இஸ்லாமாபாத், மே 28- இஸ்ரேலுடன் உறவை புதுப்பிக்கும் ஆபிரகாம் ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் ஒருபோதும் இணையாது என்றும், தங்களின் அடிப்படை கொள்கை களுக்கு எதிரான எதையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அந்நாட்டு ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஆபிரகாம் ஒப்பந்தம்
மேற்காசிய நாடான ஈரான் – அமெரிக்கா இடையேயான போரை நிறுத்துவதில், பாகிஸ் தான் நடுநிலையாளராகச் செயல்பட்டு வருகிறது. இந்தச் சூழலை பயன்படுத்தி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பாகிஸ்தானிடம் ஒரு கட்டாய கோரிக்கையை விடுத்திருந்தார்.
ஈரான் விவகாரத்தில் அமைதி உடன்படிக்கை ஏற்பட வேண்டும் என்றால், சில முக்கிய முஸ்லிம் நாடுகள் இஸ்ரேலை முறைப்படி அங்கீகரித்து, ஆபிரகாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்பது தான் அது. சவுதி அரேபியா, கத்தார், துருக்கி ஆகிய நாடுகளை தொடர்ந்து, பாகிஸ்தானும் இந்த ஒப்பந்தத்தில் இணைய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அமெரிக்காவுடன் சில காலமாக நட்புறவில் இருந்தாலும், டிரம்பின் இந்த மிரட்டலுக்கு, பாக்., ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்ப தாவது:
நம் அடிப்படைக் கொள்கை மற்றும் சித்தாந்தங்களுக்கு முரணாக இருக்கும் எந்தவொரு உடன்படிக்கையிலும் பாகிஸ்தான் இணையக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
ஒரு நாள் கூட சொன்ன வார்த்தையை காப்பாற்றாத, நம்பகத்தன்மையே இல்லாத மனிதர்களுடன் நாம் எப்படி ஒன்றாக அமர்ந்து பேச முடியும்? இந்த விவகாரத்தில் பாகிஸ்தானின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆபிரகாம் ஒப்பந்தம்
என்றால் என்ன?
ஆபிரகாம் ஒப்பந்தம் என்பது, 2020ல் டிரம்பின் முதல் ஆட்சிக் காலத்தில் மேற்காசியாவில் இஸ்ரேல் மற்றும் இஸ்லாமிய நாடுகளுக் கிடையே அதிகாரப்பூர்வ உறவை உருவாக்க, அமெரிக்கா முன்னெடுத்த அமைதி ஒப்பந்தமாகும். அதாவது, இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரித்து, அதனுடன் நட்பு மற்றும் வர்த்தக உறவை தொடங்குவது. இந்த ஒப்பந்தத்தில், அய்க்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், மொராக்கோ ஆகிய நாடுகள் ஏற்கனவே இணைந்திருக்கின்றன. ஆனால், சவுதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி போன்ற நாடுகள் தங்களின் இஸ்லாமிய கொள்கைகளின்படி, பாலஸ்தீனத்திற்கு விடுதலை கிடைக்கும் வரை இந்த உடன்படிக்கையில் இணைய மாட்டோம் என திட்டவட்டமாக மறுத்து வருகின்றன.
சவுதியும் நிராகரிப்பு!
ஆபிரகாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விடுத்த கோரிக்கையை, சவுதி அரேபியா நிராகரித்துள்ளது. இது குறித்த தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள சவுதி அரசு தரப்பு, ‘பாலஸ்தீன விவகாரத்தில் எங்கள் கொள்கையில் எள்ளளவும் மாற்றமில்லை. பாலஸ்தீன மக்களுக்கு என்று தனி நாடு அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ, நிரந்தரமான வழி வகை செய்ய வேண்டும். அந்தப் பாதை யாராலும் மாற்ற முடியாததாக இருக்க வேண்டும். அதுவரை இஸ்ரேலுடன் எவ்வித துாதரக உறவு, சமரசம் கிடையாது’ என குறிப்பிட்டுள்ளது.
