ஆதரவுப் போர்வையில் ‘ட்ரோஜன் குதிரை’களும் – ‘மாயமான்’களும் எச்சரிக்கை!

ஊன்றிப் படியுங்கள் – உண்மையை உணருங்கள்!
8 கொள்கைக்காக முடிவெடுத்த தி.மு.க. கூட்டணிக் கட்சிகள்!
8 ஜனநாயகத்தைக் காத்து நிற்கும் திராவிட முன்னேற்றக் கழகம்!
8 நேரம் பார்த்துக் காத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.!

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை

கொள்கைக்காக முடிவெடுத்த தி.மு.க. கூட்டணிக் கட்சிகள்! ஜனநாயகத்தைக் காத்து நிற்கும் திராவிட முன்னேற்றக் கழகம்! நேரம் பார்த்துக் காத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.; ஆதரவுப் போர்வையில் ‘ட்ரோஜன் குதிரை’களும் – ‘மாயமான்’களும் எச்சரிக்கை  என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  அறிக்கை விடுத்துள்ளார்.

Contents
ஊன்றிப் படியுங்கள் – உண்மையை உணருங்கள்! 8 கொள்கைக்காக முடிவெடுத்த தி.மு.க. கூட்டணிக் கட்சிகள்! 8 ஜனநாயகத்தைக் காத்து நிற்கும் திராவிட முன்னேற்றக் கழகம்! 8 நேரம் பார்த்துக் காத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.!திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கைவரலாறு பதிவு செய்தது!அனைவரும் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்!பொதுச் சிந்தனையாளர்கள், அரசியல் நோக்கர்களின் கருத்து!ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க.வுக்கு இடம்கொடுத்துவிடக் கூடாது!கட்டுக்கோப்பான கொள்கைக் கூட்டணி!பா.ஜ.க.வின் திரிசூலத்திலிருந்து விடுபடமுடியாமல் தத்தளிக்கிறது அ.தி.மு.க.வரவேற்கத்தக்க தமிழ்நாடு அரசின் நடவடிக்கை!இளைஞர்களுக்கும், மகளிருக்கும் அரசியல் தெளிவை ஊட்ட வேண்டியது நம் கடமையே!நமது வேண்டுகோள்!

அவரது அறிக்கை வருமாறு:

வரலாறு பதிவு செய்தது!

தமிழ்நாட்டில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலின் முடிவில் எதிர்பாராத பல விளைவுகள் ஏற்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் வரலாற்றில் ஏறத்தாழ 74 ஆண்டுகளுக்குப் பிறகு தொங்கு சட்டமன்றம் அமைந்தது. சாதனைகளின் உச்சியில் தேர்தலைச் சந்தித்த திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் கூட்டணிக் கட்சிகளும் 73 இடங்களில் வெற்றி பெற்றன. புதிதாகத் தொடங்கப்பட்டு, தேர்தல் களம் கண்ட தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றிபெற்றது. அ.இ.அ.தி.மு.க. – பாஜக கூட்டணி 53 இடங்களில் வெற்றி பெற்றது. பெரியாரை எதிர்த்தவர்களுக்கான இடம் என்ன என்பதைத் தமிழ்நாடு காட்டியது  – 4 இடத்திலிருந்து ஒரு இடத்துக்குச் சரிந்தது பா.ஜ.க.! பெரியார் சிலையை நோக்கியும், தத்துவத்தை நோக்கியும் ஆயுதத்தை நீட்டியவர்கள் – அதனாலேயே வீழ்ந்தார்கள் என்பதை வரலாறு பதிவு செய்தது.

அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு மாற்றங்களும், பிரிவுகளும், குழப்பங்களும் அரங்கேறின. (இன்றும் அந்த நிலை ஓய்ந்தபாடில்லை.) மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்பது தேர்தலுக்கான கூட்டணி அல்ல – கொள்கைக் கூட்டணி என்று அறிவித்துத்தான் தேர்தல் களம் கண்டது. அதில் இடம்பெற்றிருந்த எல்லாக் கட்சிகளும், அவ்வாறே நடந்து கொண்டிருக்கின்றன – ஒரு கட்சியைத் தவிர!

அனைவரும் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்!

காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியை உருவாக்குவதிலும், அதற்கும் முன்னோடியாகத் தமிழ்நாட்டில் ஒரு மாதிரிக் கூட்டணியை உருவாக்கிக் காட்டியதிலும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டியாகவே திகழ்ந்தார். இன்றும் கூட பிற மாநிலக் கட்சிகளுக்கும், தேசியக் கட்சிகளுக்கும் அவரது அணுகுமுறையும், ஆட்சிமுறையும், ஜனநாயக நெறிமுறைகளும் பெரும் ஈர்ப்பைக் கொடுத்தன என்பது மறுக்கவியலாத உண்மை. ஆனால், அந்த இந்தியா கூட்டணியை எல்லா மாநிலங்களிலும் சரியாகத் தொடராமல் இன்று கேள்விக்குள்ளாகும் நிலைக்குத் தள்ளியது காங்கிரஸ் கட்சிதான் என்பதை அனைவரும் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

பொதுச் சிந்தனையாளர்கள்,
அரசியல் நோக்கர்களின் கருத்து!

உத்தரப்பிரதேசம், பீகார், மகாராட்டிரா, மேற்கு வங்காளம் என்று பல மாநிலங்களிலும் சேதாரத்தை ஏற்படுத்திய காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டிலும் அதே முறையைக் கையாண்டது. இதற்காகத் தேர்தலுக்கு முன்பே முயன்ற பார்ப்பனச் சக்திகள், இப்போது அந்த வேலையைக் கச்சிதமாக முடித்தன. பக்குவமற்ற முறையில் காங்கிரஸ் அகில இந்தியத் தலைமை இப் பிரச்சினையில் நடந்துகொண்டது என்பதே பொதுவான சிந்தனையாளர்கள், அரசியல் நோக்கர்களின் கருத்தாகும்.

தேர்தல் முடிந்து முழுமையான முடிவுகள் வெளிவந்த சில மணி நேரங்களில், கூட்டணிக்குத் தலைமை வகித்து அய்ந்து இடங்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உழைத்த தி.மு.க.வுக்குக் குறைந்த பட்ச நன்றியைக் கூடத் தெரிவிக்காமலும், அரசியல் சூழல் குறித்துக் கலந்தாலோசிக்காமலும் கூட, த.வெ.க. வுக்குத் தனது ஆதரவைத் தெரிவிப்பதற்குத் தேடிச் சென்றது காங்கிரஸ்.

ஆனால், தி.மு.க.வின் மற்ற கூட்டணிக் கட்சிகள், தமிழ்நாட்டில் ஏற்பட்ட தொங்கு சட்டமன்றத்தின் காரணமாக எழுந்த சூழலை எப்படிக் கையாள்வது என்பது குறித்து தொடர்ந்து திமுக தலைமையுடன் கலந்தாலோசித்து மிகக் கவனமாக இப் பிரச்சினையை அணுகினர். தி.மு.க. ஆட்சி அமைக்கவியலாது என்ற சூழலில், யாரும் ஆட்சி அமைக்காமல் போனால், ஆளுநர் ஆட்சி என்ற பெயரில் நேரடி ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஆட்சி தமிழ்நாட்டில் வந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த அக்கறையும், கவலையும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு இருந்தது.

ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க.வுக்கு
இடம்கொடுத்துவிடக் கூடாது!

தமிழ்நாட்டில் இத்தகைய நிலைமை ஏற்படாதா? அதைப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் ‘சித்து’ விளையாட்டைக் காட்ட முடியாதா? என்று நேரம் பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க.வுக்கு இடம்கொடுத்துவிடக் கூடாது என்பதே அனைவருக்குமான பெரும் கவலைக்குரிய சிந்தனையாக இருந்தது. அந்தச் சூழலில் தான், இடதுசாரிக் கட்சிகளும், விடுதலைச் சிறுத்தைகளும், பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் த.வெ.க. ஆட்சியமைக்க ஆதரவளிப்பது என்ற முடிவை எடுத்தன.

