நல்ல லாபத்தில் இயங்கும் பத்திரிகைகளே, அவ்வப்போது மூடுவிழா காண்கின்றன. நட்டம் ஏற்படுகிறது என்பதால் அல்ல; ‘இலாபம் குறைகிறது’ என்பதால்! ஆனால், தொடக்கம் முதலே நட்டத்திலேயே இயங்கி வரும் ஓர் ஏடு, பல தடைகளையும் கடந்து 92 ஆண்டுகளைத் தொடவிருக்கிறது என்றால் அதை ‘உலக சாதனை’ என்று சொல்லாமல் வேறு என்னவென்பது?
பிறக்கையிலே ஜாமினோடு பிறந்த ஏடு ‘விடுதலை’. நீதிக்கட்சியிடம் இருந்து தந்தை பெரியாரின் நிர்வாகத்திற்கு வரும்போது, வெள்ளையர் அரசு இந்த நிபந்தனையை (ஜாமின்) விதித்தது. அதையும் செலுத்திவிட்டுத் தான் ‘விடுதலை’யை வெளியிட்டார் தந்தை பெரியார்.
பின்னாளில் ‘குடிஅரசு’ வார ஏட்டுக்கும், ‘பகுத்தறிவு’ மாத இதழுக்கும், ‘விடுதலை’ நாளேட்டுக்கும் தலா ரூ.1000 ஜாமின் கோரியது அரசு. ‘குடிஅரசு’க்கும், ‘விடுதலை’க்கும் சேர்த்து ரூ.2000 கட்டிவிட்டு, மாத இதழான ‘பகுத்தறிவு’க்கு ஜாமின் கட்ட இயலாமல், அதை நிறுத்த வேண்டிய கட்டாயம் தந்தை பெரியாருக்கு ஏற்பட்டது.
ஒன்றிரண்டு முறையல்ல; பிரிட்டிஷ் அரசால் மட்டுமல்ல. சுதந்திர இந்தியாவிலேயே, ஓமந்தூர் ராமசாமியார் ஆட்சிக் காலத்திலும் சரி, பின்னர் காமராசர் ஆட்சிக் காலத்திலும் கூட ஜாமின் கட்டச் சொன்ன நிகழ்வுகள் உண்டு. அதாவது அரசுக்கு எதிராக எழுதினால், அரசின் கருத்துகளுக்கு விரோதமாக எழுதினால், அந்தத் தொகை பறிமுதல் செய்யப்படும் என்ற எச்சரிக்கையுடன் தான் ஏடுகளை நடத்த தந்தை பெரியாரை அனுமதித்தனர்.
அதனாலெல்லாம் துவண்டுவிடக் கூடியவரா தந்தை பெரியார்? தன்னுடைய கருத்துகளின் சாரத்தையோ, அது வெளிப்படுத்தும் ‘கார’த்தையோ கொஞ்சமும் குறைத்துக் கொள்ளவில்லை. அரசின் அடக்குமுறையை மக்களிடமே முன்வைத்தார். மக்களின் பேராதரவோடு இடையூறுகளை எதிர்கொண்டார்.
தந்தை பெரியார் காலத்தில் மட்டுமல்ல; அவருக்குப் பிறகும் கூட தடைகளை எதிர்கொள்ளத் தயங்கியதில்லை ‘விடுதலை’. அன்னை மணியம்மையாரை ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் கொண்டு வெளிவந்துகொண்டிருந்த காலத்தில் தான் இந்தியாவில் ‘மிசா’ சட்டம் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது. பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் கொண்டுவந்த நெருக்கடி நிலைப் பிரகடனத்தைத் தங்களுக்குச் சாதகமாக வளைத்துக் கொண்டனர் பார்ப்பனர்கள். எப்படி எழுத வேண்டும்? எப்படி எழுதக் கூடாது என்று பாடம் நடத்தத் துணிந்தனர். சிறையில் இருந்தார் ‘விடுதலை’ ஆசிரியர். பெரும்பாடு பட்டுத்தான் அன்னை மணியம்மையார் அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டிருந்தார். பார்ப்பனர்தம் கொடுக்குகள் நீட்டத் தலைப்பட்டபோது, ‘இப்படியே காலம் போய்விடாது’ என்று எச்சரித்துவிட்டு வரச் சொன்னார் அன்னையார். அதன் பின்னர் தான் அடக்கி வாசித்தனர் அக்கிரகாரப் பிரதிநிதிகள். தணிக்கைத் தொல்லையைத் தாண்டி வந்தது – தடையின்றி தந்தை பெரியார் கருத்துகளைக் கொண்டு சென்றது ‘விடுதலை’.
சிறை நூலகங்களுக்குள் ‘விடுதலை’யை அனுமதிக்க மறுத்தனர். அறிவு விடுதலைக்குத் தடை போடலாமா? எதிர்க்குரல் ‘விடுதலை’யைக் கொண்டு சேர்த்தது.
