10 வயது சிறுவன் கண்ணில் பாய்ந்த ஸ்பிரிங் 50 வயது தொழிலாளியின் மூளையில் ஊடுருவிய மரக்குச்சி நுணுக்கமான அறுவைச் சிகிச்சை வெற்றி; இருவருக்கும் மறு வாழ்வு! மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

மதுரை, மே 12 – மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கண் மருத்துவர்கள் மேற்கொண்ட இரண்டு அதீத சிக்கலான அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக முடிந்து, மருத்துவப் பயனாளிகள் நிரந்தர பாதிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சாதனைகள் குறித்து மருத்துவமனை முதல்வர் பேராசிரியர் மருத்துவர் அருள் புகழ் சுந்தரேஸ்வரன் மற்றும் மயக்கவியல் துறைத் தலைவர் மருத்துவர் கவிதா உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தனர்.

கண்ணில் பாய்ந்த ஸ்பிரிங்

சிறுவனின் கண்ணில் சிக்கிய ஸ்பிரிங் அகற்றம் முதல் சம்பவத்தில், 10 வயது சிறுவன் ஒருவன் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பிளேஸ்டேஷன் ரிமோட்டில் இருந்த ஆண்டெனா ஸ்பிரிங் போன்ற வயர் அவனது வலது கண்ணின் கீழ் இமையில் ஆழமாகப் பாய்ந்தது.

குடும்பத்தினர் அதைத் தாங்களாகவே அகற்ற முயன்றதால், அந்த கம்பி மேலும் உள்ளே சென்று நிலைமை சிக்கலானது.

பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பலனளிக்காத நிலையில், சிறுவன் மதுரை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டான்.

சிறப்பு கண் மருத்துவக் குழுவினர், மைக்ரோஸ்கோப் உதவியுடன் சுமார் 20 நிமிடங்கள் நுணுக்கமான அறுவை சிகிச்சை செய்து, கண்ணிற்கோ பார்வைக்கோ எவ்வித பாதிப்பும் இன்றி அந்த ஸ்பிரிங் கம்பியை வெற்றிகரமாக அகற்றினர்.

மூளை வரை ஊடுருவிய
6.7 செ.மீ நீள மரக்குச்சி

மற்றொரு சம்பவத்தில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் சாலை விபத்தில் காயமடைந்து அனுமதிக்கப்பட்டார்.

சிடி ஸ்கேன் பரிசோதனையில், சுமார் 6.7 சென்டிமீட்டர் நீளமுள்ள மரக்குச்சி அவரது இடது கண் வழியாக மண்டையோட்டுக்குள் புகுந்து, மூளையின் முக்கியப் பகுதியான ‘டெம்போரல் லோப்’ வரை சென்றிருந்தது கண்டறியப் பட்டது.

பேராசிரியர் மருத்துவர் பர்வதசுந்தரி உள்ளிட்ட கண் மருத்துவர்கள், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஜெயப்பிரகாஷ் மற்றும் மயக்கவியல் நிபுணர்கள் இணைந்து ஒருங்கிணைந்த சிகிச்சையை மேற்கொண்டனர். மூளைக்கு எவ்விதப் பாதிப்பும் இன்றி அந்த மரக்குச்சி முழுமையாக வெளியே எடுக்கப்பட்டது.

தற்போது மருத்துவப் பயனாளி உயிர் ஆபத்திலிருந்து மீட்கப்பட்டு நலமாக உள்ளார்.

இலவசக் கருவிழி
மாற்று சிகிச்சை

செய்தியாளர் சந்திப்பின் போது, விபத்துகளால் கருவிழி பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு ராஜாஜி மருத்துவமனையில் தரமான கருவிழி மாற்று அறுவை சிகிச்சைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தனியார் மருத்துவமனைகளில் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகும் இச்சிகிச்சை, இங்கு நவீன வசதிகளுடன் செய்யப் படுகிறது.

மேலும், கண் வங்கி மூலம் பெறப்படும் கருவிழிகள் மூலம் பலருக்குப் பார்வை வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் பெருமிதத்துடன் தெரிவித்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *