புதுடில்லி, மே 14- அய்ந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு பொதுமக்களை மீண்டும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
அதன் தொடக்கமாக, நாட்டின் முன்னணி பால் நிறுவனங்களான அமுல் (Amul) மற்றும் மதர் டெய்ரி (Mother Dairy) ஆகியவை தங்களின் பால் விலையை இன்று (14.5.2026) முதல் அதிரடியாக உயர்த்தியுள்ளன.
அமுல் பால் விலை உயர்வு விவரம் (லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை):அமுல் நிறுவனம் தனது பல்வேறு வகை பால் பாக்கெட்டுகளின் விலையை மாற்றியமைத்துள்ளது. அமுல் நிறுவனத்தைத் தொடர்ந்து மதர் டெய்ரி நிறுவனமும் விலையை உயர்த்தியுள்ளது.
குறிப்பாக எருமைப் பால் மற்றும் புல் கிரீம் பால் விலையில் பெரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது:
எருமைப் பால் (1 லிட்டர்): ரூ.75-லிருந்து ரூ.80 ஆக உயர்வு (ரூ.5 அதிகரிப்பு).
புல் கிரீம் பால் (1 லிட்டர்): ரூ.69-லிருந்து ரூ.72 ஆக உயர்வு.
“தேர்தல் முடியும் வரை அமைதியாக இருந்துவிட்டு, வாக்குப்பதிவு முடிந்த கையோடு பால், எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையை உயர்த்துவது சாமானிய மக்களின் வயிற்றில் அடிப்பது போன்றது” என இல்லத்தரசிகளும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
பால் விலை உயர்வு என்பது தேநீர், காபி முதல் இனிப்பு வகைகள் மற்றும் இதர பால் சார்ந்த பொருட்களின் விலையையும் உயர்த்தும் என்பதால், இது நடுத்தர வர்க்கத்தினரின் மாதாந்திர பட்ஜெட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
ஒன்றிய அரசு விலைவாசி உயர்வைக்கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.
