சென்னை, மே 16- “நீட் தேர்வு ஒழியாத வரை, நம் பிள்ளைகளுக்கு நிம்மதியில்லை” என்று திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டிருப்ப தாவது: நீட் தேர்வு என்பது அடிப்படையில் ஒரு மிகப்பெரிய மோசடி என்பதைத் தொடக்கத்திலிருந்தே தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தற்போது நீட் தேர்வில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் தொடர் முறைகேடுகள், அது ஒரு மோசடி என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த முறைகேடு களுக்கு ஒன்றிய பாஜக அரசே பொறுப்பேற்க வேண்டும்.
இப்படியொரு தேர்வு முறை நம் நாட்டில் நீடிக்கும் வரை, மருத்துவக் கனவோடு படிக்கும் நம் பிள்ளைகளுக்கு எப்போதும் நிம்மதி கிடைக்கப் போவதில்லை. இவ்வாறு கனிமொழி எம்பி தனது பதிவில் மிகவும் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில், கனிமொழியின் இந்தச் சமூக வலைதளப் பதிவு தற்போது அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்களிடையேயும் பெரும் பரவபரப்பைக் கிளப்பியுள்ளது.
