தமிழ்நாட்டில் ஜோசப் விஜய் ஆட்சியில் ‘குதிரை வேகத்தில்’ நடக்கிறது, ‘குதிரை பேரம்’! ‘தூய சக்தி’ என்று தம்பட்டம் அடித்தவர்கள், ‘துயர சக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்!

வலைதளப் பதிவில் –
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்
கடும் கண்டனம்!

சென்னை, மே 26– தமிழ்நாட்டில், நேற்று (25.5.2026) அ.தி.மு.க.வின் ஒரு பிரிவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர், அக்கட்சியில் இருந்து விலகுவதாக பேரவைத் தலைவரிடம் ‘விலகல் கடிதம்’ அளித்து விட்டு, அதனை அடுத்த நிகழ்வாக – தலைமைச் செயலகத்திலேயே அமைச்சர் ஒருவர் முன்னிலையில் ‘தமிழக வெற்றிக் கழகத்தில்’ இணைந்தனர்.

அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலை களை ஏற்படுத்தியுள்ள இந்நிகழ்வு, தமிழ்நாட்டு மக்கள் அருவருக்கத்தக்க அரசியல் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது என்றால், அது மிகையல்ல!

த.வெ.க.வின் இந்த தகிடுதத்த அரசியல் நகர்வைக் கண்டித்து, நேற்று மாலை சமூக வலைதளத்தில் பதிவிட்ட கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘‘தமிழ்நாட்டில் ஜோசப் விஜய் ஆட்சியில் ‘குதிரை வேகத்தில்’ நடக்கிறது ‘குதிரை பேரம்’ என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் அப்பதிவில் தி.மு.க. தலைவர் அவர்கள், ‘‘தூய சக்தி’’ என்று சுய தம் பட்டம் அடித்தவர்கள், ‘‘துயரசக்தி’’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்– என்றும் சாடியுள்ளார். அதன் விவரம் வருமாறு:

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருந்த அ.தி.மு.க., இ.பி.எஸ். அணி, சி.வி.சண்முகம் – எஸ்.பி. வேலுமணி அணி என இரண்டாக உடைந்தது.

இந்நிலையில், சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி தரப்பு அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களான மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் சத்யபாமா ஆகியோர் தங்கள் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகி, த.வெ.க.வில் இணைந்துள்ளனர். இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

தமிழ்நாடு இதுகாறும் கண்டிராத இந்த அநாகரிக அரசியலைக் கண்டித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதளப் பதிவு வருமாறு :–

‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!

காட்சி 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.

காட்சி 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப் பினரையும் கொசுறு வாங்குவது.

காட்சி 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.

இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்க ளித்தார்களா? ‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.

காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பு பல்லிளிக்கிறது!

என்டிஏ ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து ரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!

– இவ்வாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *