கடலூர், மே 15- கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையில், சுமார் 50,000 ஆண்டுகள் பழமையான பழைய கற்காலத்தைச் சேர்ந்த கல் ஆயுதம் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு தமிழ்நாட்டின் தொன்மை வரலாற்றில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளது.
கள ஆய்வில் கிடைத்த கற்கருவி
பண்ருட்டி அருகே உள்ள கண்டரக்கோட்டை தென் பெண்ணை ஆற்றுப் பகுதியில், தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் வரலாற்று ஆர்வலர் பிரதாப் ஆகியோர் அண்மையில் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பழைய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய அரிய வகை கற்கருவி ஒன்று சிக்கியது.
கருவியின் அமைப்பு: நீளம்: 7.8 செ.மீ. அகலம்: 5.7 செ.மீ. வகை: மேலைப் பழங்கற்காலத்தைச் சேர்ந்த ‘சுரண்டும் வகை’ (Scraper) கருவி.
தமிழ்நாட்டின் பழைய கற்கால வரலாறு
1863இல் ராபர்ட் புரூஸ்புட் என்பவர் சென்னை பல்லாவரத்தில் முதன்முதலில் பழைய கற்காலக் கருவிகளைக் கண்டறிந்தார். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பழைய கற்காலம் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது:
கீழைப் பழங்கற்காலம்: 17 லட்சம் முதல் 3.85 லட்சம் ஆண்டுகள் வரை. இடைப் பழங்கற்காலம்: 3.85 லட்சம் முதல் 80,000 ஆண்டுகள் வரைமேலைப் பழங்கற்காலம்: 80,000 முதல் 40,000 ஆண்டுகள் வரை. தற்போது கண்டரக்கோட்டையில் கிடைத்துள்ள கருவி, சுமார் 50,000 ஆண்டுகள் பழமையான மேலைப் பழங்கற்காலத்தைச் சேர்ந்தது என ஆய்வாளர் இம்மானுவேல் உறுதிப்படுத்தியுள்ளார்.
குவார்ட்சைட் கற்களும் நாடோடி வாழ்க்கையும்
பழைய கற்கால மக்கள் ‘குவார்ட்சைட்’ எனப்படும் கரடுமுரடான கற்களைச் செதுக்கி வேட்டைக்காகப் பயன்படுத்தினர். இவர்கள் நிலையான ஓரிடத்தில் தங்காமல் உணவைத் தேடி நாடோடிகளாக வாழ்ந்தனர்.
“ஏற்கெனவே விருத்தாச்சலம் அருகே பாலக்கொல்லை மற்றும் பண்ருட்டி ஓடக்கன்குப்பம் பகுதிகளில் இது போன்ற கருவிகள் கிடைத்துள்ளன. தற்போது கிடைத்துள்ள கருவி, பழங்கால மக்கள் இப்பகுதியில் இடம்பெயர்ந்து வாழ்ந்ததைக் காட்டுகிறது. அல்லது ஆற்று வெள்ளப் பெருக்கின் காரணமாக வேறு இடத்திலிருந்து அடித்து வரப்பட்டிருக்கலாம்,” என ஆய்வாளர் இம்மானுவேல் தெரிவித்தார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆற்றில் சிறிய அளவிலான ‘கிழிப்பான்’ (Blade) வகை கருவி கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. தென்பெண்ணை ஆற்றங்கரை நாகரிகத்தின் வேர்களைத் தேடித் தொடர்ந்து மேற்பரப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தக் கண்டுபிடிப்பு, கொற்றலை மற்றும் பாலாற்றுச் சமவெளிகளைப் போலவே தென்பெண்ணை ஆற்றங்கரையும் கற்கால மனிதர்களின் முக்கிய வாழ்விடமாக இருந்திருப்பதை உறுதிப்படுத்துகிறது.
