ஹூண்டாய் தொழிற்சாலையில் தீ விபத்து பல கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்!

சிறீபெரும்புதூர், ஜூன் 1- சிறீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் ஹூண்டாய் மொபிஸ் கார் உதிரிபாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான உற்பத்தி பொருட்கள் எரிந்ததாக தகவல் வெளியாகிஉள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், சிறீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் ஹூண்டாய் மொபிஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கார்களுக்கான டேஷ்போர்டு, ஏர்பேக் தயாரிக்கும் பிரிவில் நேற்று (31.5.2026) திடீரென தீப்பற்றியது.
அப்பகுதியில் சேமித்து வைக்கப் பட்டிருந்த பிளாஸ்டிக், எளிதில் தீப்பற்றக் கூடிய மூலப்பொருட்களால் வேகமாக தீ பரவியதாக கூறப்படுகிறது. தீ விபத்தால் தொழிற்சாலை வளாகம் முழுவதும் அடர்ந்த கரும்புகை சூழ்ந்தது.
தகவலறிந்த சிறீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 6-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் நிகழ்வு இடத்துக்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டன.
பல மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதும் தொழிற்சாலையில் பணியாற்றிய 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்தில் தயாரித்து வைக்கப் பட்டிருந்த டேஷ்போர்டுகள், ஏர்பேக்குகள் மற்றும் பிற உதிரிபாகங்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. சேத மதிப்பு பல கோடியைத் தாண்டும் என முதற்கட்டமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கோடை கால வெப்பம் மற்றும் மின் கசிவு உள்ளிட்ட காரணங்களால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், சிறீபெரும்புதூர் காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் இணைந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *