தேசிய குடிமைப் பணிகள் நாள் கடந்த 21ஆம் தேதி நடைபெற்றது. அது குறித்து ஒரு கோடிக்கும் அதிகமான அதிகாரிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.
‘‘தற்போதைய 21-ஆம் நூற்றாண்டு பெரும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் நிறைந்த காலகட்டமாகும். ஒவ்வொரு நாளும் மாற்றங்கள் நிகழ்கின்றன. புதிய தொழில்நுட்பங்களும், புத்தாக்கங்களும் படைக்கப்பட்டு வருகின்றன.
நமது நாட்டின் மீது குடிமக்கள் மட்டுமன்றி, ஒட்டுமொத்த உலகமும் பெரும் எதிா்பாா்ப்புகளைக் கொண்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க காலகட்டத்தை முழு அளவில் பயன்படுத்தும் வகையில், அரசின் சேவைகள் மற்றும் பணியாற்றும் விதம் சீரமைக்கப்பட வேண்டும்.
ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த இணையவழி பயிற்சித் தளமான ‘கா்மயோகி’ உள்ளிட்ட தளங்களைப் பயன்படுத்தி, கற்றலை வாழ்நாள் வழக்கமாக மாற்றுவது முக்கியம். பாரதம் சிறந்து விளக்க வேண்டுமெனில், நீங்களும் (அரசு அதிகாரிகள்-ஊழியா்கள்) சிறந்து விளங்க வேண்டும்.
பணிகளின் அளவுகோல் என்ன?: வாழ்க்கையில் புதிய விஷயங்களுக்கான தேடலை உயிா்ப்புடன் வைத்துக் கொள்வது அவசியம். இந்தக் கொள்கையே, கா்மயோகி திட்டத்துக்கு அடிப்படையாகும். ஒருபுறம் பயிற்சி, மற்றொருபுறம் புதிய கற்றல்.
பொது சேவைக்குப் பொறுப்பானவா்கள், வாழ்நாள் கற்றலுக்கு சிறந்த உதாரணமாகத் திகழ வேண்டும். கடந்த காலத்தைவிட சிறப்பாகப் பணியாற்றுவதே முன்பு அளவுகோலாக இருந்தது. இப்போது அப்படியல்ல.
2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த இந்தியாவைக் கட்டமைக்கும் இலக்கின் அடிப்படையிலேயே நமது பணிகளை மதிப்பீடு செய்ய வேண்டும். நமது முயற்சிகளின் வேகம், வீச்சு, திசை, தீவிரம் ஆகியவை, அந்தக் கண்ணோட்டத்தால் வழிநடத்தப்பட வேண்டும். ‘குடிமக்களே கடவுள்’ என்ற கொள்கையே நமது ஒவ்வொரு முடிவின் அடிநாதம் என்றாா்.’’ (‘தினமணி’ – 23.4.2026)
எங்குப் போய் எங்குச் சுற்றி வந்தாலும் காவிகளின் கடைசி முத்திரையடி என்பது ‘கடவுளாக’த்தான் இருக்கும்.
எதையும் காரணக் காரியத்தோடு கருத்துகளை எடுத்து வைக்க இயலாத கையறுநிலையில், கடைசியில் இல்லாத கடவுளை அறிவு விசாரணையால் நிரூபிக்கப்பட முடியாத கடவுளை இழுத்துப் போர்வையாகப் போர்த்தித் தப்பித்துக் கொண்டு விடுவார்கள்.
கடவுளை வழிபட கோயிலுக்குச் செல்லும் வழியிலும், அல்லது கோயிலுக்குச் சென்று வழிபட்டு, நேர்த்திக் கடன்களைக் கழித்துத் திரும்பும்போதும், நடக்கின்ற விபத்தில் மரணம் அடைந்தாலும்கூட ‘எல்லாம் கடவுள் ஏற்ெகனவே நிர்ணயம் செய்த ‘கர்மவினை!’ என்று கரடியைவிட்டு (ஏதோ நேர்மைக்கும், உண்மைக்கும் இவர்கள்தான் எடுத்துக்காட்டு என்பதுபோல) அந்த இடத்திலும் ‘கடவுள்’ நம்பிக்கையைக் காப்பாற்றி விடுவார்கள்.
‘தங்களின் கையாலாகாத நிலையை ஒப்புக் கொள்ளும் அறிவு நாணயம் தோற்கும் இடங்களில் எல்லாம், ‘கடவுள்’ நம்பிக்கையைக் கொண்டு வந்து நிறுத்தினால், எளிதில் தப்பித்துக் கொண்டு விடலாம்’ என்ற கோழைத்தனம்தான் இதன் பின்னணி!
குற்றங்களை மூடி மறைக்க கடவுள் கற்பனை பெரிதும் பயன்படும். அதே நேரத்தில் ‘முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்’ என்ற குறள் முன் இந்தக் கடவுளை முன்னிறுத்தினால், பின்னங்கால் பிடரியில் அடிபட தோற்றோடி விடும்.
இந்திய ஒன்றிய ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பிஜேபியைப் பொறுத்தவரை, மக்களுக்கான வளர்ச்சிப் பணியில் பெரிதும் தோற்றோடி விட்டது.
மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றுவதில் படுகுழியில் வீழ்ந்து விட்டது! 2026–2027 முடிவில் இந்தியாவில் வெளிநாட்டுக் கடன் 214.82 லட்சம் கோடி!
கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தள்ளுபடி ரூபாய் 19 லட்சம் கோடியாகும்.
அரசு வங்கிகளில் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கடன் வாங்கி, அதனைத் திருப்பிச் செலுத்தாமல் வெளி நாட்டில் சொகுசாக வாழ்பவர்களுக்கும் பஞ்சமில்லை.
‘‘வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்ட கறுப்புப் பணத்தை மீட்டு, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் வழங்கப்படும்’’ என்று கூறித்தான் பிரதமரானார் நரேந்தர தாமோதரதாஸ் மோடி! ‘‘ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்’’ என்று ஆட்சிக்கு வருவதற்காக வாய்க் கூசாமல் சொன்னதும் இந்தப் பிஜேபிதான்!
இதுபற்றி எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டால் ‘அதெல்லாம் சுத்த ஜூம்லா!’ என்று உள்துறை அமைச்சர் என்ற பொறுப்பில் உள்ள ஒருவர் கூறகிறார் என்றால், இவர்கள் மீதான ‘நம்பிக்கை தன்மை’ எதுவாக இருக்க முடியும்?
இவற்றையெல்லாம் மூடி மறைக்கவும், மக்களைத் திசை திருப்பவும், பிஜேபி ஆட்சியாளர் கையில் வைத்திருக்கும் ஆயுதம் தான் கடவுள்,மதம், கர்மபலன், விஸ்வ குரு.. இத்தியாதி… இத்தியாதி….
கடவுளைப்பற்றி சொல்லப்பட்ட சூத்திரத்திற்கும் நடைமுறைக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? உருவமற்றவன், எங்கும் நிறைந்தவன் என்று ஏட்டில் எழுதி வைத்துக் கொண்டு, உபதேசம் செய்து கொண்டு சிவன் என்றும், விஷ்ணு என்றும் பிர்மா என்றும், இந்தக் கடவுள்களுக்கெல்லாம் பெண்டாட்டிப் பிள்ளைகள், வைப்பாட்டிகள் உண்டென்றும் கூறுவது எல்லாம் அசல் முரண்பாடல்லவா!
‘கடவுளை உருவமாகக் காட்டாவிட்டால், மக்கள் மத்தியில் அது எடுபடாது’ என்ற தந்திரத் தில் தான் புராணப் புளுகுகளை அவிழ்த்துக் கொட்டி ‘திருப்பதி ஏழுமலையானை சந்தித்தால் தீராத வினைதீரும்’. ‘கிரிவலம் சென்றால் பாவங்கள் போகும்’. ‘கும்பமேளா சென்றால் மோட்சத்துக்குப் பயணச் சீட்டுக் கிடைக்கும்’ என்று கதை கதையாக புருடா விடுவது எல்லாம் மக்களின் வளர்ச்சியைத் தடுப்பதற்கும், தங்களின் சுகபோக வாழ்க்கைக்காக ஏமாற்று வேலையைத் தொடர்வதற்கும் தான் என்பது நினைவிருக்கட்டும்!
அதனால்தான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் ‘கடவுள்’ மறுப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டார். ‘கடவுளை மற – மனிதனை நினை’ என்று அவர் கூறியது. மனித சமூகத்தை மேல் நிலைக்குக் கொண்டு செல்வதற்கே!
அச்சமும், பேராசையும் இல்லாவிட்டால் ‘கடவுள்’ ஏது? எண்ணிப் பாரீர்!
அதுவும் பிஜேபிகாரர்கள் கூறும் கடவுள் என்பதுகூட அவர்களின் மதம் சார்ந்த ராமன் வகையறாக்களைத்தான்; மற்ற மதக் கடவுள்களை ஏற்க மாட்டார்கள். இன்னும் சொல்லப் போனால் மற்ற மதக் கடவுள்களை நிந்திப்பார்கள் – வழிபாட்டு நிலையங்களையும் தகர்ப்பார்கள்!
‘‘எதை வேண்டுமானாலும் மன்னிக்கலாம். அறிவைக் கெடுப்பவர்களை மன்னிக்கவே கூடாது’’ என்றார் அறிவு ஆசான் தந்தை பெரியார் என்பது நினைவிருக்கட்டும்!

