வாசிங்டன், மே 25- பன்னாட்டு அளவில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உலக வங்கி யிடம் அவசரகால நிதியை விரைவாகப் பெறுவதற்காக 27 நாடுகள் நெருக்கடி கால வழி முறைகளை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத் தின் தகவல்படி, இந்த நிதியை கேட்கும் நாடுகளின் பெயர்கள் மற்றும் எவ்வளவு நிதியை ஒவ் வொரு நாடும் கேட்கின்றன என்ற தகவல்களும் இல்லாமல் உலக வங்கியின் ஆவணம் ஒன்று வெளியாகியுள்ளது என குறிப் பிட்டுள்ளது. இது குறித்து கேள்வி எழுப்பிய நிலை யில் உலக வங்கி பதிலளிக்க மறுத்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கி 101 நாடுகளுக்கு “முன் கூட்டியே திட்டமிடப்பட்ட ஒரு அவசரக் கணக்கை” அமைத்துக் கொடுத்துள்ளது. இத் திட்டத்தின் மூலமாக உலக நாடுகள் தங்களுடைய பழைய திட்டங்களுக்காக உலக வங்கியிடம் இன்னும் வாங்காமல் வைத்திருக்கும் தொகையில், 10 சதவிகிதம் வரை எடுத்து, தற் போதைய அவசர நெருக்கடியைச் சமாளிக்க உடனடியாகப் பயன் படுத்திக் கொள்ள முடியும். இதற்காக அவர்கள் புதுக் கடன் வாங்க வேண்டியதில்லை.
2026 பிப்ரவரி 28 அன்று இஸ்ரேலும் அமெ ரிக்காவும் ஈரான் மீது முதலில் போர் தொடுத்தன. இதனைத் தொடர்ந்து ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் தனது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்றுள்ளது. இதன் விளைவாக உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டு பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வருகிறது.
27 நாடுகள்
குறிப்பாக உலகளாவிய வணிகப் போக்கு வரத்து பாதிக்கப் பட்டுள்ளதுடன், வளரும் நாடுக ளுக்குச் செல்ல வேண்டிய அத்தியாவசிய உரக் கப்பல்களும் தடைபட்டுள்ளன. இத்தகைய சூழலில் உலக நாடுகளில் நாளுக்கு நாள் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் பின்னணியில் தான் 27 நாடுகள் அவசர கால நிதியைப் பெற முயன்று வரும் செய்திகள் வெளியாகியுள்ளன.
உலக வங்கியிடமிருந்து இந்த நிதி உதவியைப் பெற முயற்சிப்பதாக கென்யா மற்றும் ஈராக் நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உலக வங்கியிடம் கேட்டுள்ளது போலவே பன்னாட்டு நாணய நிதியத்திடமும் சுமார் 12 நாடுகள் 20 பில்லியன் டாலர் முதல் 50 பில்லியன் டாலர் வரை குறுகிய கால உதவியை எதிர்பார்ப்பதாக அவ்வமைப்பின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா தெரிவித்துள்ளார்.
பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய வளர்ச்சிக் கொள்கை மய்யத்தின் இயக்குநர் கெவின் கல்லாகர் இது பற்றி கூறுகையில், உலக நாடுகள் பன்னாட்டு நாணய நிதியத்துடன் பேச்சு வார்த்தை நடத்துவதை விட உலக வங்கியிடமே நிதி கேட்க விரும்புகின்றன.
ஏனெனில் பன்னாட்டு நாணய நிதியம் கடன் கொடுக்கும் போது சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரில் பல மக்கள் நலத் திட்டங்களை வெட்டவும் வரிகளை அதிகரிக்கவும் நிபந்தனையாக விதிக்கின்றது. இது கென்யா போன்ற நாடுகளில் ஏற்கெனவே நிலவி வரும் பொருளாதார நெருக்கடி யையும், மக்கள் போராட்டத்தையும் மேலும் தீவிரமாக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