ஆட்சியமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மை பெறாவிட்டாலும், அதிக இடங்களைப் பிடித்திருக்கும் கட்சி என்ற அடிப்படையில், த.வெ.க. ஆட்சியமைக்க எவ்வித இடையூறும் செய்யாமல் சிறந்த எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம் என்று சொன்ன சொல் மாறாமல், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூட்டணிக் கட்சியினரின் நோக்கத்தையும், முடிவையும் மதித்து வழிவிட்டார். அவர்களும், கூட்டணியில் இருந்து விலகவில்லை – ஆனால், சூழல் கருதி த.வெ.க. ஆட்சியமைக்க ஆதரவு தருகிறோம் என்றொரு நிலைப்பாட்டை எடுத்தனர்.

கட்டுக்கோப்பான கொள்கைக் கூட்டணி!

பதவிக்காகக் கட்சி மாறி, கூட்டணி மாறி, ‘ஆயாராம் – காயாராம்’ – குதிரை பேரங்கள் நடக்கும் நாட்டில் இப்படி கட்டுக்கோப்பான கொள்கைக் கூட்டணி இந்திய அளவில் வியப்புக்குரியதாகவே பார்க்கப்பட்டது!

தி.மு.க. கூட்டணியை விமர்சித்துத் தேர்தலை எதிர்கொண்ட த.வெ.க. தலைவர் திரு.ஜோசப் விஜய் அவர்களும், இக் கட்சிகளின் ஆதரவைக் கோரிப் பெற்றதுடன், அவர்கள் அனைவரையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் – ஆட்சி அமைத்தார். தி.மு.க. தலைவர் உள்ளிட்ட கட்சித் தலைவர்களை நேரில் சென்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார் – சட்டமன்றத்தில் பெரும்பான்மையையும் நிரூபித்து விட்டார். ஆக்கப்பூர்வ ஆட்சியாக நடக்கட்டும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் மிகுந்த அரசியல் நாகரிகத்தோடும், பண்பாட்டுடனும், தமக்கே உரிய அனுபவத்துடனும் இதனை அணுகி, மிகச் சரியான முடிவை எடுத்து, சட்டமன்றத்திலும் தி.மு.க. உறுப்பி னர்களை வழிநடத்தியுள்ளார். சிறு தவறும் நடந்து குழப்பம் ஏற்பட்டுவிடக் கூடாது என்று மிகச் சாதுர்யமாக இப் பிரச்சினையைக் கையாண்டதுடன், தங்கள் கருத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மூலம் சட்டமன்றத்தில் பதிவு செய்துவிட்டார்.

பா.ஜ.க.வின் திரிசூலத்திலிருந்து விடுபடமுடியாமல் தத்தளிக்கிறது அ.தி.மு.க.

ஆனால், கடந்த 10 ஆண்டுகளாகப் பா.ஜ.க.விடம் சிக்கிய அ.இ.அ.தி.மு.க. இன்னமும் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் அவலம் தொடர்கிறது. காங்கிரசுக்கு முந்தி, தனது கையில் இப் பிரச்சினையை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற பா.ஜ.க.வின் முயற்சி இன்றும் வேறு வடிவில் தொடர்ந்து கொண்டிருக்கிறது – முடிவு எப்போது, எப்படி என்று தெரியாமலேயே! பாஜகவுடன் அதிமுக சேர்ந்த ஆரம்ப கட்டத்திலேயே, அக் கட்சியை பாஜக கபளீகரம் செய்துவிடும் என்று எச்சரித்தும், அதை ஏற்கும் நிலையில் அதிமுக இல்லை.  எந்தவொரு நொடியிலும், இத்தகைய சூழ லைத் தங்களுக்குச் சாதகமாகத் திருப்பிக் கொள்ள முயலும் பா.ஜ.க.வைப் பற்றி அறிந்தாலும் அதன் திரிசூலத்திலிருந்து விடுபடமுடியாமல் தத்தளிக்கிறது அக் கட்சி – அந்தோ பரிதாபம்!

யார் வர வேண்டும் என்பதை விட, யார் வரக் கூடாது என்பதே முக்கியம் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்ட நிலைப்பாடு தான் இன்றைய ஆட்சி அமைந்ததற்கான அடிப்படைக் காரணம். அதே வேளையில், ஜனநாயகத்தின் மாண்பு காக்கப்படவும், எதிர்க்கட்சியாக ஆக்கப்பூர்வமாகச் செயல்படவும் கூடிய கட்சி தி.மு.க. என்பதைச் சட்டமன்ற நடவடிக்கைகள் காட்டுகின்றன.

ஆதரவுகள் எல்லாமே வரவேற்கத்தக்கவையல்ல – கொள்கைப் பார்வைக்காக ஆதரிப்போர் யார்? பதவிக்காக ஆதரிப்போர் யார்? என்பதில் தெளிவு வேண்டும். ஆதரவுப் போர்வையில் வரும் ‘ட்ரோஜன் குதிரை’களையும், ‘மாயமான்’களையும் கண்டு ஏமாறாமல், எச்சரிக்கையாக இருக்கவேண்டியவர்கள், எச்சரிக்கையாக இருக்கட்டும்!

வரவேற்கத்தக்க தமிழ்நாடு அரசின் நடவடிக்கை!

பதவியேற்பு விழாவின் போது ‘வந்தே மாதரம்’ இசைக்கப்பட்டதும், ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டதும் குறித்துக் கண்டனங்கள் எழுந்ததும், அது குறித்து விளக்கமளித்து, இனி அப்படி நடக்காது என்று உறுதி கூறியுள்ளது தமிழ்நாடு அரசு. அது போலவே, ஜோதிடர் ஒருவரை சிறப்பு அதிகாரியாக நியமித்ததற்கு எழுந்த கடும் எதிர்ப்பை ஏற்று, அந்த அரசாணையும் திரும்பப் பெறப்பட்டுள்ளதும் வரவேற்கத்தக்கது.

இளைஞர்களுக்கும், மகளிருக்கும் அரசியல் தெளிவை ஊட்ட வேண்டியது நம் கடமையே!

ஜனநாயகத்தின் அதிசயமே – மக்கள் எப்படி, எப்போது முடிவெடுப்பார்கள் என்று அறியாததில் தான் இருக்கிறது. ஆனால், அப்படி முடிவெடுப்பதற்கு பகுத்தறிவும், அரசியல் அறிவும் காரணமாக இருக்க வேண்டுமே ஒழிய, வெற்று உணர்ச்சியும், தன்முனைப்பும், ரசிகத் தன்மையும் மட்டும் காரணமாக இருக்கக் கூடாது. அப்படி ஒரு சூழல், தமிழ்நாட்டில் மீண்டும் எழுந்திருக்கிறது என்றால், அதைச் சரி செய்து, இளைஞர்களுக்கும், மகளிருக்கும் அரசியல் தெளிவை ஊட்ட வேண்டியது நம் கடமையே ஆகும். தொடர்ந்து அப் பணியைத் திராவிட இயக்கம் செய்து கொண்டிருந்தாலும், அது செயல்பட வேண்டிய களம் வேறாக இருக்கிறது என்பதை இத் தேர்தல் உணர்த்தியிருக்கிறது. அதை ஆக்கப்பூர்வமாகப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டி யது ஜனநாயகவாதிகள், முற்போக்காளர்களின் கடமை!

தற்போதுள்ள ஆட்சியின் முதலமைச்சர், இன்னமும் தமது அமைச்சர்களுக்குரிய துறைகளை ஒதுக்கீடு செய்த தகவல் வெளிவரவில்லை. பல யூகங்கள் உலா வரும் நிலையில், முக்கிய துறையான கல்வித் துறை, மனுதர்மவாதிகளிடம் சென்றால், அது பெரும் கேடாக முடியும் என்பதை மனதிற்கொண்டு, சரியாகச் செயல்படவேண்டும்.

நமது வேண்டுகோள்!

இன்றைய சூழலில், தமிழ்நாட்டில் கடந்த ஆட்சிக் காலங்களில் உருவாக்கப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் தொடர்வதும், நிலையான – நீடித்த – அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி நிலை தொடர்வதும், தமிழ்நாடு என்றும் அமைதிப் பூங்கா – என்றும் பெரியார் மண் என்று நிலைநிறுத்தப்படுவதுமே முதன்மையான நோக்கங்களாகும். அதனை உணர்ந்து ஆட்சியில் இருப்போரும், ஆட்சியில் இருந்தோரும், மக்களுக்கான அறப்போராளிகளும், சமூக இயக்கங்களும் கடமை ஆற்ற வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை   

14.5.2026  

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *