இன்று தேர்தல் அரசியலில் தி.மு.க. வெற்றிவாய்ப்பை இழந்திருக்கலாம்!
கொள்கை அரசியலில் நாம் ஒருபோதும் தோற்றதே இல்லை, தோற்கவே மாட்டோம் – இதுதான் தி.மு.க.வின் பலம்!
தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் உறுதி!
கொள்கை அரசியலில் நாம் ஒருபோதும் தோற்றதே இல்லை, தோற்கவே மாட்டோம் – இதுதான் தி.மு.க.வின் பலம்!
தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் உறுதி!
சென்னை, மே 24– இன்று தேர்தல் அரசியலில் தி.மு.க. வெற்றிவாய்ப்பை இழந்திருக்கலாம், ஆனால், கொள்கை அரசியலில் நாம் ஒருபோதும் தோற்றதே இல்லை, தோற்கவே மாட்டோம். இதுதான் தி.மு.க.வின் பலம். தமிழ்நாட்டின் அரசியல் எதிர்காலம் அறிவுத் தெளிவுள்ள, கொள்கை உறுதியுள்ள இளைஞர்களை நம்பி இருக்கிறது. அவர்களை நாம்தான் தயார் செய்ய வேண்டும். இந்தத் தேர்தலின் முடிவு, இதோடு தி.மு.க. முடிந்து போய்விட்டது என்றெல்லாம் கிடையாது, நமக்கு இனிமேல் புதுப்புதுக் களங்கள் காத்திருக்கின்றன. அதற்கு நாம் தயாராவோம் என்றார் தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
அண்ணா அறிவாலயத்தில் நேற்று (23.5.2026) தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:
“ஒரு மிக முக்கியமான காலகட்டத்தில், இந்த இளைஞர் அணிக் கூட்டம் இங்கே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்குமே
ஒரு மிகப்பெரிய ஏமாற்றம்!
ஒரு மிகப்பெரிய ஏமாற்றம்!
சட்டமன்றத் தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத ஒரு தேர்தல் முடிவு நமக்கு வந்திருக்கிறது. முதலில் நமக்கு மட்டுமே ஏமாற்றமாக இருந்த அந்தத் தேர்தல் முடிவு, நாளாக நாளாக இன்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்க ளுக்குமே ஒரு மிகப்பெரிய ஏமாற்றமாக ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டிருக்கிறது.
இந்தச் சூழலில், நம்முடைய தலைவர் அவர்கள், ரிசல்ட்டுக்குப் பிறகு, முதலில் மாவட்டக் கழகச் செயலாளர்களையெல்லாம் வரச் சொல்லி இதே அரங்கத்தில் சந்தித்தார்கள். அதன் பிறகு, `உடனடியாக நம் இளைஞர் அணி தம்பிமார்களையெல்லாம் நான் சந்திக்க வேண்டும், நீ உடனே இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்’ என்று என்னிடம் அறிவுறுத்தினார்கள். அந்த அடிப்படையில்தான் இன்று இந்தக் கூட்டம் இங்கே இவ்வளவு சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
முதலில் தேர்தலில் வெற்றி வாய்ப்பை நாம் இழந்தத னால், நீங்களெல்லாம் கொஞ்சம் அப்செட்டாக இருப்பீர்கள். உங்களையெல்லாம் உற்சாகப்படுத்த வேண்டும் என்றுதான் நான் வீட்டிலிருந்து காரில் கிளம்பும்போது நினைத்துக்கொண்டு வந்தேன். ஆனால், இங்கே வந்து பார்த்த பிறகுதான் தெரிகிறது நீங்களெல்லாம் என்னையும், தலைவரையும் உற்சாகப்படுத்துவதற்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்து கிளம்பி வந்திருக்கிறீர்கள் என்று.
தி.மு.க.வுக்கும்,
மற்ற கட்சிகளுக்குமான வித்தியாசம்!
மற்ற கட்சிகளுக்குமான வித்தியாசம்!
