பெண்களுக்கான பாதுகாப்பு

தமிழ்நாடு அரசியலில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் என்பது எப்போதும் பிரதானமான ஒன்றாக இருந்து வருகிறது. மறைந்த முதலமைச்சர்கள் கலைஞர்,  தளபதி மு.க. ஸ்டாலின் காலம் வரை காவல்துறை மற்றும் சமூகப் பாதுகாப்பில் பெண்களுக்காகப் பல்வேறு அதிரடித் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

முத்தமிழறிஞர் கலைஞர் பெண் காவலர்களின் முன்னோடி ஆவார்.

இந்தியாவிலேயே முதன்முதலில் தமிழ்நாடு காவல்துறையில் பெண்களைப் பணியில் சேர்க்கும் புரட்சிகரமான திட்டத்தை 1973-ஆம் ஆண்டு கலைஞர் தொடங்கி வைத்தார்.

அதுவரை பெண்களின் புகார்களை ஆண்களிடமே கூறும் நிலை இருந்தது. பெண் காவலர்களின் வருகையால் பெண்கள் தயக்கமின்றிப் புகார் அளிக்கும் சூழல் உருவானது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை முன்கூட்டியே தடுக்கவும் கண்காணிக்கவும் ‘‘சீருடையில்லா பெண் காவலர்கள்’’ என்ற சிறப்புத் திட்டத்தைக் கலைஞர் அறிமுகப்படுத்தினார்.

1992-ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நாட்டின் முதல் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தைத் தொடங்கி வைத்தார் அன்றைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா. மாநிலம் முழுவதும் இன்று 244 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் பெண் காவலர்களின் பணி அங்கீகரிக்கப்பட்டதுடன், தொழில்நுட்ப ரீதியாகப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் 2023-இல் பொன்விழா கொண்டாடப்பட்டு, பெண் காவலர்களுக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டன.

அவசர காலங்களில் உதவப் பிரத்யேக செயலி ‘‘காவலன் எஸ்ஓஎஸ்’’ பெண் குழந்தைகளைப் பாலியல் குற்றங்களில் இருந்து காக்க வட மண்டல காவல்துறை சார்பில் தொடங்கப்பட்டது.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பை வழங்க ‘‘போலீஸ் அக்கா’’  என்ற திட்டம் தொடங்கப்பட்டது.

பெண்கள் உதவிக்கு 181 மற்றும் குழந்தைகளுக்கு 1098 ஆகிய எண்கள் வலுப்படுத்தப்பட்டன.

தற்போது முதலமைச்சர் விஜய் ‘‘சிங்கப்பெண்’’ சிறப்பு அதிரடிப்படைத் திட்டத்தை அறிவித்துள்ளார்.

மாநிலம் முழுவதும் மாவட்டம் மற்றும் மாநகரங்கள் வாரியாக இந்தப் படை செயல்படும்.

காவல்துறை தலைவர் (அய்.ஜி.) தலைமையில் காவல்துறை கண்காணிப்பாளர்கள்,  துணைக் கண்காணிப்பாளர்கள்  மற்றும் ஆய்வாளர்களைக் கொண்டு இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனினும், அதன் செயல்பாட்டை இனி மேல்தான் பார்க்க வேண்டும்.

இது ஏற்ெகனவே தி.மு.க. ஆட்சியில் இருந்த ‘சீருடையில்லா போலீஸ்’ திட்டத்தின்  நீட்சியாகத்தான் பார்க்கப்படுகிறது. வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பெண் உதவி ஆய்வாளர் (எஸ்.அய்) தலைமையில் ரோந்துப் பணிகள் இதன் மூலம் தீவிரப்படுத்தப்படும்.

தற்போது தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பிற்காகப் பின்வரும் பிரிவுகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன:

CWC (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு): 2019-இல் தொடங்கப்பட்ட இப்பிரிவு  காவல்துறைத்தலைவர் (அய்.ஜி.) தலைமையில் செயல்படுகிறது.

ஆட்கடத்தல் தடுப்புப் பிரிவு, இளஞ்சிறார் காவல் பிரிவு, குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆகியவை மாநிலம் முழுவதும் பரவலாக உள்ளன.

இவை தவிர, பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங் களைத் தடுக்க சென்னையில் பிரத்யேக இணையவழி குற்ற காவல் நிலையங்கள் செயல்படுகின்றன.

முதலமைச்சராக தளபதி மு.க. ஸ்டாலின் இருந்த கால கட்டத்தில்தான் இந்திய அளவில் பெண்களுக்குப் பாலியல் ரீதியான குற்றங்கள் என்று வரும்போது தமிழ்நாட்டில்தான் மிகவும் குறைவாகும்.

பெண்களுக்கான பாதுகாப்பு என்கிறபோது இவை யெல்லாம் தேவைதான்! பெண்களைப் பொறுத்தவரை, தற்காப்புப் பயிற்சி மிக முக்கியம். உயர்நிலைப் பள்ளிகளில் அறிவியல் முறையில் இந்தப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமையும் பெண்களுக்கு  அளிக்கப்படுவது   சாலச் சிறந்தது.

திராவிடர் கழகம் இது குறித்து தீர்மானம் நிறை வேற்றியுள்ளது என்பதையும் நினைவூட்டுகிறோம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *