| த |
மிழ்நாடு அரசியல் ரீதியாக உருவாக்கப்பட்டது; சாமியார்கள், ஜோதிடர்கள் அல்லது அரண்மனை ஜோசியர்களால் அல்ல. இந்தியா கண்ட மிக வலிமையான பகுத்தறிவுப் புரட்சிகளில் ஒன்றால்தான் இந்த மண் வடிவமைக்கப்பட்டது. மனிதனின் விதியை கோடிக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கோள் (கிரகங்கள்) தீர்மானிக்கின்றன என்ற நம்பிக்கையை பொது மக்கள் முன்னிலையில் சிதறடித்து கேலி செய்த தந்தை பெரியார் வாழ்ந்த மண் இதுவே.
சாதாரண மனிதருக்கே பூசாரிகளையும், ஜாதி ஆதிக்கத்தையும், மூடநம்பிக்கைகளையும், ஆதாரமற்ற அதிகாரங்களையும் கேள்வி கேட்கும் தைரியத்தை அளித்த அரசியல் பண்பாடு இதுவே. ஆட்சி என்பது பகுத்தறிவின் அடிப்படையிலும், சமூக நீதியின் அடிப்படையிலும், அறிவியல் சிந்தனையின் அடிப்படையிலும் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு தலைமுறைகள் வளர்ந்தன. அதனால்தான் இன்று நடைபெறுவது வெறும் அபத்தமாக அல்ல; வரலாற்றுத் துயரமாக உணரப்படுகிறது.
எவ்வளவு பரிதாபமான முரண்பாடு பாருங்கள். ஒருகாலத்தில் அரண்மனை ஜோதிடர்களையும், மர்ம ஆலோசகர்களையும் நையாண்டி செய்த அதே தமிழ்நாட்டில், இன்று ஒரு ஜோதிடர் அரசியல் விவகாரங்களுக்கான “Officer on Special Duty” என்ற அதிகார அமைப்புக்குள் உயர்த்தப்படுகிறார். அரசியலமைப்பு நிபுணர் அல்ல. பொதுக் கொள்கை அறிஞர் அல்ல. நிர்வாக திறமை அல்லது சமூகப் போராட்டங்களால் அறியப்பட்டவர் அல்ல. ஒரு ஜோதிடர். ஒரு எண் கணித நிபுணர். கிரக நிலைகள், அதிர்ஷ்ட எழுத்துகள், அரசியல்வாதிகளுக்கான ஆன்மிக ஆலோசனைகள் ஆகியவற்றின் மூலம் அடையாளம் பெற்ற ஒருவர்.
ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் (Rickey Radhan Pandit Vettrivel) என்பவர் கோயில் திருவிழாக்களில் கைரேகை பார்த்து வாழும் சாதாரண ஜோசியர் அல்ல. பல ஆண்டுகளாக வெளிவந்த தகவல்களில், உயர்சாதனையாளர் வட்டாரங்கள், அரசியல் தொடர்புகள், கணிப்புகள், அதிகார மய்யங்களின் நெருக்கம் ஆகியவற்றின் மூலம் செல்வாக்கு கட்டியெழுப்பிய அரசியல் ஜோதிடராகவே அவர் சித்தரிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா, எண் கணித ஆலோசனைகள், அரசியல் நேரத் தேர்வுகள், குறியீட்டு முடிவுகள் போன்ற கதைகளில் அவரது பெயர் நீண்டகாலமாகச் சுற்றிக் கொண்டே இருந்தது. இன்று விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழக வளர்ச்சியால் அவர் தேசிய அளவில் பேசப்படுகிறார். ஆனால் இவை எதுவும் ஓர் அடிப்படை உண்மையை மாற்றுவதில்லை: ஜோதிடத்திற்கு அறிவியல் நம்பகத்தன்மை எதுவும் இல்லை. உலகம் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட அறிவியல் ஆய்வுகளில் ஜோதிடம் மீண்டும் மீண்டும் தோல்வியடைந்துள்ளது. மனித நடத்தை, தேர்தல் முடிவுகள், சமூக நிகழ்வுகள் ஆகியவற்றை கணிக்கக்கூடிய அறிவியல் முறையாக எந்த முக்கிய அறிவியல் நிறுவனமும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. செவ்வாய் தேர்தலை முடிவு செய்கிறது, சனி ஆட்சியை கட்டுப்படுத்துகிறது, குரு பொருளாதாரக் கொள்கையை நிர்ணயிக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
இருப்பினும் அரசியல்வாதிகள் ஏன் ஜோதிடர்களை நாடுகிறார்கள்? காரணம், ஜோதிடம் பொறுப்புணர்வு இல்லாத மனஅமைதியை வழங்குகிறது. அது ஆட்சியாளர்களுக்கு “பிரபஞ்ச அங்கீகாரம்” கிடைத்துவிட்டது என்ற மாயையை உருவாக்குகிறது. ஏதாவது தவறாக நடந்தால் — “கிரகப் பெயர்ச்சி காரணம்”. தேர்தலில் தோற்றால் — “நேரம் சரியில்லை”. முடிவுகள் தோல்வியடைந்தால் — “நட்சத்திரங்கள் மாறட்டும்” என்று காத்திருக்கலாம். இதுவே பொறுப்பிலிருந்து தப்பிக்கும் ஒரு வசதியான பாதையாக மாறுகிறது. ஆனால் இந்த தனிப்பட்ட பகுத்தறிவின்மைகள் மெதுவாக பொதுநிறுவனங்களுக்குள் நுழைந்து அரசியல் பண்பாட்டையே பாதிக்கத் தொடங்கும் போது தான் உண்மையான ஆபத்து ஆரம்பமாகிறது.