நாம் தேர்தல் களத்தில் தோற்றிருக்கலாம், ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கான மரியாதை இன்று பல மடங்கு கூடியிருக்கிறது. இதை ஏன் நான் சொல்கிறேன் என்றால், தேர்தல் முடிந்த உடனே, வாக்கு எண்ணிக்கை முடிந்த உடனே, நான்காம் தேதி, இரவு, வெற்றி வாய்ப்பைப் பெற்ற நம் சட்டமன்ற உறுப்பினர்களெல்லாம் சென்னைக்கு வருவதற்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்து கொண்டு இருந்தார்கள். தொடர்வண்டியிலோ, பேருந்திலோ, வானூர்தி யிலோ, இதற்கான பயணச்சீட்டெல்லாம் முன்பதிவு செய்து கொண்டு இருந்தார்கள். ஆனால், இன்று இருக்கக்கூடிய ஆளுங்கட்சியும், பிற சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களு டைய சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் திருட்டுத்தனமாகப் போய் தங்குவதற்கு விடுதிகளில் (ரிசார்ட்டில்) அறை முன்பதிவு செய்துகொண்டு இருந்தார்கள். இதுதான் தி.மு.க.வுக்கும், மற்ற கட்சிகளுக்குமான வித்தியாசம்.
அந்த அளவுக்கு அவர்களுடைய சட்டமன்ற உறுப்பி னர்கள் மேல் அவர்களுடைய தலைமைக்கு நம்பிக்கை. அவர்களுடைய தலைமை மீது அவர்களுடைய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நம்பிக்கை. இதை ஏன் நான் பெருமையோடு சொல்கிறேன் என்றால், தமிழ்நாட்டில் என்றைக்குமே, எப்பொழுதுமே, `ரிசார்ட் பாலிடிக்ஸ்’ செய்யாத ஒரே இயக்கம், நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம், என்கிற பெருமை நமக்கு மட்டும்தான் இருக்கிறது. அதற்கு என்ன காரணம்? தலைமை மீது தொண்டர்களுக்கும், தொண்டர்கள் மீது நம் தலைவர் அவர்களுக்கும் இருக்கக்கூடிய அந்தப் பாண்டிங், அந்த நம்பிக்கை. அந்த நம்பிக்கை இருக்கிற வரைக்கும், நம்முடைய தலைவரையோ, நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தையோ யாரும் தொட்டுக்கூட பார்க்க முடியாது.
நாம் வெறும் தேர்தலுக்காகப் பணியாற்றக்கூடிய அரசியல்வாதிகள் கிடையாது, பிறவிப் போராளிகள்!
நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். நாம் வெறும் தேர்தலுக்காகப் பணியாற்றக்கூடிய அரசியல்வாதிகள் கிடையாது. பிறவிப் போராளிகள், வாரியர்ஸ், கலைஞருடைய உடன்பிறப்புகள், நம்முடைய தலைவருடைய தொண்டர்கள். நம்முடைய இளைஞர் அணியைப் பொறுத்தவரைக்கும், தலைவரின் வழிகாட்டுதலின்படி, நாடாளுமன்றத் தேர்த லுக்குப் பிறகு, கடந்த மூன்று ஆண்டு்களாகவே களத்தில் இறங்கி பல்வேறு பணிகளை செய்திருக்கிறோம் என்பதை நாம் பெருமையாகச் சொல்லலாம்.
குறிப்பாக, நம்முடைய மாநிலத் துணைச் செயலாளர்கள், அனைத்து இளைஞர் அணி நிர்வாகிகள் தங்களுடைய வீட்டைவிட்டு, குடும்பத்தை விட்டு, ஒரு மாதத்துக்கும் மேலாக தங்களுக்காக ஒதுக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதி களில் தங்கி, தேர்தல் வேலைகளையெல்லாம் பம்பரமாகச் சுழன்று செய்தார்கள். அதற்கும் இந்த நேரத்தில் என் பாராட்டுகள், வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வளவு உழைப்பையும் மீறி, நம் தலைவருடைய, நம்முடைய ‘திராவிட மாடல்’ அரசினுடைய திட்டங்களை யெல்லாம் மீறி, நாம் எதிர்பார்க்காத ஒரு முடிவை இன்று தமிழ்நாட்டு மக்கள் கொடுத்திருக்கிறார்கள். சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைப் பற்றி ஏற்கெனவே நம்முடைய தலைவர் அவர்கள் மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். வெறும் 17 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் நாம் இன்று வெற்றிவாய்ப்பை இழந்திருக்கிறோம். இப்பொழுது ஆட்சி அமைத்திருக்கக்கூடிய கட்சிக்கு, மெஜாரிட்டியும் கிடைக்காமல், நம் கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிக ளுடைய ஆதரவால்தான் இன்று இந்த ஆட்சி அமைந்தி ருக்கிறது.
