வி.சி.வில்வம்

சிலருக்கு மட்டுமே பெயரோடு, ஊரும் ஒட்டிக் கொள்ளும். அந்த வகையில் ‘முத்தையன்’ என்பதைவிட, ‘தாம்பரம் முத்தையன்’ என்றாலே அனைவருக்கும் தெரியும். அதுவும் மன்னார்குடியில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பைங்காநாடு கிராமத்தில் பிறந்து வளர்ந்து, அங்கிருந்து சென்னை வந்து, அனைவரையும் அரவணைக்கும் பண்பு கொண்ட தாம்பரம் முத்தையன் குறித்து இந்த வாரம் பார்ப்போம்!
அய்யா வணக்கம்! நீங்கள் சென்னை வந்த கதையைக் கூறுங்கள்?
பக்கிரிசாமி-குஞ்சம்மாள் ஆகியோருக்கு 1960ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தேன். இப்போது 65 வயதாகிறது. ஒன்பதாம் வகுப்பு முடித்த நிலையில், வேலை தேடி சென்னை, தாம்பரத்திற்கு 1975ஆம் ஆண்டு வந்தேன். நான் வந்த போது மன்னார்குடி – சென்னை பயணச்சீட்டு 18 ரூபாய். இங்கு வந்ததும் தெரிந்தவர் மூலம் வெற்றிலை சீவல் கடையில் வேலைக்குச் சேர்ந்தேன். மாத ஊதியம் ரூ.30. கடைக்குப் பொருட்கள் வாங்க வரும் கிறிஸ்டோபர் எனும் ஆசிரியருடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. இறுதிவரை நல்ல ஆலோசனைகளையும், பொருளாதார உதவிகளையும் அவர் செய்தார். நான்கு ஆண்டுகள் வேலை பார்த்த நான், 1979ஆம் ஆண்டு, 19ஆம் வயதில் சொந்தமாகக் கடை வைத்தேன்.
அப்போதெல்லாம் நீங்கள் கொள்கையில் இருந்தீர்களா?
இல்லை. அதேநேரம் 1978, 1979 கால கட்டங்களில் நோன்பு இருந்து அய்யப்பன் கோயிலுக்குச் செல்வேன். இந்நிலையில் எங்கள் ஊர்க்காரர் ஒருவர், அமைச்சராக இருந்த
எஸ்.டி.சோமசுந்தரம் அவர்களைப் பார்க்க தலைமைச் செயலகம் வந்திருந்தார். என்னையும் அழைத்துக் கொண்டு போனார். நான் மாலையிட்டு சென்றதைப் பார்த்து அமைச்சர், “இங்கே இல்லாத கடவுளா? ஏன் கேரளாவிற்குச் செல்கிறீர்கள்? பெரியார் புத்தகங்களை வாங்கிப் படியுங்கள்”, என்று கூறினார்.
ஒரு அமைச்சரே இப்படிச் சொல்கிறாரே என எனக்கு வியப்பாக இருந்தது. எங்கள் கடைக்கு அருகில் “தங்கமணி பேப்பர் ஸ்டோர்” எனப் பிரபலமான ஒரு கடை இருந்தது. அங்கு ‘விடுதலை’ நாளிதழ் விற்பனைக்குக் கிடைத்தது. அதை வாங்கிப் படிக்கத் தொடங்கினேன். அதில் திராவிடர் கழகப் புத்தகங்களின் பட்டியலும் இருந்தது. அதையும் அந்தக் கடைக்காரர் மூலமே வாங்கிப் படிக்கத் தொடங்கினேன். இப்படி தொடர்ச்சியான வாசிப்பு என்னைப் பகுத்தறிவாளராக மாற்றியது.
இயக்க அறிமுகம் எப்போது கிடைத்தது?
எங்கள் அப்பா கிராமத்தில் தலையாரியாக இருந்தார்கள். கணக்குப் பிள்ளையாக பார்ப்பனர் ஒருவர் இருந்தார். பெரியார் புத்தகங்களை நான் படிக்கிற போது, எங்கள் கிராமத்தில் நடைபெறும் ஜாதிக் கொடுமைகள், பார்ப்பனர்கள் காட்டும் வேறுபாடுகள் நினைவிற்கு வந்தது. இந்நிலையில் நான் படித்த நூல்கள் என்னுள் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தன. அப்போது எனக்கு 22 வயது இருக்கும். அதன் பிறகும் தொடர்ந்து பகுத்தறிவு நூல்களை வாசித்து வந்தேன். எனது 26ஆவது வயது வரை இயக்க ரீதியாக நான் செயல்படவில்லை.
இதற்கிடையில் தி.ரா.இரத்தினசாமி அவர்கள் எங்கள் கடைக்குப் பொருட்கள் விற்பனை செய்ய வருவார். அவரின் இருசக்கர வாகனத்தில் “மனிதன் கண்டுபிடித்தது மின்சக்தி, மடையன் கண்டுபிடித்தது ஓம்சக்தி” என எழுதியிருக்கும். அவர் மூலம்தான் திராவிடர் கழக அமைப்பு எனக்கு அறிமுகமானது. அதன்பின்னர் தாம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டம் ஒன்றில், கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் கலந்து கொண்டார். அந்த மேடையில் ஏறி, என்னைத் திராவிடர் கழகத்தில் இணைத்துக் கொண்டேன்.
உங்கள் திருமணம் எப்போது நடைபெற்றது?
1988ஆம் ஆண்டு, எனது 28ஆவது வயதில் முதன் முதலில் பெரியார் திடலுக்குப் போனேன். அன்று முதல் இன்று வரை கருப்புச் சட்டைதான் அணிகிறேன். 1990ஆம் ஆண்டு ஆசிரியர் தலைமையில் எங்களுக்குத் திருமணம் நடைபெற்றது. அதற்கு முன்பு கூட்டங்களில் மட்டுமே பார்த்த ஆசிரியர் அவர்களை, திருமண அழைப்புக் கொடுக்கும் போது நேரில் பார்த்தேன். தாம்பரத்தில் நடைபெற்ற எங்கள் திருமணத்தில் ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டார்கள். தி.ரா.இரத்தினசாமி, ஆவடி மனோகரன், கிரிதரன் உள்ளிட்டோர் திருமணத்தில் பேசினர். எனக்கு வழிகாட்டியாக இருந்த ஆசிரியர் கிறிஸ்டோபர், இத்திருமணத்திற்குப் பெரும் உதவியாக இருந்தார். குடும்ப நண்பராகவும் இருந்த அவர், பின்னாளில் மறைந்து போனார்.
எனது இணையர் பெயர் நாகவள்ளி. அவரும் மன்னார் குடியைச் சேர்ந்தவர். தொடக்கத்தில் ஆத்திகராக இருந்தார். பின்னாளில், திராவிடர் கழகத்தில் இணைந்து, தற்போது கழகத்தில் நன்றாகச் செயல்பட்டு வருகிறார். மாவட்ட மகளிரணித் தலைவராக உள்ளார். அண்மையில் மும்பையில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டிலும் பங்கேற்றார். எங்கள் மகள் கனிமொழி சைனாவில் மருத்துவம் படித்தவர். அவரின் இணையர் பெயர் சிறீஜித். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவரும் மருத்துவர். இருவருமே கேரளாவில் பணிபுரிகிறார்கள். தன்விருப்பத் திருமணம் செய்து கொண்டவர்கள்.
மகன் மணிமாறன் சென்னையில் இயந்திரவியல் துறையில் பணி செய்கிறார். பகுத்தறிவாளர் கழகத்தைச் சேர்ந்த குடியாத்தம் அருள்மொழி அவர்களின் மகள் ஓவியாவைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். எனது திருமணத்திற்குத் தலைமையேற்ற ஆசிரியர்தான், மகன் திருமணத்திற்கும் தலைமையேற்று நடத்தி வைத்தார். “எங்கள் குடும்பங்களின் தலைவர்” என்று நாங்கள் சொல்வதற்கு, இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? சற்றொப்ப 3 ஆயிரம் பேர் பங்கேற்று, மாநாடு போல நடந்தது அந்தத் திருமணம்!
என்ன பொறுப்பில் இருக்கிறீர்கள்? வெளியூர் நிகழ்ச்சிகளுக்குப் போவதுண்டா?
தாம்பரம் நகரத் தலைவர், கோட்ட செயலாளர் பொறுப்பு களில் இருந்தேன். தற்போது 25 ஆண்டுகளுக்கு மேலாக மாவட்டத் தலைவராக இருக்கிறேன். தி.ரா.இரத்தினசாமி அய்யா மகன் இராமசாமி மாவட்டத் தலைவராக இருந்தார். அதன்பிறகு அந்தப் பொறுப்பிற்கு நான் நியமிக்கப்பட்டேன். சென்னையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொள்வேன். பெரியார் திடல் நிகழ்ச்சி என்றால் கண்டிப்பாகப் போய்விடுவேன்.
மறைமலை நகரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் தோழர்களுடன் இணைந்து நானும் ஒருங்கிணைத்தேன்.
தவிர தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் பெரிய நிகழ்ச்சிகள் மற்றும் மாநாடுகளுக்குச் சென்றுவிடுவேன். பெரும்பாலும் என் இணையரும் கலந்து கொள்வார்கள். திடலில் நடைபெறும் பெரிய நிகழ்ச்சிகளின் போது “கேண்டீன்” நடத்துவேன். திருச்சி, சிறுகனூரில் நடைபெற்ற மாநாட்டில் பிரியாணி தயார் செய்து விற்பனை செய்தோம். இந்தியாவில் பெங்களூரு, டில்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும், ஜெர்மன், அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன். சொந்தப் பணியாக மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கும் சென்றுள்ளேன். அங்கும் தோழர்களைச் சந்தித்துள்ளேன். குறிப்பாக ஆசிரியர் மலேசிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, நானும் அங்கிருந்தேன். அப்போது மலேசியா நாணயம் “ரிங்கிட்” கணக்கு செய்து நூல்கள் விற்பனை செய்துள்ளேன். அதேபோல அமெரிக்காவில் “டாலர்” மதிப்பிலும் நூல்கள் விற்பனை செய்யும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.
பிறந்த ஊர் மன்னார்குடி என்றாலும், சொந்த ஊர் தாம்பரம் என்றானது. ஆசிரியரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பைப் பெறுவீர்கள். அந்த அனுபவத்தைக் கூறுங்கள்?
இந்த இயக்கம் இருப்பதற்கு ஒரே காரணம் ஆசிரியர் மட்டுமே! எத்தனையோ பேர் வந்திருக்கலாம், போயிருக்கலாம், ஆனால், இந்த இயக்கமும், சொத்துக்களும் பாதுகாக்கப்பட்டது நமது தலைவரால் தான்! ஆசிரியரின் சிந்தனையும், உழைப்புமே அனைத்து முன்னேற்றத்திற்கும் காரணம்! சலிப்பும், ஓய்வும் கூடாது என்பதற்கு ஆசிரியரே முன்னோடி. 1995ஆம் ஆண்டு காலத்தில் “பெரியார் நகர்வுப் புத்தகச் சந்தை” எனும் வாகனம் தமிழ்நாடு முழுக்கச் சென்றது. அந்த வாகனத்தைத் தாம்பரத்தில் வைத்துப் புத்தகங்களை விற்பனை செய்தோம். மூன்றே நாளில் ஒரு இலட்சம் ரூபாய் விற்பனை ஆனது.
அதைக் கருத்தில் கொண்டு தாம்பரத்தில் ஒரு புத்தகக் கடைத் திறக்க வேண்டும் என ஆசிரியர் முடிவு செய்தார்கள். அதன் விளைவாகத் தாம்பரம் பேருந்து நிலையத்தில் புத்தகக் கடைக்கென்றே ஓர் இடமும் பெறப்பட்டது. அதனை ஆசிரியர் அவர்களும், அமைச்சர் கே.என்.நேரு அவர்களும் திறந்து வைத்தார்கள்.
தொடர்ந்து பெரியார் வாசகர் வட்டம் உருவாக்கப்பட்டு, ஆசிரியரின் பிறந்தநாளான 2ஆம் தேதி, மாதந்தோறும் கூட்டம் நடத்தி வருகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு தலைப்புகளில், பல்வேறு பேச்சாளர்கள் உரை நிகழ்த்தியுள்ளனர். மாலை 6 மணிக்குத் தொடங்கி நிகழ்ச்சி 8 மணிக்கு நிறைவு பெறும்.
நான் முன்பு தொடங்கிய வெற்றிலை, பீடா கடையோடு இப்போது பேன்சி ஸ்டோர், கரும்புச்சாறு விற்பனை நிலையமும் இருக்கிறது. ஒரு கூடுதல் செய்தி என்னவென்றால், “தமிழ்நாட்டில் ‘பெரியார் நகர்’ என்பது 1946ஆம் ஆண்டு தாம்பரத்தில் தான் முதன்முதலில் அமைக்கப்பட்டது” எனவும் முத்தையன் அவர்கள் தம் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
