தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கத் துடிக்கும் கருநாடக அரசின் மேகதாது திட்டம்! தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் திராவிடர் கழகத்தின் வேண்டுகோள்!
கருநாடக மாநிலத்தில் உள்ள கட்சிகளைப் போல –
ஓரணியாக, ஒரே குரலாக ஒலிக்கவேண்டும்!
திருவாரூர், மே 31 ‘‘தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் திராவிடர் கழகத்தின் வேண்டுகோள்! கருநாடக மாநிலத்தில் உள்ள கட்சிகளைப் போல – ஓரணியாக, ஒரே குரலாக ஒலிக்கவேண்டும்!’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
திருவாரூரில் செய்தியாளர்களிடையே
தமிழர் தலைவர் ஆசிரியர்
கருநாடக மாநிலம் மேகதாது அணை கட்டும் திட்டத்தை எதிர்த்து, திருவாரூரில் இன்று (31.5.2026) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ் வார்ப்பாட்டத்தின் முடிவில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் தமிழர் தலைவர் ஆசிரியர்.
பேட்டியின் விவரம் வருமாறு:
தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும்
கருநாடக மாநிலத்தின் மேகதாது திட்டம்!
எல்லா சட்டங்களுக்கும், நியாயங்களுக்கும் அப்பாற்பட்டு, தமிழ்நாட்டைப் பாலைவனமாக ஆக்கக்கூடிய ஒரு திட்டத்தை, கருநாடக அரசு, எந்தவித மான அமைப்புகளின் ஒப்புதலையும் பெற முடியாத அளவில், உச்சநீதிமன்றத்தினுடைய எச்சரிக்கைகளையும் பொருட்படுத்தாமல், மேகதாது அணை கட்டுவதற்கான திட்டங்களை வகுத்ததோடு மட்டுமல்ல, அதற்கான முயற்சிகளை மேற்கொள்வது என்பது இருக்கிறதே, அது தமிழ்நாட்டினுடைய வாழ்வாதாரங்களைப் பறிக்கக் கூடிய ஒரு பேரபாயம் ஆகும். அதனைத் தடுப்பதற்காகத்தான் இன்றைக்குத் திருவாரூரில் ஒரு மாபெரும் போராட்டத்தைத் திராவிடர் கழகம் நடத்துகிறது.
ஒத்தக் கட்சியினரை இணைத்து…
இப்போராட்டத்தில், ஒத்தக் கருத்துள்ள திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற கட்சிகளை இணைத்து, தமிழ்நாடெங்கும் இந்த உணர்வுகளை உருவாக்கவேண்டும் என்பதற்காக முதல் கட்டமாக திருவாரூரான டெல்டா பூமியைத் தேர்ந்தெடுத்து, குறுகிய காலத்தில் அறிவிக்கப்பட்டு, இந்த அறப்போராட்டத்தை மேற்கொள்கிறோம்.
இதற்கான ஒரு மாபெரும் போராட்டத்தை, தேவைப்பட்டால் நடத்தவேண்டும். தமிழ்நாடு அரசு இதில் மவுனம் சாதிப்பதோ, அல்லது மேகதாது அணைக் கட்டுவதை எதிர்த்து மனு கொடுத்துவிட்டோம் என்று சொன்னால் மட்டும் போதாது.
தமிழ்நாட்டிற்கு அதனால் எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்ந்து அரசாங்கமும் முக்கிய பங்காற்ற வேண்டும். அப்படியில்லாமல், வெறுமனே பிரதமரைச் சந்தித்தோம்; அவரிடம் இந்தக் கோரிக்கைகளை வைத்தோம் என்று சொல்வது ஒரு கட்டம், அது தேவைதான்.
தமிழ்நாடு அரசின் செயல் திட்டம் என்ன என்பதை விளக்கவேண்டும்!
ஆனால், அதையும் தாண்டி அடுத்த கட்டமாக தமிழ்நாடு அரசின் செயல் திட்டம் என்ன என்பதைப் பொது மக்களுக்கு விளக்கவேண்டிய அவசியம் உண்டு. ஆகவே, அவர்கள் என்ன செய்ய இருக்கிறார்கள் என்பதை எதிர்பார்க்கிறோம்.
தமிழ்நாட்டு விவசாயிகளும், தமிழ்நாட்டு உரிமைகளைப் பாதுகாக்கின்ற அத்துணை உணர்வாளர்களும் ஒன்றுபடு வோம். இதில் அரசியல் இல்லை; மாறாக, உரிமை இருக்கிறது, வாழ்வாதார உரிமை இருக்கிறது.
செய்தியாளர்: கருநாடக துணை முதலமைச்சராக இருந்தபோது, தமிழ்நாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை அவர் எடுத்தார். இப்போது அவர் முதலமைச்சராகி இருக்கி றார். இப்போது, எந்த அளவிற்குத் தமிழ்நாட்டை எதிர்ப்பார்?