இதனை இன்னும் வேதனையாக்குவது, இது குறிக்கும் குறியீட்டு வீழ்ச்சிதான். அறிவியல் சிந்தனை மற்றும் பகுத்தறிவு மிக்க பொதுவாழ்வில் பெருமை கொண்ட தமிழ்நாடு, இன்று மாறுபட்ட காட்சியை காண்கிறது. திராவிட அரசியல் நடுத்தரகால மூடநம்பிக்கைகளை சவாலுக்கு உட்படுத்த வேண்டிய ஒன்று; அதை நிறுவனம் போல நிலைநிறுத்த வேண்டிய ஒன்று அல்ல. ஆனால் இன்று, கல்வியறிவு பெற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவிக்கும் நேரத்தில், விவசாயிகள் நிச்சயமின்மையில் வாழும் நேரத்தில், பொது சுகாதார அமைப்பு அழுத்தத்தில் இருக்கும் நேரத்தில், ஆட்சி நாடகமயமாக மாறிக்கொண்டிருக்கும் நேரத்தில் — அதிகார மய்யங்களின் அருகில் ஜோதிடர்கள் அமர்வது சாதாரணமாக்கப்படுகிறது. சமுதாயத்திற்கு அனுப்பப்படும் செய்தி மிகவும் அவமானகரமானது: திறமை அவசியமில்லை. ஆதாரம் இரண்டாம் நிலை. தேவையற்ற (மர்ம) நம்பிக்கைகளும் ஒரு நவீன அரசின் நிர்வாக நடைபாதைகளுக்குள் நுழையலாம்.
ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கையை யாரும் கேள்வி கேட்கவில்லை. ஒவ்வொரு குடிமகனுக்கும் பிரார்த்திக்கவும், வழிபடவும், தியானிக்கவும், தனிப்பட்ட முறையில் ஜோதிடர்களை அணுகவும் முழு உரிமை உள்ளது. ஆனால் ஆட்சி என்பது தனிப்பட்ட ஆன்மிகம் அல்ல. அரசு அலுவலகங்கள், போருக்குச் செல்லும் முன் “நல்ல நேரம்” சொல்ல ஜோதிடர்களை காத்திருந்த சோழர் கால அரண்மனைகள் அல்ல. இந்தியா என்பது அறிவியல் மனப்பான்மையை தேசிய கடமையாகப் பேசும் அரசியலமைப்பு ஜனநாயகம். அரசியல் தலைவர்கள் பொதுவெளியில் ஜோதிடர்களை அதிகார வட்டாரங்களுக்குள் உயர்த்தும் போது, அவர்கள் தனிப்பட்ட தேர்வை மட்டும் செய்யவில்லை; பொதுவாழ்வில் பகுத்தறிவின்மையை சட்டபூர்வமாக்குகிறார்கள்.
இதில் மிகுந்த துயரமான பகுதி — மரபின் துரோகம். அச்சமின்றி பகுத்தறிவை பேசிய சிந்தனையாளர்களை உருவாக்கிய அதே தமிழ்நாடு, இன்று பிரபஞ்ச ஆறுதலைத் தேடும் அச்சமடைந்த மன்னர்களைப் போல நடக்கும் தலைவர்களைப் பார்க்கிறது. ஒருகாலத்தில் மூடநம்பிக்கையை கேலி செய்த அரசியல் மரபே, இன்று அதற்கே அடிமையாகும் அபாயத்தில் உள்ளது. பகுத்தறிவு, நவீனம், சமூக விழிப்புணர்வு குறித்து பல தசாப்தங்கள் பேசப்பட்ட பிறகும், மீண்டும் கிரகங்கள், அதிர்ஷ்ட எண்கள், மர்ம கணிப்புகள் ஆகியவை அதிகார அரங்கிற்குள் நுழைவதை நாம் காண்கிறோம். இதைக் கண்டு தந்தை பெரியார் கசப்பான சிரிப்புடன் இருப்பார் போல தோன்றுகிறது.
அரசுகள் ஜாதகங்களால் நடத்தப்படுவதில்லை. சுக்கிரன் சரியான வீட்டிற்குள் நுழைந்ததால் சமூகங்கள் முன்னேறுவதில்லை. நல்லாட்சி என்பதற்கு திறமை, நெறிமுறை, தரவுகள், திட்டமிடல் மற்றும் பொறுப்புணர்வு தேவை. மீதியெல்லாம் தனிப்பட்ட நம்பிக்கைகளின் எல்லைக்குள் இருக்க வேண்டியவை. ஜோதிடம் ஆட்சியைத் தாக்கத் தொடங்கும் தருணத்தில், ஜனநாயகம் ஒரு குடியரசைப் போல அல்ல; நவீன உடை அணிந்த நடுத்தரகால அரசவையைப் போலத் தோன்றத் தொடங்குகிறது.
முகநூல்: கே.ஏ.சாஜி (ஆங்கிலம்)
தமிழில்: குடந்தை கருணா
