திருப்பூர், மே 24– தி.மு. கழகத் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்க ளின் தலைமையில் நடைபெற்ற கடந்த கால ‘திராவிட மாடல்’ அரசின் சாதனை திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல ஆர்வம் காட்டாத பள்ளிக்கல்வித்துறையால் திருப்பூரில் அரசு பள்ளிகளில் மாணவ, மாணவியர்கள் சேர்க்கையில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டு
திருப்பூர் மாவட்டத்தில் 2026–2027 ஆம் கல்வி ஆண்டிற்கான அரசு பள்ளி மாணவ, மாணவியர் சேர்க்கை நட வடிக்கைகளில் கல்வித்துறை போதிய ஆர்வம் காட்டவில்லை என்றும், இதனால் சேர்க்கை மந்தமாகும் சூழல் நிலவுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
விரிவான விழிப்புணர்வு!
தி.மு.க. தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்அவர்களின் தலைமையில் நடைபெற்ற கடந்த கால ‘திராவிட மாடல்’ ஆட்சியில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு அதிரடி முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. குறிப்பாக, அரசு சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பாடநூல்கள், நோட்டு புத்தகங்கள் சீருடைகள் மற்றும் சைக்கிள் வழங்கும் திட்டங்கள் குறித்தும், உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் ‘புதுமைப்பெண் திட்டம்’ மற்றும் மாணவர்களுக்கான ‘தமிழ்ப் புதல்வன் திட்டம்’ குறித்தும் விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், அரசு பள்ளி மாணவ, மாணவி யர்களின் உயர்கல்வி கனவை நனவாக்கும் ‘நான் முதல்வன் திட்டம்’, தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவ, மாணவியர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீடு, அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான 7.5 சதவீத மருத்துவக்கல்வி இடஒதுக்கீடு மற்றும் மாணவர்களின் சிந்தனையைத் தூண்டும் அறிவியல் சுற்றுலா உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பேனர்கள் அரசு பள்ளிகளின் முன்பாக பிரமாண்டமாக வைக்கப்பட்டன. இந்தத் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு தனியார் பள்ளிகளுக்கு நிகராக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டினர். இதனால், கடந்த ஆண்டு களில் திருப்பூர் மாவட்டத்தில் மாணவ,மாணவியர்கள் சேர்க்கை கணிசமாக உயர்ந்தது. ஆனால், நடப்பு 2026 – 2027 ஆம் கல்வி ஆண்டு தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், திருப்பூரில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கையை அதிகரிப்பதற்கான எந்தவித விழிப்புணர்வு பேனர்களோ அல்லது முறையான முன்னேற்பாடுகளோ இதுவரை செய்யப்படவில்லை. கல்வித்துறையும், பள்ளி நிர்வாகங்களும் மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்துவதில் போதிய ஆர்வம் காட்டாத நிலை நீடிக்கிறது.
மார்ச் ஒன்றாம் தேதி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கிய நிலையில், இரண்டு மாதங்களாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள 14 ஒன்றியங்களிலும் சேர்த்து இதுவரை வெறும் 3,500 முதல் 3,700 வரையிலான மாணவ, மாணவி யர்கள் மட்டுமே அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அரசு பள்ளிகளின் உள் கட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசின் கல்வி நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, மாணவ, மாணவியர்கள் சேர்க்கையை உடனடியாக தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறையும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
