‘பழைமை’ அதிகாரமும் – ஒரு முக்கிய நிகழ்வும் (4)

4 Min Read

‘நட்பு’, ‘நட்பாராய்தல்’, ‘தீ நட்பு’, ‘கூடா நட்பு’ என்ற தலைப்புகளிலேயே நட்புபற்றி வருவதை தாண்டி, குறளின் வேறு தலைப்புகளிலும் கூட நட்பின் பெருமை – தேவை – விளைவுகள் பற்றி வள்ளுவரின் சிந்தனை ஓட்டம் தடைப்படாமல் ஓடுகிறது.

அந்த அறிவுச் செறிவு, நமக்கெல்லம் சீரிய  பாடங்களாகிப் பயன் தருகின்றது.

எடுத்துக்காட்டாக,

‘பழைமை’ என்ற தலைப்பில் உள்ள பத்து குறள்களை இந்த நட்பு வட்டம் – தன்மைபற்றி ஆராய்ந்து பார்க்கலாமா?

இந்த ‘பழைமை’ என்ற தலைப்பிட்டு  திருக்குறளில் இடம் பெற்ற இந்த அதிகாரம், ‘நட்பாராய்தல்’ என்ற தலைப்பிலான அதிகாரத்திற்கும், ‘தீ நட்பு’ என்ற தலைப்பிலான அதிகாரத்திற்கும்  இடைப்பட்ட அதிகாரமாக அமைந்துள்ளது. ‘தீய நட்பு’ என்று ஒதுக்கிட வேண்டியதும், ஒதுங்கிட வேண்டியதுமான ஒருவகை தீ நட்புக்கு இடையே ‘பழைமை’ அமைந்தது – நட்பின் போது   செய்த தவறுகளை, ஏன் கேடுகளையும் தாண்டி, அவர்களது பழைய நட்பினை மறவாமல், போற்றும் பெரிய மனது  – விரிந்த பரந்த உள்ளம்பற்றிக் கூறினாலும்  ஒன்று முக்கியம் – ‘திட்டமிட்டே நண்பர்கள் கேடு செய்வது’ என்ற ஒரு வகை நட்பு (A category of  friendship) இதன் கீழ் வராமல், மாறாக, தேவையற்ற அதி உற்சாகத்தின் அல்லது புரியாத்தனத்தினால் உள் எண்ணம் இல்லாமலும் செய்த தவறுகள் இந்த வகைகளுக்குள் வராது என்பதால்தான் ‘தீ நட்பு’ அதிகாரத்திற்கு முன்பே   ‘நண்பர்களின் உளப்பாங்கை ஆயத்தப்படுத்துவதுபோல விரிவு செய்ய இதை அமைத்திருக்கக் கூடும் என்றே தெரிகிறது.

சில நண்பர்கள் நெருக்கமாகப் பழகும் நண்பர்களிடம் அதிக உற்சாகத்துடன், அளவற்ற அன்பின் காரணமாக, வெள்ளந்திகளாகி, அவர்கள் வியப்படையச் செய்ய வேண்டும் என்ற மிகு ஆர்வத்தின் விளைவாக உரிமை எடுத்துக் கொள்வதுகூட பல நட்புகள், முறிவதற்கும்  காரணமாகி விடுகிறது!

எனவே நாம் மற்றவர்களுக்கு உதவிடும் போது அல்லது நமது உற்ற  நண்பர்களிடம் அதைச் செய்யும்போதுகூட அது எதிர் விளைவினை ஏற்படுத்தி, பல கால பழைமை நட்பு – இதன் காரணமாக விரிசலுக்கு இடத்தை ஏற்படுத்தவும் கூடுமே!

எனவேதான் ‘உற்சாகம்’ தேவை – ஆனால் வரம்பு மீறிய உற்சாகம் எப்போதும் (Over enthusiasm) ஆபத்தானது. செயத்தக்கது அல்ல.

‘‘விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்

கேளாது நட்டார் செயின்.’’ (குறள் – 804)

இதன் பொருள்: பழகிய நட்புரிமையின் காரணமாகத் தம்மைக் கேளாமலேயே, தாம் செய்ய வேண்டிய செயலை, நண்பரே செய்து விடுவாரேயானால், அவர்தம் சார்பாகச் செயல் செய்யும் நட்புரிமையை ஏற்றுக் கொள்ளும் காரணத்தால் சான்றோர் விரும்பி ஏற்று, வாளா இருப்பர்.

இதற்குச் சான்று பகரும் வண்ணம் 1958இல் யான் அறிந்த ஒரு நிகழ்வு எனது மனதின் நினைவுக் குதிரிலிருந்து ஓடோடி  வந்து எனது எழுதுகோல் மைத்துளியாகி நீங்கள் படித்து வியக்க வருகிறது!

