இது அரசியல் பிரச்சினையல்ல; தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை!

7 Min Read

 மேகதாது அணை கட்டும் முன்னெடுப்பு தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் ஆபத்து!
 பிரச்சினையை வளரவிட்டுத் தீர்க்க முடியாது!
 உச்சநீதிமன்றம் உரிய அக்கறை காட்டியிருக்க வேண்டும்!

கருநாடகாவின் பிடிவாதத்தையும், ஒன்றிய அரசு, உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் மெத்தனப் போக்கையும் கண்டித்து
திராவிடர் கழகத்தின் சார்பில் திருவாரூரில் மே 31 அன்று எனது தலைமையில் ஆர்ப்பாட்டம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

மேகதாது அணை கட்டும் முன்னெடுப்பு தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் ஆபத்து எனவும், பிரச்சினையை வளரவிட்டுத் தீர்க்க முடியாது! உச்சநீதிமன்றம் உரிய அக்கறை காட்டியிருக்க வேண்டும்  என்றும், இது அரசியல் பிரச்சினையல்ல; தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை! கருநாடகாவின் பிடிவாதத்தையும், ஒன்றிய அரசு, உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் மெத்தனப் போக்கையும் கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் திருவாரூரில் மே 31 அன்று எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

காவிரியின் பாதையில் இந்தியாவின் மிகப்பெரிய அணைக் கட்டுகளில் ஒன்றான கிருஷ்ணராஜ சாகர் அணை 1931 இல் கட்டப்பட்டு ஏறத்தாழ 12,000 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பயன்பட்டு வருகின்றன. அதன் பிறகு 1960 முதல் 1980 வரை அடுத்தடுத்து கபினி, ஹேமாவதி, ஹரங்கி, சுவர்ணாவதி ஆகிய பெரிய அணைகள் கட்டப்பட்டு, தமிழ்நாட்டுக்கு வரும் தண்ணீரின் வரத்து குறையத் தொடங்கியது.

60 ஆண்டுகளுக்கும் மேலான
உரிமைப் போராட்டம்!

அதிக மழை வெள்ளம் என்றால் மட்டும் அணையைத் திறந்து விடுவதும் (Drainage outlet), மற்ற நேரங்களில் நியாயமாக வழங்கப்பட வேண்டிய உரிய அளவைக் கூட வழங்க மறுப்பதுமாக கருநாடகத்தை ஆளும் எந்தக் கட்சியின் அரசாக இருந்தாலும் நடந்து கொண்டு வந்து தமிழ்நாட்டை வஞ்சித்த சூழலில் தான், இதற்கொரு நடுவர் மன்றம் அமைத்துத் தீர்வு காணவேண்டுமென்று திராவிடர் கழகம் முன்மொழிந்து, ஏராளமான போராட்டங்களுக்குப் பிறகு அது அமைக்கப்பட்டு, அதன் தீர்ப்பு நெடுங்காலம் தள்ளிப் போடப்பட்டு, பின்னர் உச்சநீதிமன்றத்தின் மூலமும் தமிழ்நாட்டின் உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த உரிமைப் போராட்டத்தில் தமிழ்நாட்டில் தி.மு.க, அ.தி.மு.க. என  ஆண்ட கட்சிகள் இரண்டும், அதன் தலைவர்களும் வேண்டிவற்றைச் செய்து நமது உரிமைகளை நிலைநாட்டியுள்ளனர்.

காவிரிப் பிரச்சினைக்கான உச்சநீதிமன்றத் தீர்ப்பும் வெளிவந்து, இப் பிரச்சினை ஒரு வழியாக ஓய்ந்தது என்ற நிலையில் தான் புதிதாக மேகதாது அணை கட்டுகிறோம் என்றொரு பிரச்சினையைக் கிளப்பினர் கருநாடக அரசியல்வாதிகள். காங்கிரஸ், பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று அங்கிருக்கும் கட்சிகள் அனைத்தும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் இவ் விவகாரத்தில் முந்துவது யார் என்றே இதை அரசியல் பிரச்சினையாக்கி உள்ளனர்.

