சென்னை, மே 17- பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. இது போக்குவரத்து செலவுகளை அதிகரிக்கும் என்றும், இதன் காரணமாக விலைவாசி ஏவுகணை வேகத்தில் உயரும் என்றும் வல்லுநர்கள் எச்சரித் துள்ளனர்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் கச்சா எண்ணெய் விலை பன்னாட்டுச் சந்தையில் குறைந்த போதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை.
இப்படி இருக்கையில் கச்சா எண்ணெய் விலை உயர்த்திருக்கும்போது எரிபொருள் விலையை உயர்த்துவதில் என்ன நியாயம் இருக்கிறது என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
விலைவாசி உயர்வு
அதே நேரம் எரி பொருள் விலை உயர்வு, இந்தியாவில் விலைவாசியை மேலும் அதிகரிக்க செய்யும் என்று வல்லுநர்கள் எச்சரித் துள்ளனர்.
இந்தியாவில் காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் பால் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் பெரும்பாலும் லாரிகள் மூலமே மாநிலங்களுக்கு இடையே கொண்டு செல்லப் படுகின்றன.
டீசல் விலை உயரும் போது, லாரி வாடகை மற்றும் சரக்குக் கட்டணம் அதிகரிக்கிறது. இந்த கூடுதல் செலவை சரக்கு உரிமையாளர்கள் நுகர்வோர் மீதே சுமத்து கின்றனர்.
விவசாயிகளின் நிலை
அதாவது, டீசல் விலை உயர்வால் போக்குவரத்துச் செலவு 10% அதிகரித்தால், சந்தையில் விற்கப்படும் தக்காளியின் விலையும் அதற்கேற்ப உயர்கிறது.
மறுபுறம் இந்திய விவசாயிகள் நிலத்தை உழுவதற்கும், நீர் இறைப் பதற்கும், அறுவடை செய்வதற்கும் டீசலில் இயங்கும் டிராக்டர்கள் மற்றும் பம்ப்செட்களையே பெரிதும் நம்பியுள்ளனர்.
எரிபொருள் விலை உயர்வு விவசாயத்தின் உள்ளீட்டுச் செலவை அதிகரிப்பதால், விளை பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் விவ சாயிகளுக்கு ஏற்படுகிறது.
தொழிற்சாலைகளின் நிலை
அதேபோல பெரிய தொழிற்சாலைகள் மற்றும் சிறு தொழில்களில் மின் சாரம் தடைபடும் போது டீசல் ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும், கச்சா எண்ணெயிலிருந்து பெறப் படும் மூலப்பொருட்கள் பிளாஸ்டிக், உரங்கள் மற்றும் ரசாயனத் தொழில்களில் பயன்படுத்தப்படுகின்றன. எரிபொருள் விலை உயர்வு இந்தத் தயாரிப்புகளின் விலையையும் உயர்த் துகிறது.
வல்லுநர்கள் எச்சரிக்கை
எனவே எரிபொருள் விலை உயர்வால் ஒட்டு மொத்தப் பணவீக்கம் அதிகரிக்கிறது. சமீபத்திய தரவுகளின்படி, எரிபொருள் மற்றும் மின் சாரப் பிரிவில் பணவீக்கம் 24.7% ஆக உயர்ந்துள்ளது.
இது தொழிற்சாலைப் பொருட்களின் விலையை உயர்த்தும். அதேபோல போக்குவரத்துச் செலவு அதிகரிப்பதன் மூலம் அரிசி, பருப்பு, பால் போன்ற அன்றாடப் பொருட்களின் விலை உயர்ந்து, நடுத்தர மக்க ளின் பட்ஜெட்டைப் பாதிக்கும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
