பெரியார் திடலில்… நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு கோடைகால சிறப்பு வகுப்புகள் நடைபெற்றன!

சென்னை, மே 24 சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் ஆங்கில இலக்கியம் முதுகலை மற்றும் இளநிலை பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட இருபால் மாணவர்கள் சென்னை வேப்பேரியில் இருக்கும் பெரியார் திடலுக்கு கோடைகால சிறப்புப் பயிற்சிக்காக வருகை தந்தனர்.

கடந்த 15 ஆண்டுகளாக எமரால்டு பதிப்பகத்தின் சார்பில், கல்லூரி மாணவர்களுக்கு பதிப்புத் துறை சார்ந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டும் எமரால்டு பதிப்பகத்திற்கு ஆங்கில இலக்கியம் சார்ந்த இளநிலை மற்றும் முதுகலை சேர்ந்த இருபால் மாணவர்கள் 110 பேர், வருகை தந்திருந்தனர். அந்த மாணவர்களுக்கு, கடந்த 22.05.2026 அன்று காலை 10.30 மணி முதல், பிற்பகல் 3 மணி வரை சென்னை, பெரியார் திடலில்  கோடைக்காலச் சிறப்பு வகுப்புகள் நடைபெற்றன.

எமரால்ட் ஒளிவண்ணன்

திராவிடர் கழகம்

முதல் வகுப்பு, சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார்  குளுமை  அரங்கில்  நடைபெற்றது. முதலில் எழுத்தாளரும், மொழி பெயர்ப்பாளருமான பத்மா அமர்நாத் அவர்கள், பெரியார் திடல் மாணவர்களை வரவேற்று உரையாற்றினார்.

தொடர்ந்து எமரால்ட் ஒளிவண்ணன் அவர்கள், பெரியார் திடலில் மாணவர்களுக்கு எது மாதிரியான வகுப்புகள் நடைபெறவுள்ளன? பெரியார் திடலிலின் சிறப்புகள் என்னென்ன என்பதைச் சுட்டிக்காட்டி உரையாற்றினார். அதைத்தொடர்ந்து, திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர்  ச.பிரின்சு என்னாரெசு பெரியார், ‘ஊடகத்தின் அவசியம் குறித்தும், பெரியார் என்னென்ன ஊடகங்களின் வழியாக இந்த சமூகத்தில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தினார்’ என்பது குறித்தும் வகுப்பு எடுத்தார்.

திராவிடர் கழகம்

பெரியார் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்ட மாணவர்கள் (சென்னை, 22.5.2026)

மூன்று குழுக்களாக
பிரிக்கப்பட்டு…

தேநீர் இடைவேளைக்குப் பிறகு, மாணவர்கள் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு, அக்குழுக்களுக்கு முனைவர் அதிரடி அன்பழகன், ஊடகவியலாளர் முரளி கிருஷ்ணன் சின்னத்துரை, உடுமலை வடிவேல் ஆகியோர் வழிகாட்டிகளாக பொறுப்பேற்றுக்கொண்டு, பெரியார் நினைவிடம், பெரியார் புத்தக‌நிலையம், பெரியார் காட்சியகம், விடுதலை அச்சகம், பெரியார் எணினி (Digital)நூலகம், ‘விடுதலை’  நாளிதழ் வடிவெடுக்கும் (Editorial) இடம் ஆகியவற்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு அந்தந்த இடங்களின் முக்கியத்துவம் பற்றி, பணிகள் பற்றி, அந்தந்த குழுக்களின் பொறுப்பாளர்கள் விவரித்தனர். மாணவர்களும் கேள்விகள் கேட்டும் பதில்களைப் பெற்றுக் கொண்டனர்.

அதைத்தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் இணைந்து, திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடன் குழு ஒளிப் படம் எடுத்துக் கொண்டனர். கழகத் தலைவரின் அறிவுரைப்படி அவர்களுக்கு, ‘விடுதலை’ நாளேடு, ‘உண்மை’, ‘The Modern Rationalist’ ஆகிய இதழ்கள் மற்றும், தந்தை பெரியாரின், ‘இனிவரும் உலகம்’ புத்தகம் ஆகியவை இலவசமாகவும்,  பெரியார் புத்தக நிலையத்தைப் பார்வையிடும் போது, இருபால் மாணவர்களும் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ ‘மரணம்’ ஆகிய புத்தகங்களின் தமிழ், ஆங்கிலப் பதிப்புகளை உரிய தொகை கொடுத்தும் பெற்றுக் கொண்டனர்.

ஒருங்கிணைப்பாளர் பத்மா அமர்நாத்

திராவிடர் கழகம்

மதிய உணவுக்குப் பிறகு, மாணவர்கள் அனைவரும் கருத்து படிவத்தில் (Feed back) தங்கள் கருத்துகளை உற்சாகத்துடன் பதிவு செய்து வழங்கினர். அதைத் தொடர்ந்து, ‘விடுதலை’ நாளிதழ் அச்சுக் கூடத்தில் உருவாவதை நேரில் கண்டு அதனைத் தங்கள் கைபேசிகளில் பதிவு செய்து கொண்டனர். வீடு திரும்பிய பிறகும், தங்கள் வாட்ஸ்ஆப் குழுவில் அவர்களுடைய நன்றியையும், மகிழ்ச்சியும் வெளிப்படுத்தினர். ஒருங்கிணைப்பாளர் பத்மா அமர்நாத் அவர்களுக்கு, கழகத் தலைவர் புத்தகங்களை வழங்கி வாழ்த்தினார்.

இந்த ஒட்டுமொத்த நிகழ்ச்சியும் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களின் வழிகாட்டுதல்களுடன் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. தலைமை நிலையத்திலிருந்து இளவேனில், விஜய், ‘விடுதலை’ அச்சக மேலாளர் சரவணன், பிரபாகரன் மற்றும் யுகேஷ், புகழேந்தி ஆகியோர் ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *