உரிய நேரத்தில் பணிக்கு வராத அலுவலர்கள் மீது நடவடிக்கை பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை

சென்னை, மே 24 பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வரவேண்டும; தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை மூலமாக எச்சரித்து உள்ளனர்.

பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் அலுவலர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வருவதில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் அலுவலர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வரவேண்டும் என அறிவுறுத்தல் வழங்கி சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது;

பள்ளிக்கல்வித் துறையின் பணியாளர்கள் அலுவலகத்திற்கு உரிய நேரத்தில் வருகை தருவதில்லை என சில நிகழ்வுகள் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. தலைமைச் செயலக அலுவலகக் கையேட்டின் பத்தி எண் 510இல் உள்ள அறிவுரைகளின்படி, அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் காலை 10 மணிக்கு அலுவலகத்திற்கு வருகை தர வேண்டும். அதன்படி, இத்துறையின் அனைத்துப் பணியாளர்களும் காலை 10 மணிக்கு முன்னரே அலுவலகத்திற்கு வருகை தர வேண்டும் என இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும், அலுவலகத்தை விட்டு வெளியேறுவதற்கு முன், சம்பந்தப்பட்ட இரண்டாம் நிலை அலுவலர்களிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. அலுவலக உதவியாளர்கள் மற்றும் பதிவு எழுத்தர்கள் அனைவரும் காலை 9.30 மணிக்கே அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், இத்துறையைச் சார்ந்த அரசு சார்புச் செயலாளர்கள், அரசு துணைச் செயலாளர்கள் மற்றும் அரசு கூடுதல் செயலாளர்கள் ஆகியோர் காலை 10 மணிக்கு முன்னரே அலுவலகத்திற்கு வருகை தர வேண்டும் என இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எவ்வகையான விடுப்பு (தற்செயல் விடுப்பு, ஈட்டிய விடுப்பு) அல்லது அனுமதி பெறுவதற்கும், சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் முன்னரே அனுமதி பெற வேண்டும் என்றும்; மேலும் விடுப்பு பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. மேற்கண்ட அறிவுரைகள் மிகக் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்; அவ்வாறு பின்பற்ற தவறும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *