தண்டலம் ஊராட்சியில் ஓஎம்ஆர் சாலையில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு! திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த வேண்டுகோள்!

திருப்போரூர், மே 14- தண்டலம் ஊராட்சியில் ஓ.எம்.ஆர் சாலையில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரக்கேடு ஏற்படுத்துவதை தவிர்க்க திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய தண்டலம் ஊராட் சியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் பூந்தண்டலம், பாரதி நகர், அம்மன் நகர், அய்ஸ்வர்யம் கார்டன், பழண்டியம்மன் நகர், பாம் அவென்யூ, சிறீராம் நகர், ஆனந்தம் நகர், கிரீன் கோல்டு சிட்டி, திருமலை நகர், சன்ஷைன் அவென்யூ, ஆதித்யராம் நகர், கந்தகோட்டம் நகர், பிரைட் சிட்டி, அமர் கார்டன் உள்ளிட்ட ஏராளமான வீட்டு மனைப் பிரிவுகள் உள்ளன.

இதன் காரணமாக தண்டலம் ஊராட்சியின் மக்கள் தொகை கணிசமாக உயர்ந்துள்ளது. பல மனைப் பிரிவுகளில் ஏராளமான வீடுகள் கட்டப்படுகின்றன. மேலும், ஓ.எம்.ஆர். சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றும் உள்ளது. மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பும் கட்டப்பட்டு வருகிறது. மேலும் ஓ.எம்.ஆர் சாலையையொட்டி உணவகங்களும், நவீன தேநீர்க்கடைகளும் உருவாகி உள்ளன.

ஆனால், இதுவரை தண்டலம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக வீடுகளில் இருந்து பெறப்படும் குப்பைகளும், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தெருக்களில் சேகரிக்கப்படும் குப்பைகளும் இடையன்குப்பம் வனப்பகுதியிலும், தண்டலம் இடுகாட்டை ஒட்டிய தனியார் நிலத்திலும் கொட்டப்படுகின்றன.

இதன் காரணமாக இடுகாட் டிற்குச் செல்லும் பாதையே குப்பை மேடாக காட்சி அளிக்கிறது. இடுகாட்டை ஒட்டி உள்ள தனியாருக்குச் சொந்தமான குடிநீர் தயாரிப்பு நிறுவனத்திற்கு வரும் பொதுமக்கள் இந்த குப்பைக் கழிவுகளில் இருந்து வரும் துர்நாற்றத்தை சுவாசித்தபடி செல்ல வேண்டி உள்ளது.

இவ்வாறு தனியார் நிலத்தில் கொட்டப்படும் குப்பைகள், பிளாஸ்டிக் பேப்பர்கள், கழிவுகள் போன்றவை காற்றில் பறந்து அருகில் உள்ள குளத்தில் மிதக்கின்றன. இதனால் குளத்தின் நீரும் மாசடைந்து காணப்படுகிறது. இதுகுறித்து படத்துடன் நாளிதழிலில் செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து குப்பைகள் அகற்றப்பட்டன. ஆனால் சில நாள்களுக்குப் பிறகு மீண்டும் குப்பை கொட்டுதல் தொடர்கதையாகி விட்டது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக அடுக்குமாடி குடியிருப்புகள், கடைகள், ஓட்டல்கள், தனியார் மனைப்பிரிவுகளில் இருந்து குப்பைகளை பைக்குகளில் கொண்டுவந்து ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள விவசாய நிலங்களை ஒட்டி கொட்டிச் செல்கின்றனர். இவ்வாறு கொட்டப்படும் குப்பைகள் காற்றில் பறந்து விவசாய நிலங்களில் சேர்கின்றன. விவசாயிகளின் வேளாண் பணிகளுக்கு இந்த குப்பைகளும், கழிவுகளும் ஊறு விளைவிக்கின்றன.

எனவே, தண்டலம் ஊராட்சி நிர்வாகம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இவ்வாறு பொது இடத்திலும், விவசாய நிலங்களிலும், ஓ.எம்.ஆர். சாலையிலும், தனியார் நிலத்திலும் குப்பைகளை கொட்டி சுகாதாரக்கேடு ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊராட்சி மன்ற பணியா ளர்கள் மூலமாக குப்பைகள் சேகரிக்கப் பட்டாலும் அவற்றை தரம் பிரித்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் உரம் தயாரிக்க போதிய நிதி ஆதாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *