‘நீட்’ தேர்வை நடத்தும் தேர்வு முகமை அமைக்க ஒன்றிய அரசுக்கு உரிமை உண்டா? மாநிலப் பட்டியலில் உள்ள விவகாரத்தில், இதில் ஒன்றிய அரசு சட்டம் இயற்ற முடியுமா? அரசியலமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் விரோதமானது நீட் தேர்வு என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து நீட் என்ற பொது தகுதித் தேர்வு நடத்துவது என்ற முடிவே அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது. அதற்கு ஒன்றிய அரசுக்கோ, அது நியமிக்கும் தேசியத் தேர்வு முகமை (NTA) உள்ளிட்ட எந்தவொரு அமைப்புக்கோ எந்த உரிமையும் இல்லை.
இதைப் புரிந்துகொள்ள பின் வரும் முக்கிய விவரங்க ளைப் படியுங்கள்:
- அரசியலமைப்புச் சட்டத்தில் ஒன்றியப் பட்டியல் (Union List), மாநிலப் பட்டியல் (State List), ஒத்திசைவுப் பட்டியல் (Concurrent List) என்று மூன்று பட்டியல்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றிலும், எந்தெந்த துறைகள் யார் யாருக்கு உரியன என்ற பட்டியல் மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசுக்கு எந்த விதமான
அதிகாரமும் இல்லை!
அதன்படி, பல்கலைக்கழகங்களை உருவாக்குவதும், நிர்வகிப்பதும், கலைப்பதும் மாநில அரசுகளுக்கே உள்ள தனிப்பட்ட அதிகாரமாகும். இதில் ஒன்றிய அரசுக்கு எந்த விதமான அதிகாரமும் இல்லை என்பது மறைமுகமாக அல்ல – பட்டவர்த்தனமாக, தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது..
இந்திய அரசியலமைப்பு சட்டம் – ஏழாவது அட்ட வணையின் (Seventh Schedule) கீழ் உள்ள பட்டியல் ஒன்று (List 1) ஒன்றிய அரசின் விவகாரங்களைப் பட்டியலிடும் போது, அதன் 44 ஆம் பதிவு (Entry 44) பல்கலைக்கழகங்களை நிறுவும், நிர்வகிக்கும், கலைக்கும் உரிமை ஒன்றிய அரசுக்கு இல்லை என்று தெளிவுபடுத்துகிறது. (44. Incorporation, regulation and winding up of corporations, whether trading or not, with objects not confined to one State, but not including universities.)
பட்டியல் இரண்டு (List 2) மாநில அரசின் அதிகாரங்களைப் பட்டியலிடும்போது, அதன் 32 ஆம் பதிவில் பல்கலைக்கழகங்களை நிறுவும், நிர்வகிக்கும், கலைக்கும் உரிமை மாநில அரசுக்கே உரியது என்று வரையறுக்கிறது. (32. Incorporation, regulation and winding up of corporations, other than those specified in List I, and universities; unincorporated trading, literary, scientific, religious and other societies and associations; co-operative societies.) எனினும், அது முதல் பட்டியலின் 63 முதல் 66 வரையிலான பதிவுகளுக்கு உட்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் நீட் தொடர்பான பிரச்சினைக்குப் பொருந்தி வருவது பதிவு 66 மட்டுமே.
- கல்வி, அதிலும் உயர்கல்வி தொடர்பாக ஒன்றிய அரசுக்கு உள்ள உரிமை என்பது “இணக்கமான வகையில் ஒன்று சேர்த்தலும், தர நிர்ணயம் செய்தலும்” என்பதாகும். (66. Co-ordination and determination of standards in institutions for higher education or research and scientific and technical institutions.)
உச்சநீதிமன்றம்
கூறியது என்ன?
ஒன்றிய அரசுக்குத் தரப்பட்டுள்ள இந்த உரிமையும் (பட்டியல் 1; பதிவு 66) பல்கலைக்கழகங்கள் தேர்வு நடத்துவதையும், மாணவர் சேர்க்கையையும் உள்ளடக்கியதில்லை என்று “மாடல் டெண்டல் கல்லூரி’’ வழக்கில் 93 ஆம் பாராவில் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
- அது மட்டுமல்லாது, தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகள், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்திற்குட்பட்டவையே! அவற்றில் சேர்க்கை நடத்துவது குறித்துதமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகச் சட்டம் பிரிவு 35 கூறுகிறது. எனவே, அரசியலமைப்புச் சட்டப்படியும், தமிழ்நாடு அரசின் மேற்சொன்ன சட்டப்படியும் சேர்க்கை நடைபெறுவதற்கான விதிமுறைகளை மாற்ற ஒன்றிய அரசுக்கு அதிகாரம் இல்லை.
- இது தவிர, தமிழ்நாடு அரசு 1984 முதல் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தி வந்த முறையை ஒழித்து, 2006 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் அமைக்கப்பட்ட குழு பரிந்துரைப்படி, முடிவெடுத்து, இயற்றப்பட்ட “தமிழ்நாடு தொழில் சம்பந்தமான கல்விக் கூடங்களில் மாணவர் சேர்க்கைச் சட்டம் 2006” (Act 3 of 2007) மிகத் தெளிவாக ’ நுழைவுத் தேர்வுகள் இனி தமிழ்நாட்டில் இல்லை’ என்று கூறுகிறது. அதை மாற்றுவதற்கு அரசியலமைப்புச் சட்டப்படி ஒன்றிய அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதை உச்சநீதிமன்றத் தீர்ப்பும் உறுதி செய்துள்ளது.
மருத்துவக் கவுன்சில் விதிகளில் வழியில்லை!
5 (அ). முதன்முதலில் 21.12.2010 இல் இந்திய மருத்துவக் கவுன்சில் பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்காக ஓர் அறிவிக்கையை வெளி யிட்டபோது, அதற்கு இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டவிதிகளிலேயே இடமில்லை. அப்படியொரு விதி (10 D) 28.05.2016 அன்று தான் நடைமுறைக்கு வந்தது என்பதால், உரிய விதி இன்றி கொண்டுவரப்பட்ட 2010 ஆம் ஆண்டு அறிவிக்கை சட்டப்படியானது அல்ல.
(ஆ). 2013 ஆம் ஆண்டு நீட் தேர்வைச் செல்லாது என்று அறிவித்த (நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையிலான) உச்சநீதிமன்ற அமர்வுத் தீர்ப்பைத் திரும்பப் பெற்று நீட் தொடர வழிவகுத்த 2016 ஆம் ஆண்டு (நீதிபதி அனில் ஆர்.தவே தலைமையிலான) உச்சநீதிமன்ற அமர்வுத் தீர்ப்பும், மேற்சொன்ன உண்மை களைக் கவனத்தில் கொள்ளாமல் தீர்ப்பு வழங்கியது அரசியலமைப்புச் சட்டப்படி சரியான ஒன்றல்ல.
மிக முக்கியமான மற்றொரு தீர்ப்பு!
- மாநில அரசு சட்டமியற்றுவதற்கான உரிமை படைத்த ஒரு களத்தில் ஒன்றிய அரசு சட்டமியற்ற முடியாது என்று உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் தெளிவாக முடிவு செய்துள்ளது. குறிப்பாக, ஒன்றிய அரசு எதிர் ராஜேந்திர ஷா வழக்கில் 20.7.2021 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பு பல விசயங்களில் வழிகாட்டும் தீர்ப்பாகும். கூட்டுறவுச் சங்கங்கள் தொடர்பான அந்த வழக்கில், மாநில அரசு சட்டமியற்றும் உரிமை படைத்த களத்தில், அவ்வழக்கில் மாநிலப் பட்டியல் பதிவு 32-இன் கீழ் உள்ள விவகாரத்தில் ஒன்றிய அரசு சட்டமியற்ற இயலாது என்று குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக் காட்டி, அரசியலமைப்புச் சட்ட வல்லுநர் டாக்டர் ஜஸ்டிஸ் ஏ.கே.ராஜன் அவர்கள் எழுதியுள்ள “இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறையில்?” என்ற புத்தகத்தின் பக்கம் 97, 98இல் உள்ள பகுதியை அப்படியே தருகிறோம்.
மாநிலப் பட்டியல் 32, ஒன்றியப் பட்டியல் 44 இரண்டையும் விரிவாக ஆய்வு செய்துள்ளது:
ராஜேந்திர ஷா வழக்கின் தீர்ப்பில், மாண்புமிகு உச்ச நீதிமன்றம், ஏழாவது அட்டவணையில் உள்ள மூன்று பட்டியல்களுக்கும் இடையிலான தொடர் உறவையும், மூன்று பட்டியல்கள் தொடர்பான சட்டத்தையும் விரி வாக பரிசீலித்துள்ளது. உச்ச நீதிமன்றம் மாநிலப் பட்டியல் 32, ஒன்றியப் பட்டியல் 44 இரண்டையும் விரிவாக ஆய்வு செய்துள்ளது, இதற்கு முன்பு வேறு எந்த வழக்கிலும் இவ்வாறு ஆராயப்படவில்லை. ஒரு பதிவில் குறிப்பிட்ட அதிகார வழங்கலும், மற்றொரு பதிவில் குறிப்பிட்ட விலக்கும் இப்போது (தெளிவாக விளங்கும்படி கண்டறியப்பட்டு) தீர்க்கப்பட்டுள்ளன. கூட்டுறவுச் சங்கங்களைப் பொறுத்த வரையில், மாநிலப் பட்டியல் 32 ஆவது பதிவின் மூலம் சட்டமியற்றும் அதிகாரம் மாநிலங்களுக்கு மட்டுமே தனித்து வழங்கப்பட்டுள்ளது. அதே களம், 44 ஆம் பதிவு ஒன்றியப் பட்டியலால், ஒன்றியத்திற்கு விலக்கப்பட்டுள்ளது. எனவே, கூட்டுறவுச் சங்கங்கள் தொடர்பான களத்தில் நாடாளுமன்றம் சட்டமியற்ற முடியாதபோது, பல்கலைக்கழகங்கள் தொடர்பான களத்திலும் சட்டம் இயற்ற முடியாது.
44ஆம் பதிவில் நீக்கப்பட்ட அதிகாரம் மூன்றாம் பட்டியலில் 25 ஆவது பதிவின் மூலம் கிடைக்காது.
பதிவு 44 யூனியன் பட்டியலில், ‘கூட்டுறவு சங்கங்கள்’ தொடர்பான களம் ஒன்றியத்தின் வரம்பிலிருந்து விலக்கப்படும்போது, பட்டியல் III பட்டியல்-I க்கு கட்டுப்பட்டுள்ளதால் அதே களம் மூன்றாம் பட்டியலின் கீழ் சேர்க்கப்பட முடியாது. மொத்தத்தில் பட்டியல் II பதிவு 32 இல் குறிப்பிடப்பட்டுள்ள, பல்கலைக்கழகங்கள் தொடர்பாக நாடாளுமன்றம் எந்தச் சட்டத்தையும் இயற்ற முடியாது என்பதே இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு. ஏனென்றால் மாநிலப் பட்டியல் 32 இன் படி, பல்கலைக்கழகங்களை ஒரு மாநிலத்தால் மட்டுமே நிறுவவும் ஒழுங்குபடுத்தவும் முடியும். மேலும், பிரிவு 254, ஒருங்கியல் (ஒத்திசைவுப்) பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள களத்தின் கீழ் ஒரு மாநிலத்தால் இயற்றப்பட்ட சட்டத்திற்கு மட்டுமே பொருந்தும். பட்டியல் II பதிவு 32 இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள களத்தின் மீது இயற்றப்பட்ட சட்டத்திற்கு இது பொருந்தாது. எனவே, பல்கலைக் கழகங்களை ‘ஒழுங்குபடுத்தும்’ களம் நாடாளுமன்றத்தின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது. பல்கலைக் கழ கங்களை ஒழுங்குபடுத்தும் அத்தகைய சட்டம், நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் திறனுக்கு அப்பாற்பட்டது. ஒன்றியப் பட்டியலின் 44 வதுபிரிவின் கீழ் இது நாடாளுமன்றத்தின் அதிகார வரம்பிலிருந்து விலக்கப்பட்டுள்ளதால், மாநிலத்தின் தனித்த களத்தில் நாடாளுமன்றம் எந்தச் சட்டத்தையும் இயற்ற முடியாது. அந்த சூழ்நிலையில் பல்கலைக்கழகங்களை ஒழுங்குபடுத்தும் நாடாளுமன்ற சட்டம் செல்லாததென்று அறிவிக்கப்பட வேண்டும். அதுவே அரசமைப்புத் திட்டத்தின் அடிக் கோட்பாடாகும்.’’
முற்றாக ரத்து செய்யவேண்டியது
அவசர, அவசியமாகும்!
இப்படி, தான் சட்டமியற்றுவதற்குச் சற்றும் உரிமை யில்லாத ஒன்றின் கீழ், ‘நீட்’ என்ற ஒரு தேர்வை உருவாக்கி, அதை நடத்த அதிகாரமும், தகுதியும் இல்லாத ‘தேசியத் தேர்வு முகமை’ என்றொரு நிறுவனத்தை உருவாக்கி, அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக அதை மாநிலங்கள் தலையில் திணித்து, மாநில உரிமைகளைப் பறித்து, மாணவர்களை வாட்டி, அவர்களின் உரிமைகளையும் பறித்து, தொடக்கம் முதலே ஏராளமான மோசடிகளுக்கு வழிவகுத்து, மருத்துவக் கட்டமைப்பையும், மாணவர்களின் எதிர்காலத்தையும் சிதைக்கும் ‘நீட்’ உள்ளிட்ட பொது நுழைவுத் தேர்வு, தகுதித் தேர்வுகளை முற்றாக ரத்து செய்யவேண்டியது அவசர, அவசியமாகும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
15.5.2026