தற்போது சென்னை பெரியார் திடல் அமைந்திருக்கும் பகுதி முன்பு சென்னையில் ‘டிராம்’கள் ஓடிய காலத்தில் நிறுத்தி வைக்கும் இடமாக (ெஷட்டாக) இருந்த பகுதி. 1952 வாக்கில் ஆச்சாரியார் ஆட்சியில்தான் அதன் உரிமையாளர்களான லண்டன் முதலாளிகள் – இலாபம் இல்லாத காரணத்தாலோ என்னவோ, அதனை நிறுத்திட முடிவெடுத்து – நிறுத்தி சுமார் 5 ஆண்டுகள் கழித்து, அந்த இடம் முழுவதும் பழைய ‘பூவிருந்தவல்லி அய்ரோடு’, (தற்போதைய பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை) என்று உள்ள பகுதி மூன்றாகப் பிரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தபோது, அச் சாலையை நோக்கிய ஒரு பகுதி கோவை விஞ்ஞானி ஜி.டி. நாயுடு அவர்களால் வாங்கப்பட்டது. நடுப்பகுதி – பழைய ரண்டால்ஸ் சாலை பகுதிகள் (தற்போது தினத்தந்தி அலுவலகம்) வான்காட் இன்சூரன்ஸ் எச்.டி. ராஜா என்ற ஒரு பெரு முதலாளி (அய்யர்) யால்  வாங்கப்பட்டது. மூன்றாம் பகுதி  சுமார் 50 கிரவுண்டுகள் கொண்ட உட்பகுதி கோவை விஞ்ஞானி ஜி.டி. நாயுடுவின் சார்பில் முகவரும், பெரும் ஒப்பந்தக்காரரும், சீரிய பகுத்தறிவுவாதியுமான திரு. லட்சுமிபதி (நாயுடு) அவர்களால் பெரியாருக்காக அய்யா ஒப்புதல் இன்றியே வாங்கப்பட்டது.

அப்போது ஜாதி ஒழிப்புக்கான போராட்டத்தில் தந்தை பெரியார் (1957–1958) ஆறுமாதம் தண்டிக்கப்பட்டு சிறையில் சென்னையில் இருந்தார்.

திரு. நாயுடுகாரு அவர்களும், அவரது சார்பில் பொறுப்புகளைச் செய்த திரு. லட்சுமிபதி அவர்களும் இந்தப் பகுதியை பெரியாருக்கென வாங்கி விட்டனர்.

பிறகு 6 மாத தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த (மருத்துவமனையில்)   தந்தை பெரியாரிடம் இதனைச் சொன்னவுடன், ‘‘அப்படியா? (ஒரு லட்சம்தான் வாங்கப்பட்ட விலை!) சிறையில் அல்லவா இருக்கிறேன். உடனே பணம் கொடுக்க முடியாதே!  என்னைக் கேட்காமலேயே இப்படி நாயுடுகாரும், அவரது ஏஜெண்டும் செய்து விட்டார்களே’’ என்று கூறி முணுமுணுத்தார்.  அன்னை மணியம்மையாரை அழைத்து அய்யா தகவல்கூறி சற்று வருந்தினார்.

அம்மா, இந்தத் தகவலை எனக்கும் சொல்லி அனுப்பினார். திரு.லட்சுமிபதியிடம் அப்போது ‘‘உடனே பணம் கட்ட முடியாதே’’ என்று சொன்னபோது,

‘‘அய்யா எப்ப வேண்டுமானாலும் அவர் வசதிக்கேற்ப அந்தப் பணத்தைத் தரலாம். அய்யா பெயரில் அந்த சொத்தை வாங்கி விட்டோம்’’ என்றார்.

‘‘பிறகு நீங்கள் விடுதலை ஆகி வந்த பிறகு, சாவகாசமாகத் தரலாம் என்று சொல்லி விட்டார்’’ என்று கூறி அய்யாவின் வருத்தத்தை அம்மா போக்கினார்.  அப்போது மருத்துவமனையில் நானும் உடன் இருந்தேன்.

இந்தக் குறளையும், இந்த நிகழ்வையும் பொருத்திப் பாருங்கள்.

இன்று சென்னை பெரியார் திடல் என்பது பொருள் – விலை – மதிப்பில் மட்டும் கூடவில்லை; எல்லாவகையிலும் மதிப்புக் கூடியிருப்பதுடன், வானளாவ உயர்ந்து, அரசியல், சமூக வரலாற்றில் தனியிடம் அல்லவா பெற்றிருக்கிறது?

குறளும் குவலயத்து நிகழ்வும் எப்படி இழையோடுகிறது பார்த்தீர்களா?

(வளரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *