புதுடில்லி, மே 22 ஆப்பிரிக்காவில் ‘எபோலா’ வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருவதை அடுத்து, புதுடெல்லியில் நடைபெறவிருந்த 4-வது இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
இந்தியா மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியம் ஆகிய இரு தரப்பும் இணைந்து 4-ஆவது இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாட்டை டெல்லியில் மே 28-ம் தேதி முதல் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாகச் செய்து வந்தன. இந்நிலையில், ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் கொடிய எபோலா வைரஸ் பாதிப்புகள் வேகமாகப் பரவி வருகின்றன. குறிப்பாக, காங்கோ ஜனநாயகக் குடியரசில் ‘பண்டிபுகியோ’ (Bundibugyo) என்ற அரிய வகை எபோலா வைரஸ் தீவிரமாகப் பரவி வருகிறது. அங்கு இதுவரை 130-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
எபோலா வைரஸின் வீரியத்தைக் கருத்தில் கொண்டு, உலக சுகாதார அமைப்புபன்னாட்டு சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.
பன்னாட்டு அளவில் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழ்நிலை மற்றும் பாதுகாப்பு காரணங்களால், திட்டமிட்டபடி மாநாட்டை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, ஆப்பிரிக்க ஒன்றியத் தலைவர்களுடன் ஒன்றிய அரசு அவசர ஆலோசனைகளை மேற்கொண்டது. இரு தரப்பு ஒப்புதலுடன், டெல்லியில் தொடங்கவிருந்த உச்சி மாநாட்டை காலவரையறையின்றி ஒத்திவைக்க இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக முடிவு செய்துள்ளது.