தமிழ்நாட்டிற்குள் காவிரி நுழையும் ஒக்கேனக்கல்லுக்கு 15 கிலோ மீட்டர் முன்பு ராம்நகர் மாவட்டம், ஆடு தாண்டும் காவிரி என்னும் பகுதியில் அணை கட்ட வேண்டும் என்ற இந்தப் பரிந்துரையை வைத்து கடந்த 11 ஆண்டுகளாக அங்கு அரசியல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. காவிரியில் இரண்டு மாநிலங்களும் புதிதாக எந்த அணை கட்டுவதாக இருந்தாலும், காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தின் ஒப்புதல் இல்லாமல் கட்டக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தின் ஆணை ஏற்கெனவே இருக்கிறது. மேகதாது அணை திட்டத்திற்குத் தன்னிச்சையாக சுற்றுச் சூழல் அறிக்கை தயாரிக்கும் முயற்சி, ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு என்றெல்லாம் கடந்த காலங்களில் கருநாடக அரசுகள் முயற்சித்த போது தமிழ்நாடு சட்டரீதியாக முறையிட்டுத் தடுத்துள்ளது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை
மறு ஆய்வு செய்யக் கோரி…

மேகதாது அணைத் திட்ட அறிக்கையை 2018இல் மத்திய நீர்வள ஆணையத்திடம் கருநாடக அரசு தாக்கல் செய்தது, இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு நீதிமன்றம் சென்றது. திட்ட அறிக்கைக்கு அனுமதி அளிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் கருநாடகா அனுமதி கேட்டது. கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களும் இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடினர். கடந்த 2025 நவம்பரில் இது தொடர்பாக ஆணையிட்ட உச்சநீதிமன்றம், ‘‘காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம், காவிரி நதி நீர் ஒழுங்காற்று ஆணையம் ஆகியவற்றின் ஒப்புதல் பெற்றால் தான் கருநாடகா அடுத்து மத்திய நீர்வள ஆணையத்தின் ஒப்புதலை நாட முடியும். எனவே, இன்னும் இரு ஆணையங்களும் அது குறித்து முடிவெடுக்காத நிலையில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடியிருக்க வேண்டிய அவசியமில்லை” என்பதாகத் தீர்ப்பு வழங்கியது. கருநாடக அரசு அடுத்தடுத்து மேற்கொளும் நகர்வுகளுக்குத் தடை விதிக்காமலும், இப் பிரச்சினையை நீட்டிச் செல்லும் வகையிலும் இத் தீர்ப்பு அமைந்துவிட்டது. அந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டிருந்த சூழலில், கடந்த ஏப்ரல் 15 அன்று உச்சநீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. அதன் தீர்ப்பு விவரம், நேற்று (23.5.2026) தான் இணையத்தில் வெளியாகி உள்ளது. “காவிரி தொடர்பான இரு ஆணையங்களும் எந்த முடிவும் எடுக்காத நிலையில் இப்போதும் அதைத் தடுப்பதற்கான தேவை எழவில்லை” என்று கூறிதான் உச்சநீதிமன்றம் மீண்டும் தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் கருநாடக அரசின் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அவர்கள், “காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கருநாடக அரசின் திட்டத்தை எதிர்க்க தமிழ்நாடு அரசுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும், விரிவான திட்ட அறிக்கையை ஒன்றிய அரசிடம் வெகுவிரைவில் தாக்கல் செய்து, அனுமதி பெற்று மேகதாது அணைக்கு அடிக்கல் நாட்டுவோம்’’ என்றும் கூறியிருப்பது இப் பிரச்சினையை மேலும் வலுவாக்குகிறது.

தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய பாசன நீர் முற்றிலுமாகத் தடுக்கப்படும் ஆபத்து உள்ளது!

இதனை ஒரு போதும் அனுமதிக்க முடியாது; கூடாது. இது தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினை. 20 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும், காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாயத்தின் அடித்தளமாகவும் இருப்பது காவிரி நதிநீர் தான். தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய 177 டி.எம்.சி நீரைத் தந்ததற்குப் பிறகு, கருநாடகத்தின் மேகதாது அணைத் திட்டத்தை எதிர்க்கும் உரிமை தமிழ்நாட்டுக்கு இல்லை என்று அவர் கூறியிருப்பது உண்மைக்கு மாறானது. உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும் மாறானது. மழை, வெள்ளக் காலங்களில் கருநாடக அணைகளால் நீரை அடைத்து வைக்க முடியாது என்ற சூழலில் திறந்துவிடப்படும் உபரி நீரை இந்தக் கணக்கில் சேர்க்கக் கூடாது. அப்படிப்பட்ட சூழலில் வரும் நீரைத் தாங்குவதற்காக மேட்டூரில் இருந்து நாமும் நீரைத் திறந்துவிட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே கருநாடகாவின் இந்த வாதம் பொருளற்றது; நியாயமற்றது. சுமார் 67 டி.எம்.சி (TMC) கொள்ளளவு கொண்ட இந்த அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய பாசன நீர் முற்றிலுமாகத் தடுக்கப்படும் ஆபத்து உள்ளது.

பிரச்சினையைப் பெரிதாக்கி, கருநாடகா மாநில அரசியல்வாதிகள் அம் மக்களின் எண்ணவோட்டத்தை வளரவிட்டு, அதை அரசியல் முழக்கமாக்கிய பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் இதனைக் கருதக் கூடாது. அது இரு மாநிலத்தின் அமைதிக்கும், மாநிலம் கடந்து வாழும் மக்களின் நலனுக்கும் விரோதமாகி விடும் என்பதை உச்சநீதிமன்றம் உணர்ந்திருக்க வேண்டும்.

ஒருபோதும் நாம் அனுமதிக்க முடியாது!

‘தாயும் பிள்ளையும் ஒன்று என்றாலும் வாயும் வயிறும் வேறு’ என்பது எளிய கிராமத்துப் பழமொழி. ஆனால், அது சொல்லும் செய்தி வலிமையானது. ‘உறவுக்குக் கை கொடுப்போம் என்பது உரிமைக்குக் குரல் கொடுப்போம்’ என்பதையும் சேர்த்ததே! சமூகநீதி, மாநில உரிமைகள், மதவாத எதிர்ப்பு, திராவிடப் பண்பாட்டுப் பாதுகாப்பு என்ற அளவில் கருநாடகத்துடன் நாம் இணைந்து செயல்படுவதும், அவர்களின் உரிமைக்கும் நாம் குரல் கொடுப்பதும் வேறு; அதே நேரத்தில், தமிழ்நாட்டின் மடியில் கைவைத்து, நியாயமாக நமக்குக் கிடைக்க வேண்டிய பங்கை மறுத்து, மொத்தமாகத் தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் திட்டமாகவே மேகதாது அணை திட்டம் அமையும். அதை ஒருபோதும் நாம் அனுமதிக்க முடியாது.

கருநாடகா அரசின் இத்தகைய நிலைப்பாடு களை, ஒன்றிய பா.ஜ.க. அரசும் வேடிக்கை பார்க்கிறது. காங்கிரசுக்கு மாற்றாக அங்கு ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் பா.ஜ.க.வின் அரசியல் கணக்கு அது! மாநில அரசியலைக் கருத்தில் வைத்து, ஒன்றிய அரசின் கடமையிலிருந்து பா.ஜ.க. நழுவப் பார்க்கிறது.

தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டும் வகையில் மிகக் கவனமாகத் தமிழ்நாடு அரசு இப் பிரச்சினையில் நடந்துகொள்ள வேண்டும்,

திருவாரூரில் மே 31 இல் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டின் உரிமைகளை அபகரிக்கத் துடிக்கும் கருநாடக அரசின் பிடிவாதப் போக்கையும், அதைத் தடுத்து நிறுத்தத் தவறிய ஒன்றிய அரசின் துரோகத்தையும் தமிழர்கள் ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டார்கள். நமது வாழ்வாதார உரிமைப் போர் இது! திராவிடர் கழகத்தின் சார்பில் இதனை வலியுறுத்தி, திருவாரூரில் வரும் மே 31 ஞாயிற்றுக்கிழமை அன்று எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். (கோடை வெப்பம் காரணமாக சரியாக 9 மணிக்குத் தொடங்கி, 10 மணிக்குள் நிறைவடையும் வகையில் ஆர்ப்பாட்டம் திட்டமிடப்பட்டுள்ளது).

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, மன்னார்குடி, கும்பகோணம், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், சிதம்பரம், கடலூர், விருத்தாசலம், புதுச்சேரி மாவட்டங்களிலிருந்து தோழர்களும், டெல்டா பகுதியினர், ஒத்தக் கருத்துள்ளவர்களும் பெருமளவில் கலந்துகொள்வார்கள்.

தமிழ்நாட்டின் உரிமை காப்போம்!
காவிரி உரிமையை மீட்டெடுப்போம்!

கட்சி எல்லைகளைக் கடந்து, தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்தைக் காக்க ஒட்டுமொத்த விவசாயப் பெருங்குடி மக்களும், பொதுமக்களும், இளைஞர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கலந்துகொண்டு தங்களது கண்டனக் குரலைப் பதிவு செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் உரிமை காப்போம்! காவிரி உரிமையை மீட்டெடுப்போம்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை   

24.5.2026

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *