதமாக முழுக்க முழுக்க மேகதாது என்கிற அணை கட்டுவது என்பதில் கொஞ்சம்கூட அது நியாயம் இல்லை. இதற்கு முன்பு எப்போது தண்ணீர் திறந்து விடுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இவ்வளவு டிஎம்சி தண்ணீர் தரவேண்டும் என்று தீர்ப்பு கொடுத்திருந்தாலும்கூட, அந்தத் தீர்ப்புப்படி அவர்கள் ஒருமுறை கூட தவறாமல் நமக்குத் தண்ணீர் கொடுத்ததே கிடையாது.
இந்த அமைப்பு வந்த பிற்பாடு கூட, அந்த அமைப்பின்மீதே நமக்கு நம்பிக்கை இல்லை என்று நாம் எதிர்த்துப் போராடினோம்.
தண்ணீர் திறந்து விடுவது ‘அருட்கொடை’யோ, தமிழ்நாட்டின் மீது இருக்கிற அனுதாபமோ அல்ல!
திடீரென்று தண்ணீரைத் திறந்து விடுவார்கள். ‘அருட்கொடை’யா? தமிழ்நாட்டின் மீது இருக்கிற அனுதாபமா? என்றால், கிடையாது. கருநாடகாவில் இருக்கிற கிருஷ்ணராஜர் சாகர் அணை நிரம்பி போயிற்று. மற்ற மற்ற அணைகள் நிரம்பி போயிற்று. கடுமையான மழை குடகுப் பகுதியில் பெய்கிறது. அதனால் வெள்ளம் வந்து அந்த ஊரே அடித்துக் கொண்டு போகின்ற நிலை என்றவுடன், வேற வழி இல்லாமல், தமிழ்நாட்டுக்கு ஒகேனக்கல் வழியாகத் தண்ணீரைத் திறந்து விடுவார்கள்.
அதுகுறித்து ஆங்கிலத்தில் Drainage Outlets என்று சொல்வார்கள். அப்படி தண்ணீர் திறந்துவிடவில்லை என்றால், அவர்கள் வெள்ளத்தில் மிதப்பார்கள். நமக்குத் தண்ணீர் கொடுத்தது நம் மேல் இருக்கின்ற அனுதாபத்தினாலேயோ, நம்முடைய கோரிக்கைகளில் இருக்கிற நியாயத்தின்பாற்பட்டோ அல்ல; மாறாக தங்களைக் காப்பாற்றிக் கொள்வ தற்காக, கருநாடகத்தின் உபரிநீர் நமக்கு வெள்ளமாகப் பெருகிவரும். ஒகேனக்கல்லில் பார்த்தீர்களேயானால், இரண்டு பேர் வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போய்விட்டார்கள் என்ற செய்தி வரும். இதுபோன்ற நிலைதான் தொடர்ச்சி யாக இருந்தது.
(தொடரும்)