20 ஆண்டுகளுக்கு மேல் நம் முதுகின் மேல் ஏறி நின்று,
நம் மேல் சவாரி செய்த காங்கிரஸ் கட்சி!
நம் மேல் சவாரி செய்த காங்கிரஸ் கட்சி!
நம் கூட்டணியில் இருந்த சில கட்சிகள், நம் தலைவரிடம் வந்து, தலைவரின் உத்தரவு பெற்று, அனுமதியைப் பெற்று ஆளுங்கட்சிக்கு ஆதரவு கொடுத்தார்கள். ஆனால், 20 ஆண்டுகளுக்கு மேல் நம் முதுகின் மேல் ஏறி நின்று, நம் மேல் சவாரி செய்த காங்கிரஸ் கட்சி, இன்று நம் முதுகில் குத்திவிட்டுப் போயிருக்கிறது. இதை யாரும் மறந்து விடாதீர்கள்.
இந்தியாவில், பா.ஜ.க.வின் தொடர் வெற்றிக்கு நான் கூட மோடியும், அமித்ஷாவும்தான் காரணம் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால், காங்கிரஸ் கட்சிதான் பா.ஜ.க.வின் வெற்றிக்குக் காரணம் என்பது இப்பொழுது தெரிகிறது. அப்படிப்பட்டகாங்கிரஸை கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் சுமந்துகொண்டு இருந்தோம்.
காங்கிரசுக்குச் சரியான பாடத்தை தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் வெகு விரைவில் கற்றுக் கொடுப்பார்கள்!
மதச்சார்பின்மையைப் பாதுகாக்க வேண்டும், பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டுக்குள் விட்டுவிடக் கூடாது என்று நம் தொண்டர்கள், நாம் இரத்தத்தையும், வேர்வையையும் சிந்தி, காங்கிரஸ் வேட்பாளர்களை வெற்றிபெற வைத்துக்கொண்டு இருந்தோம். இந்தத் தேர்தலிலும் அதைத்தான் செய்தோம். களத்திலேயே இல்லாத காங்கிரஸ் கட்சி, இன்று அய்ந்து இடத்தில் வெற்றி பெற நம் உடன்பிறப்புகள், நம் தலைவரின் தொண்டர்கள், தி.மு.க.காரன்தான் காரணம். இன்று நம் தலைவர் அவர்கள் முதலமைச்சராக வேண்டும் என்று மக்கள் போட்ட ஓட்டில் வெற்றி பெற்றுவிட்டு, பதவிக்காகச் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போய்விட்டார்கள். குறைந்தபட்சம் ஒரு நன்றியோ, நாகரிகமோ இல்லாத காங்கிரஸை, இனி எந்தக் காலத்திலும் நாம் நம்பக்கூடாது. எந்தக் காலத்திலும் நாம் அவர்களை கிட்டே சேர்க்கக் கூடாது. அவர்களுக்குச் சரியான பாடத்தை, நாம் கற்றுக் கொடுக்கிறோமோ இல்லையோ தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் வெகு விரைவில் கற்றுக் கொடுப்பார்கள்.
உங்களோடு தோளோடு தோள் நிற்பேன்!
வருகிற ஜூன் 3 ஆம் தேதி முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாள். அதை மிகச் சிறப்பாக நாம் கொண்டாட வேண்டும். நலத்திட்ட உதவி நிகழ்ச்சிகளை நடத்துங்கள். பிரம்மாண்டமாக இல்லாமல், அவரவர் வசதி வாய்ப்பிற்கு ஏற்றமாதிரி நலத்திட்ட உதவி நிகழ்ச்சிகளை நடத்துங்கள். நீங்கள் நடத்துகிற நிகழ்ச்சியில் யார் கலந்துகொள்கிறார்களோ இல்லையோ, உங்கள் குடும்பத்தில் இருக்கிறவர்களைத் தயவுசெய்து கலந்துகொள்ளச் சொல்லுங்கள். உங்களின் மனைவி, சகோதரர்கள், மகன்கள், மகள்கள் ஆகியவர்கள் தயவுசெய்து அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும்.
இன்று நாம் ஆட்சியைவிட்டு வந்திருக்கலாம். ஆனால், இன்றைக்கும் நம் ஆட்சியின் சாதனைகள்தான் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. நம் தலைவருடைய ஆட்சியின் சாதனைகளுக்கு, இன்று இந்த `சோபா மாடல் அரசு’ ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு இருக்கிறது.
நான் சட்டமன்றத்தில் பேசினேன், நீங்கள் அத்தனைபேரும் பார்த்திருப்பீர்கள், `இது வெறும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுகிற ஆட்சியாக இல்லாமல், ஒரு ரியல் ஆட்சியைத் கொடுங்கள்’ என்று நான் சொன்னேன். ஆனால், இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் அறையிலேயே ரீல்ஸ் எடுத்துப் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அதுதான் இந்த ஆட்சியின் இலட்சணம்.
நாள்தோறும் பொய்ச் செய்திகளைப் பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்!
இந்த ஆட்சி அமைந்து கொஞ்ச நாளிலேயே இன்று தமிழ்நாட்டில் ஏராளமான குற்றச்சம்பவங்கள் நாள்தோறும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தச் செய்திகளை எல்லாம் மறைக்க ஆளுங்கட்சியின் `ஆன்லைன் மாஃபியா குரூப்’ நாள்தோறும் பொய்ச் செய்திகளைப் பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். இதையெல்லாம் நாம் மட்டும் இல்லை, இன்று பொதுமக்களும் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள், விரைவில் கேள்வி கேட்க ஆரம்பிப்பார்கள். இந்த ஆட்சியின் உண்மை முகம் முழுமையாகத் தெரிந்தவுடன் தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் நம் தலைவரிடம் வந்து நிற்பார்கள், நம் தலைவரைத் தேடி வருவார்கள். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை.
தேர்தல் முடிவுக்கு நாம் ஒருவர் மேல் ஒருவர் யாரும் பழி போடக்கூடாது, பழிபோட வேண்டாம். ஆனால், ஒன்று முக்கியம், இந்த முடிவுகளில் இருந்து என்ன பாடத்தை நாம் கற்றுக்கொண்டிருக்கிறோம், எந்த இடத்தில் நாம் விட்டுவிட்டோம், எந்த இடத்தில் நாம் தவறவிட்டுவிட்டோம், சறுக்கிவிட்டோம் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அதையெல்லாம் யோசித்து, சரிபார்த்து `கோர்ஸ் கரெக்ஷன்’ செய்து அடுத்தடுத்த பணிகளை நாம் வகுத்துக்கொள்ள வேண்டும்.
இந்தத் தேர்தலில சோசியல் மீடியா ஒரு முக்கியமான பங்கு வகித்திருக்கிறது, நாம் அங்கேதான் தவறவிட்டுவிட்டோம் என்பது என் எண்ணம். ஆனால், அதே நேரத்தில் வெறும் சோசியல் மீடியா மீது பழி போட்டுவிட்டு அதைக் காரணமாகச் சொல்லிவிட்டு, நாம் ஒதுங்கிவிடக் கூடாது. ஏனென்றால், தேர்தலில் நாம் வெளியே எல்லாரிடமும் ஓட்டுக் கேட்டோம். ஆனால், வீட்டிற்குள் கேட்காமல் விட்டுவிட்டோமோ என்கிற சந்தேகம் எனக்கு வந்திருக்கிறது.
