* மக்கள் தொகைக் கணக்கெடுப்பு – ஜாதி வாரிக் கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட பிறகுதான்
மகளிருக்கு இட ஒதுக்கீடு என்ற நிலைப்பாட்டிலிருந்து ஒன்றிய அரசு மாறியது ஏன்?
* தொகுதி மறுசீரமைப்புக்கு ‘ஒரு சிம்பிள் மெஜாரிட்டி போதும்’ என்பது
அரசியலமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் எதிரானதே!
புதுடில்லி, ஏப்.17 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்குப் பிறகுதான் மகளிர் இட ஒதுக்கீடு என்று கூறி வந்த பா.ஜ.க. அரசு, இப்பொழுது திடீர் மாற்றம் அடைந்ததன் பின்னணி என்ன? மறுசீரமைப்பு மசோதா நிறைவேற்றப்பட ‘சிம்பிள் மெஜாரிட்டி போதும் மகளிர் இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளது. மேலும் தொகுதி’ என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் எதிரானது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் நாடாளுமன்றத்தில் அடுக்கடுக்கான வினாக்களை எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் எழுச்சித் தமிழர்
தொல்.திருமாவளவன் உரை
நேற்று (16.4.2026) நாடாளுமன்ற மக்களவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி. அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:
அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் மாற்றப்பட்டிருக்கிறது!
அரசமைப்புச் சட்டம் 131 ஆவது திருத்த மசோதா குறித்த இந்த விவாதத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சில கருத்துகளை முன்வைக்க விரும்புகிறேன்.
மக்கள் தொகையில்
சரி பாதியாக உள்ள பெண்கள்!
2023ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீட்டு சட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்று ஆதரித்தோம். 33% இட ஒதுக்கீடு போதாது, 50 விழுக்காடு மகளிருக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். மக்கள் தொகையில் சரி பாதி பெண்கள் உள்ள நிலையில், அவர்களுக்குச் சரி பாதி இட ஒதுக்கீடு வழங்குவதுதான் சரி என்கிற நிலைப்பாட்டை இன்றைக்கும் கொண்டிருக்கிறோம். அதையே மீண்டும் வலியுறுத்துகிறோம். மகளிர் இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பிரதமர் அவர்கள் நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுக்குக் கடிதம் எழுதி இருந்தார்; எனக்கும் எழுதியிருந்தார், அவருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
புரட்சியாளர் அம்பேத்கருடைய கனவு நனவாகிறது என்பதில் பெருமைப்படுகிறேன்!
அதைப் படித்தபோது, புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் 1951 ஆம் ஆண்டு கொண்டுவந்த இந்துச் சட்ட மசோதா நினைவுக்கு வந்தது. அப்போது அந்தச் சட்டத்தை நிறைவேற்ற விடாமல்
ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபா போன்ற அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் கொடும்பாவிகளைக் கொளுத்தினார்கள். ஆனால், இன்றைக்கு அது தலைகீழாக மாறியிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இன்றைக்கு மகளிருக்கு இட ஒதுக்கீடு கொடுக்க முன்வந்திருப்பதை எண்ணிப் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன். புரட்சியாளர் அம்பேத்கருடைய கனவு நனவாகிறது என்பதில் பெருமைப்படுகிறேன்.
மகளிருக்கு இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது ஒன்றிய அரசின் முதன்மையான நோக்கம் இல்லை!
மகளிர் இட ஒதுக்கீட்டை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. ஆனால், தற்போது இருக்கிற இந்த எண்ணிக்கையிலேயே மகளிருக்கு இட ஒதுக்கீட்டை கொடுக்க முடியும். அதற்கு நாடாளுமன்ற தொகுதிகளுக்கான மறுவரையறை செய்யப்பட்ட பிறகுதான் இதை செய்ய வேண்டும் என்று இல்லை. ஆனால் உடனடியாக இதை நடைமுறைப்படுத்த விரும்புகிற ஒன்றிய அரசு இந்த மறுசீரமைப்பு மசோதாவையும் கொண்டு வந்திருப்பதில் ஒரு உள்நோக்கம் இருப்பது தெரிய வருகிறது. மகளிருக்கு இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது முதன்மையான நோக்கம் இல்லை. நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான மறுவரையறையை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் இந்த அரசின் முதன்மையான நோக்கம் என்று தெரிய வருகிறது.
ஒன்றிய பா.ஜ.க. அரசு தனது நிலைப்பாட்டை உடனே மாற்றிக் கொண்டதன் காரணம் என்ன?
ஏன் தன்னுடைய நிலைப்பாட்டை இந்த அரசு மாற்றி இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. கடந்த முறை பேசும்போது, மகளிருக்கான இட ஒதுக்கீட்டை உடனே நடைமுறைப்படுத்த முடியாது. இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் சென்சஸ் – ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்போடு ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதன் பின்னர் தொகுதி மறுவரையறை ஆணையத்தை அமைத்து, மகளிருக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவோம் என்று சொன்ன அரசு, தனது நிலைப்பாட்டை உடனே மாற்றிக் கொண்டதன் காரணம் என்ன? என்கிற கேள்வி எழுகிறது.
ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்த இந்த அரசுக்கு விருப்பமில்லை. ஏனென்றால், அப்படி நடத்தினால் இந்திய அளவில் ஓபிசி மக்கள் தொகை எவ்வளவு என்பது தெரியவரும். அதன் மூலம் இதுவரையில் மக்கள் தொகை அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தைப் பெற முடியாமல் போனதை அறிந்து, ஓபிசி சமூகத்தைச் சார்ந்த மக்கள் தங்களுக்கான ஜனநாயக உரிமைப் போராட்டங்களை முன்னெடுக்கக் கூடும். இதற்கு இந்த அரசு அஞ்சுகிறது என்ற ஒரு நிலையை உணர முடிகிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
வன்மையாகக் கண்டிக்கிறது
அதுமட்டுமல்லாமல், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பெற்றால், அதன் அடிப்படையில் ஓபிசி சமூகத்தைச் சார்ந்த பெண்களுக்கும் உள் ஒதுக்கீடு கோரப்படும், வலியுறுத்தப்படும். அதற்கான போராட்டங்கள் வெடிக்கும் என்கிற நிலையை உணர்ந்து, அவர்களுக்கு இட ஒதுக்கீடு தரக் கூடாது என்கிற அடிப்படையில், அதாவது ஓபிசி சமூகத்தைச் சார்ந்த மகளிருக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதில் இந்த அரசுக்கு உடன்பாடு இல்லை; அதைத் தவிர்க்க வேண்டும் என்கிற அடிப்படையில் தான், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதற்கு முன்கூட்டியே இந்த மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முனைகிறது என்கிற அய்யம் எழுகிறது. இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
மகளிர் இட ஒதுக்கீட்டில் அரசமைப்புச் சட்டத்தின்படி, எஸ்சி எஸ்டி பெண்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு. ஆனால், ஓபிசி பெண்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை. அந்த கோரிக்கை நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. இங்கே பேசிய பல உறுப்பினர்கள் கூட அந்த உள் ஒதுக்கீடு பற்றிப் பேசினார்கள். ஆனால், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளுக்கு ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த எண்ணம் இல்லை. அதில் அவர்களுக்கு உடன்பாடு இல்லை.
ஜாதி வாரி கணக்கெடுப்பை எடுக்க
ஒன்றிய பா.ஜ.க. அரசு விரும்பவில்லை!
அப்படி செய்தால் ஓபிசி பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்கிற நிலை ஏற்படும். அதைத் தவிர்க்கவே இந்த நிலைப்பாட்டை இந்த அரசு மேற்கொண்டிருப்பதாகத் தெரிய வருகிறது. ஆகவே, இதிலிருந்து தெரிய வருகிற உண்மை, இவர்கள் உடனடியாக சென்சஸ் எடுக்க விரும்பவில்லை. அதிலும் ஜாதி வாரிக் கணக்கெடுப்பை எடுக்க விரும்பவில்லை.
அதுமட்டுமில்லாமல், இந்த ஜாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று சொன்னவர்களை, ‘அர்பன் நக்சல்ஸ்’ என்று பிரதமரே, வசைபாடி இருக்கிறார். இந்த நிலையில் ஓபிசி மக்களின் உணர்வுகளை அவமதிக்கிற இந்த போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டவும், கண்டிக்கவும் கடமைப்பட்டிருக்கிறோம். ஓபிசி மக்களுக்கு குறிப்பாக, பெண்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.
தமிழ்நாடு உள்பட
தென்மாநிலங்கள் பாதிக்கப்படும்!
மூன்று காரணங்களுக்காக நான் இந்த தொகுதி மறுவரையறை மசோதாவைக் கைவிட வேண்டும் அல்லது ஜேபிசிக்கு அனுப்ப வேண்டும் என்று கூறுகிறேன். தென்மாநிலங்கள் இதனால் வஞ்சிக்கப்படும். விகிதாச்சார அடிப்படையில் இந்த எண்ணிக்கையை உயர்த்தலாம்; மக்கள் தொகை அடிப்படையில் எண்ணிக்கையை உயர்த்தக் கூடாது. அப்படி உயர்த்தினால், தமிழ்நாடு உள்பட தென்மாநிலங்கள் பாதிக்கப்படும். ஓபிசி பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுப்பதனால் இந்த சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
அதைவிட முக்கியமாக தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஒரு ‘சிம்பிள் மெஜாரிட்டி போதும்’ என்கிற நிலைக்கு மாற்றி அமைத்திருப்பது ஏற்புடையது அல்ல; அரசியலமைப்புச் சட்டம் என்பது மாற்றப்பட்டிருக்கிறது. எனவே இந்தச் சட்டம் திருத்தப்பட வேண்டும்.
– இவ்வாறு நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் உரையாற்றினார்.

