சென்னை, மே 30- தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தனியார் மெட்ரிக், சிபிஎஸ்இ மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் தங்களின் கல்விக் கட்டண விவரங்களை பள்ளி வாயில்களிலும், இணைய தளங்களிலும் வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்று மாநில தகவல் ஆணையம் உத்தர விட்டுள்ளது.
மேலும், கட்டண விவரங்களை முறையாக வெளியிட நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு தனியார் பள்ளிகளுக்கான இயக்குநருக்கு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த எம்.லியாகத் அலி என்பவர், கடந்த 2022 அக்டோபர் 26 அன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் அரசு வழிகாட்டுதலின்படி வசூலிக்கப்பட வேண்டிய கல்விக் கட்டண விவரங்களைக் கோரி மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு மனு அளித்திருந்தார்.
இந்த மனு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்கள் என பல இடங்களுக்கு மாற்றி மாற்றி அனுப்பப்பட்டதே தவிர, உரிய காலக்கெடுவுக்குள் லியாகத் அலிக்கு எந்தவொரு தகவலும் வழங்கப்படவில்லை. அதிகாரிகளின் இந்த இழுத்தடிப்பை அடுத்து, அவர் மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார்.
தகவல் ஆணையரின் கண்டனம் மற்றும் அபராதம்!
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையர் வி.பி.ஆர். இளம்பரிதி தனது உத்தரவில் கூறியிருப்ப தாவது:
“தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படை நோக்கமே வெளிப்படைத்தன்மைதான். ஆனால், மனுதாரர் கோரிய தகவல்களை மூன்றரை ஆண்டுகளாக வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடிப்பு செய்துள்ளனர். இறுதியாக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனக் கூறியுள்ளனர்.” இதற்காக, மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ. 25 ஆயிரத்தை வழங்குமாறு தற்போதைய பொதுத் தகவல் அலுவலரான கோவை மாவட்ட கல்வித் துறை அதிகாரிக்கு ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்தத் தொகையைப் பெற்றுக்கொண்டது குறித்து மனுதாரர் வரும் ஜூன் 15 அன்று நேரில் ஆஜராகி தெரிவிக்க வேண்டும்.
மேலும், இந்த மனுவை தேவையில்லாமல் திருப்பிவிட்டது ஏன் என்பது குறித்தும், அதற்காக தலா ரூ. 25 ஆயிரம் ஏன் அபராதமாக விதிக்கக் கூடாது என்பது குறித்தும் அப்போதைய முதன்மைக் கல்வி அதிகாரி, அவரது நேர்முக உதவியாளர் மற்றும் தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோர் வரும் ஜூன் 15-க்குள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் தங்களின் பொருளாதார எல்லையைத் தாண்டி கல்விக்காக அதிக பணம் செலவழிப்பதால், அந்த ஒவ்வொரு ரூபாய்க்கும் வெளிப்படையான கணக்கைக் காட்ட வேண்டியது கல்வி நிறுவனங்களின் கடமை எனத் தெரிவித்த ஆணையம், பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது:
பொதுத் தகவல் ஆணையர் நியமனம்: தனியார் பள்ளிகளுக்கான இயக்குநர் எஸ். சுகன்யாவை இந்த ஆணையம் பொதுத் தகவல் ஆணையராக நியமிக்கிறது.
கட்டண விவரம் வெளியீடு: இனிவரும் காலங்களில் அனைத்து தனியார் மெட்ரிக், சிபிஎஸ்இ மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் கல்விக் கட்டண விவரங்களை வகுப்பு வாரியாக பள்ளி வாயில்களிலும், இணைய தளங்களிலும் வெளிப்படையாக வெளியிட அனைத்து பள்ளி நிர்வாகங்களுக்கும் அவர் அறிவுறுத்த வேண்டும்.
விண்ணப்பங்களில் அச்சிடுதல்: மாணவர் சேர்க்கை யின்போது வழங்கப்படும் விண்ணப்பங்களிலேயே கல்விக் கட்டண விவரங்களை முறையாக அச்சிட்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த உத்தரவுகளின்படி பள்ளி நிர்வாகங்கள் செயல்படுகிறதா என்பதை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரி வரும் ஜூன் 15 அன்று நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, மாநில தகவல் ஆணையம் இந்த விசாரணையைத் தள்ளி வைத்துள்ளது.