2011-இல் ஆட்சி மாற்றம். அ.தி.மு.க. மீண்டும் அரசுப் பொறுப்பேற்றது. கிளை நூலகங்களுக்கு வாங்கிக் கொண்டிருந்த ‘விடுதலை’யை நிதிப் பற்றாக்குறை என்று காரணம் சொல்லிக் கடிதம் எழுதினர் சில நூலகர்கள்; சிலர் எழுத நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதழ் அனுப்புவதை நிறுத்தக் கோரி, ஒரே நேரத்தில் பல நூலகர்களிடமிருந்து கடிதங்கள் குவிந்தன. கொதித்தெழுந்த தோழர்கள் 50,000 ‘விடுதலை’க்கான சந்தாக்களை சேர்த்து ஆசிரியர் அவர்களிடம் வழங்கி வெற்றிக் கொடி பதித்தனர்.
‘விடுதலை’யின் பொருளாதாரம் லாபத்தில் இருந்ததில்லை. ஆனால், அது ஒரு நாளும் நின்றுபோனதில்லை. கோவிட் (கரோனா) தொற்று காலத்தில் பல பெரும் விற்பனையுள்ள ஏடுகள் கூட தங்கள் அச்சுப் பதிப்பைக் கைவிட்டன. ஆனால், ‘விடுதலை’ நிற்கவில்லை. எல்லா நாளும் அச்சுப் பிரதி வெளிவந்தது – ஞாயிறு மலர் உள்பட!
ஊடகங்கள் காலந்தோறும் மாறிக் கொண்டே இருக்கின்றன. செய்தித்தாள் மட்டுமே ஊடகம் இல்லை. ஆனால், தந்தை பெரியாரின் ஏடுகள் தான் வழிகாட்டிகளாயின. பாதைகளுக்கு ஒளிவிளக்குகள் ஆயின. செய்தித் தாள்களைக் கடந்து, மேடை உரைவீச்சுகள் மக்களை ஈர்த்தபோது, ‘விடுதலை’ தான் ஆதாரமானது. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும், எம்.ஆர்.ராதாவும் தந்தை பெரியாரின் ஏடுகளான ‘குடிஅரசை’யும், ‘விடுதலை’யையும் படித்துத் தான் சுயமரியாதைக் கருத்துகளை ஏற்றனர். அவற்றைத் தங்கள் நாடகங்களில் பயன்படுத்திக் கொண்டனர்; ‘விடுதலை’ தான் அடி உரமானது. தொலைக்காட்சி விவாதங்கள் பல, ‘விடுதலை’யின் தலைப்புச் செய்தியையும், அறிக்கையையும் அடிப்படையாகக் கொண்டே அன்றாடம் முடிவு செய்யப்படுவதை ஊடகவியலாளர்கள் அறிவர். இப்போது ஷார்ட்ஸ், ரீல்ஸ் குறுங்காணொலிகளின் காலம். ‘விடுதலை’யின் பார்வையைப் புரிந்துகொண்டு ஒரு கைப்பேசி மூலமே உலகுக்குக் கொண்டு சேர்க்கும் காலம் வந்துவிட்டது. இப்போதும் ‘விடுதலை’யின் சொல் ஒவ்வொன்றையும் மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை இளைஞர்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஒவ்வொரு நாள் ‘விடுதலை’யிலும் ‘கண்டெண்ட்டுகள்’ (கருத்துச் செறிவுகள்) கொட்டிக் கிடக்கின்றன.
‘விடுதலை’ ஒரு கருத்துச் சுரங்கம் – தோண்டத் தோண்ட பெருஞ்செல்வம் உங்களுக்கு! ‘விடுதலை’ ஓர் ஆர்ட்டீசியன் ஊற்று – அழுத்தம் அதிகமானால் அதுவே பீறிட்டு அடிக்கும். ‘விடுதலை’ ஒரு விவசாயக் களம் – கொள்கை விளைச்சலைக் குறைவின்றி அள்ளித் தரும்! ‘விடுதலை’ ஓர் எரிமலை – ஏறி விளையாட நினைப்போரைத் தடம் தெரியாமலாக்கிவிடும். அது ஒரு காட்டாற்று வெள்ளம் – அணை உடைத்துத் தன் பாதைகளைத் தானே உருவாக்கிக் கொள்ளும்!
அதற்கு எப்போதும் லட்சங்கள் கணக்கில்லை – லட்சியங்களே கணக்கு! அதில் என்றைக்கும் ‘விடுதலை’க்கு லாபம் தான்! அதன் பெட்டிச் செய்தியும் ஆட்சியாளர் கையெழுத்தை மாற்றிக் காட்டும்! ‘இது உண்மையா?’ என்று ‘விடுதலை’ கேட்டால், ‘பொய்’யென்றே ஆக்கிவிட அதிகாரக் கூட்டம் துடிதுடிக்கும்
‘விடுதலை’ விழுப்புண்கள் பெற்றும் வீழாத வீரன்! அதுவே தமிழர்களின் வாளும் கேடயமும்!
