புதுடில்லி, மே 27- உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது, வேலையில்லாத இளை ஞர்கள் பத்திரிகை மற்றும் சமூக செயல்பாடுகளை நோக்கி நகர்வதை ஒட்டுண்ணிகள் மற்றும் கரப்பான் பூச்சிகளுடன் தலைமை நீதிபதி சூர்யகாந்த் ஒப்பிட்டுப் பேசியதாகக் கூறப்படும் விவகாரம் சமூக வலை தளங்களில் பெரும் புயலைக் கிளப்பியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அரசியல் உத்தி வகுப்பாளரான அபிஜித் திப்கே என்பவர் சமூக வலைதளங்களில் ‘‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி” என்ற பெயரில் புதிய கணக்கு ஒன்றை உருவாக்கினார். இந்தப் பக்கம் நாடு முழுவதும் உள்ள இளைஞர்களிடையே அதிவேகமாகப் பரவி, வெறும் ஆறே நாட்களில் ஒரு கோடிக்கும் அதிகமான பின் தொடர்பாளர்களைப் (Followers) பெற்று அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நிலைமை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’யின் சமூக வலை தளப் பக்கங்களை ஒன்றிய அரசு அதிரடியாக முடக்கியது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ராஜா சவுத்ரி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:
“‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (Cockroach Janata Party) என்ற பெயரில் சமூக வலைதளக் கணக்கை உருவாக்கி, அதன் மூலம் இந்திய நீதித்துறைக்கு திட்டமிட்டு களங்கம் விளைவித்துள்ளனர். எனவே, இந்த ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’யின் பின்னணியில் இருப்பவர்கள் யார், அவர்களின் பின்னணி என்ன என்பது குறித்து சிபிஅய் (CBI) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.”
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு முன்பாக முறை யிடப்பட்டது. மனுவை பரிசீலித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், இந்த விவகாரத்தில் தலையிட மறுப்பு தெரிவித்தார்.
தள்ளுபடி
வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “இந்த விவகாரத்தை நாங்கள் விசாரிக்கப் போவதில்லை. குறிப்பாக, இந்த கரப்பான் பூச்சி விவகாரத்தை இவ்வளவு தூரம் உணர்ச்சிவசப்பட்டு எடுத்துக்கொள்ளத் தேவையில்லை” என்று கூறி, சிபிஅய் விசாரணை கோரிய மனுவை அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