தமிழர் தலைவர்: ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. ‘‘வானலில் இருந்து நெருப்பில் விழுந்ததுபோல’’ – வானலில் இருக்கும்போது கொதிக்கும்; நெருப்பில் விழுந்தாலும் என்னவாகும்? அதுதான் இந்த ஏற்பாடு.
ஊடகங்கள்தான் சரியான பதிலைச் சொல்லவேண்டும்
செய்தியாளர்: தமிழ்நாட்டின் நிலைமை என்னாவது?
தமிழர் தலைவர்: தமிழ்நாட்டின் நிலைமைக்கு ஊடகங்கள்தானே காரணம். ஆகவே, ஊடகங்கள்தான் அதற்குச் சரியான பதில் சொல்லவேண்டும்.
ஒன்று, நீதிமன்றம்; இரண்டு, மக்கள் மன்றம்!
செய்தியாளர்: மேகதாது விவகாரத்தில், தமிழ்நாடு அரசு என்ன மாதிரியான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும்? பல்வேறு கட்சியினர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்று சொல்கிறார்களே?
தமிழர் தலைவர்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதையும் தாண்டி, தமிழ்நாடு அரசு, இதைத் தடுப்பதற்கு என்ன திட்டங்களை வைத்திருக்கிறது?
இரண்டு வகையில் அதைச் செய்யலாம். நீதிமன்றம் செல்வது ஒரு வகையான போராட்டக் களம்.
இன்னொன்று, மக்கள் மன்றம்.
இரண்டையும் தமிழ்நாடு அரசு நிச்சயமாக செய்யும், செய்யவேண்டும் என்கிற அக்கறை, கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்கவேண்டும்.
அனைத்துக் கட்சிகளுக்கும்
திராவிடர் கழகத்தின் வேண்டுகோள்!
இன்னொன்றையும் கூட திராவிடர் கழகம் சுட்டிக் காட்ட விரும்புகிறது. அனைத்துக் கட்சிகளுக்கும் பொதுவான ஒரு வேண்டுகோளை வைக்க விரும்புகிறது.
அக்கோரிக்கை என்னவென்று சொன்னால், கருநாடக மாநிலத்தில், அவர்கள் எவ்வளவுக்கெவ்வளவு மாறுபட்ட கட்சிக்காரர்களாக இருந்தாலும், விமர்சனம் செய்து கொள்ளக்கூடியவர்களாக இருந்தாலும், பா.ஜ.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், மற்ற கட்சிகள் கருநாடக மாநிலத்தில் வேறுபட்டு இருந்தாலும், தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் கொடுக்கக் கூடாது; தமிழ்நாட்டினுடைய காவிரி நீர் உரிமைகளை அங்கீகரிக்கக் கூடாது என்பதில், எல்லாக் கட்சிகளும் ஒரே குரலில் பேசுகின்றன. ஒரே அணியாக இருக்கின்றன. அதை நாம் பின்பற்றவேண்டும்.
இதில் அரசியல் தேவை இல்லை;
இது முழுக்க முழுக்க ‘அரிசியல்!’
அதை ஒருங்கிணைக்கவேண்டிய பொறுப்பு, எல்லா தலைவர்களுக்கும் உண்டு. ஏனென்றால், இதில் அரசியல் தேவை இல்லை. இது முழுக்க முழுக்க ‘அரிசியல்’ – அரிசி இருந்தால்தான் சாப்பிட முடியும்; அது வாழ்வாதாரம்.
ஆகவேதான், இது தொடக்கம். இந்தப் போராட்டங்கள் நீடிக்காத அளவிற்குத் தீர்வு காணவேண்டிய மகத்தான பொறுப்பு ஒன்றிய அரசையும் சேர்ந்ததாகும்.
ஏனென்றால், ஒன்றிய பா.ஜ.க. அரசு என்ன சொல்கிறது? ‘‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’’ என்று பிரதமரும் சொல்கிறார்.
சரி, ஒரே நாடு என்று சொல்கிறீர்களே, அந்நிய நாடு களுக்கிடையே ஏற்படும் தண்ணீர்ப் பிரச்சினைகள் எல்லாம்கூட தீர்க்கப்படுகின்றன. ஆனால், ஒரே நாட்டிற்குள் ஏற்படும் தண்ணீர் பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடில்லை.
‘‘தாயும், பிள்ளையும் ஒன்றறென்றாலும், வாயும், வயிரும் வேறு’’ என்பது கிராமத்துப் பழமொழியாகும். அதன்படி நடந்துகொள்ளவேண்டும்.
– இவ்வாறு செய்தியாளர்களிடையே கூறினார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