நீங்கள் வெளியில் உள்ளவர்களை எல்லாம் சந்தித்து அரசியல்மயப்படுத்துவதற்கு முன் உங்கள் வீட்டில், உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை, உறவினர்களை நீங்கள் முதலில் அரசியல்மயப்படுத்துங்கள். நாள்தோறும் அவர்களிடம் அரசியல் பேசுங்கள். ஆனால், அவர்களுக்குப் புரிகிற மொழியில் பேசுங்கள். குடும்பத்தில் இருக்கக்கூடிய இளைய தலைமுறையை, அடுத்த தலைமுறையை அரசியல் படுத்த வேண்டியது நம்முடைய பொறுப்பு. குறிப்பாக, ஜென்–ஸி (Gen–Z) இளைஞர்களிடம் உண்மைகளை அவர்களுக்குப் புரிகிற மொழியில் எடுத்துச் சொல்லுங்கள்.
இன்று இருக்கக்கூடிய இளைஞர்களெல்லாம் ரொம்ப வேகமானவர்கள். ஒரு விஷயத்தை எவ்வளவு சுருக்கமாகச் சொல்கிறோமோ, அதை அவர்கள் அவ்வளவு கூர்மையாகப் புரிந்துகொள்கிறார்கள். ஆகவே, நம் வரலாறு, நம்முடைய சாதனைகள், தியாகத்தை அவர்களுக்கெல்லாம் புரிகிற மொழியில் அவர்களிடம் சொல்லிக்கொண்டே இருப்போம்.
புள்ளிவிவரத்தோடு
எளிமையாகப் பதிவிடுங்கள்
எளிமையாகப் பதிவிடுங்கள்
சமூக ஊடகங்களில் நீங்கள் எல்லாரும் வேகத்துடன் இருக்க வேண்டும். ஏதோ பெயருக்குச் சமூக ஊடகங்களில் இருக்கிறோம், கணக்கு வைத்திருக்கிறோம் என்று இல்லாமல், நீங்களே கன்டென்டை உருவாக்குங்கள். இந்த ‘சோபா மாடல்’ அரசின் குறைகளை, நாம் செய்த சாதனைகளை எல்லாம் புள்ளிவிவரத்தோடு எளிமையாகப் பதிவிடுங்கள்.
இன்று தேர்தல் அரசியலில் தி.மு.க. வெற்றிவாய்ப்பை இழந்திருக்கலாம், ஆனால், கொள்கை அரசியலில் நாம் ஒருபோதும் தோற்றதே இல்லை, தோற்கவே மாட்டோம். இதுதான் தி.மு.க.வின் பலம். தமிழ்நாட்டின் அரசியல் எதிர்காலம் அறிவுத் தெளிவுள்ள, கொள்கை உறுதியுள்ள இளைஞர்களை நம்பி இருக்கிறது. அவர்களை நாம்தான் தயார் செய்ய வேண்டும். இந்தத் தேர்தலின் முடிவு, இதோடு தி.மு.க. முடிந்து போய்விட்டது என்றெல்லாம் கிடையாது, நமக்கு இனிமேல் புதுப்புதுக் களங்கள் காத்திருக்கின்றன. அதற்கு நாம் தயாராவோம்.
நம்முடைய தலைவர் வழியில், நாம் நிச்சயம் சிறப்பாகச் செயல்படுவோம். தலைவர் அவர்கள் இங்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்க இருக்கிறார்கள். எனவே, வந்திருந்த உங்கள் அத்தனை பேருக்கும் மீண்டும் என் நன்றியைக் கூறி, தலைவரின் சொல் கேட்டு, அவரின் கரங்களை நாம் அனைவரும் பலப்படுத்துவோம் எனக் கூறிக்கொண்டு, இந்தச் சிறப்பான வாய்ப்பைக் கொடுத்த தலைவருக்கும் அனைத்து அமைப்பாளர்களுக்கும், துணை அமைப்பாளர்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.
இவ்வாறு தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் உரை யாற்றினார்.
