கள்ளுக்கடை மறியல் போராட்டத்திற்குத் தலைமை தாங்கி, அன்றைய பிரிட்டிஷ் அரசையே நடுநடுங்க வைத்த வீராங்கனை அன்னை நாகம்மையார் நினைவு நாள் இன்று!

10 Min Read

– கி.வீரமணி –

சுயமரியாதை இயக்கத்தின் வளர்ப்புத் தாய் அன்னை ஈ.வெ.ரா.நாகம்மையார் அவர்களது நினைவு நாள் இன்று (11.5.2026).

இந்திய வரலாற்றில் முதலாவது முன்னோடி யான களப் போர் வீராங்கனைகள் அன்னை நாகம்மையாரும், தந்தை பெரியாரின் பாசமுள்ள தங்கை எஸ்.ஆர்.கண்ணம்மாள் அவர்களும் ஆவார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசில் இருந்தபோது, காந்தியார் ஆணைக்கேற்ப 1921 இல், (105 ஆண்டுகளுக்கு முன்னதாக), கள்ளுக்கடை மறியல் போராட்டத்திற்குத் தலைமை தாங்கி, அன்றைய பிரிட்டிஷ் அரசையே நடுநடுங்க வைத்த வீராங்கனை!

அதுபற்றி சாமி.சிதம்பரனார் எழுதிய, தந்தை பெரியார் வரலாற்றுக் காவியமான ‘‘தமிழர் தலைவர்’’ எனும் நூலில் உள்ள அரிய, அறியவேண்டிய தகவல்களை இன்றைய இளையர்கள் படித்து, மக்களிடையே பரப்பிட வேண்டும்.

அன்று முதல் இன்றுவரை வரலாறு எழுதுபவர்களுக்கும், ஊடகத்தினருக்கும், சுயமரியாதை இயக்கம் – திராவிட இயக்கங்கள் என்றால், ஒரு ஒவ்வாமை நோய் உண்டு. அதன் தலைவர் தந்தை பெரியார் முதல் வீரமணி காலம் வரை தொடரும் கேவலமான நோய்.

அது ஆதவனை கைகளால் மறைப்பதுபோல ஒரு முட்டாள்தனமே!

வரலாற்றுத் தெளிவு பெற படியுங்கள்!

‘‘1921ஆம் ஆண்டில் நடந்த கள்ளுக்கடை மறியல் மிகவும் புகழ் பெற்றது. ஈரோட்டில் மறியல் மும்முரம் மிகுதி. ஈ.வெ.ரா. மறியலைத் தலைமை தாங்கி நடத்தியவர். இதற்காக 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்து. மறியல்காரர்கள் தடையுத்தரவைப் பொருட் படுத்தவில்லை. எண்ணற்ற தொண்டர்கள் சிறை புகுந்தனர். 1921 நவம்பரில் ஈ.வெ.ரா.வும் அவரோடு சுமார் 100 தொண்டர்களோடு சிறை பிடிக்கப்பட்டனர். ஒரு மாதம் தண்டனை பெற்றார். இதனால் ஊரெங்கும் அமளி. நாடெங்கும் கலவரம். இச்சமயம் நாகம்மை யாரும், ஈ.வெ.ரா.வின் தங்கை கண்ணம்மாளும் மறியலுக்குப் புறப்பட்டனர். இவர்களுடன் பல பெண்மணிகளும் தொடர்ந்தனர். மறியல் செய்பவர்களில் ஒரு நாளில் ஆயிரக்கணக்கில் பெருகினர். நாகம்மையாரும் அவருடன் சென்ற தோழர்களும் சிறைபடுத்தப் பட்டால் ஈரோட்டின் நிலைமை மிக்க மோசமாகி, 10,000 பேர்களுக்கு சிறை வேண்டியிருக்குமென்று அதிகாரிகள் கருதி, சென்னை அரசாங்கத்துக்குத் தந்தி கொடுத்து முன்னறிவுடன் தடையுத்தரவை நீக்கினர். அச்சமயம் சர்க்கார் 144-க்கு மதிப்பற்று வாய்தா காலத்திற்குள் ரத்து செய்யப்பட்டது இது ஒன்றேயாகும். இச்சம்பவத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் கள்ளுக்கடை மறியல் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துவிட்டது. இவ்வாறு குடும்பத் துடன் தேசத்திற்குத் தியாகம் செய்த இராமசாமியாரை இன்று சிலர் தேசத் துரோகி என்று தூற்றுகின்றனர். என்னே! இக்கற்றுக் குட்டிகளின் பேதமை.

இச்சமயம் பொதுவாகவே இந்தியாவில் நடந்துவந்த ஒத்துழை யாமைக் கிளர்ச்சி சம்பந்தமாகக் காங்கிரசுக்கும், அரசாங்கத்துக்கும் ஒரு சமாதான ஒப்பந்தப் பேச்சு நடைபெற்றது. இதற்காகப் பம்பாயில் ஒரு மாநாடு கூட்டப்பட்டது. அதற்குக் காலஞ்சென்ற சர். சங்கரன் நாயர் தலைவர். இம்மாநாட்டின் பெயர் மாளவியா மாநாடு. இம்மாநாட்டின் நடவடிக்கை தொடங்கப்படும் முன்பு திரு. பண்டிட் மாளவியா அவர்களும், சர். சங்கரன் நாயர் அவர்களும் ‘மறியலை நிறுத்திவிட்டு, நடவடிக்கை தொடங்கலாம்’ என்று காந்தியாரைக் கேட்டுக் கொண்டார்கள். அப்போது காந்தியார், “மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை; அது ஈரோட்டி லுள்ள இரண்டு பெண்களிடம் இருக்கிறது. அவர்களைக் கேட்க வேண்டும்” என்று பதிலுரைத்தார். இச்செய்தி அச்சமயம் 19.1.1922ஆம் தேதி வெளியான “ஹிந்து” பத்திரிகையில் வெளியிடப்பட்டிருக்கிறது. காந்தியார் இவ்வாறு சொன்னதற்குக் காரணம் ஈ.வெ.ரா.வின் மனைவி நாகம்மையார், அவருடைய தங்கை கண் ணம்மாள் ஆகிய இரு பெண்மணிகளும் மறியலுக்கு முக்கிய காரணமானவர்கள். ஆதலால், அவர்களின் கருத்தையறிந்த பின்பே முடிவு செய்ய வேண்டுமென்று கருதிக் கூறியதேயாகும்.

கள்ளுக்கடை மறியல் செய்வதாக முதன்முதல் முடிவு செய்த இடம் ஈரோடுதான். ஈ.வெ.ரா. அவர்கள் வீட்டில் காந்தியார் முதலிய தலைவர்கள் கூடின காலத்தில் கள்ளுக்கடை மறியல் செய்ய வேண்டுமென்று பேசி முடிவு செய்யப்பட்டது. அம்முடிவுக்கு அடிப்படை ஈ.வெ.ரா.வின் முழு ஆதரவேயாகும். இவ்வுண்மையை இளங்கன்றுகள் சில அறியாதிருக்கலாம். ஆனால் காந்தியாரும், ஆச்சாரியாரும் மறந்திருக்க முடியாது.

பின்பு ஒத்துழையாமை ஒருவாறு அடங்கிற்று. பலர் அம்முறை தவறு என்று உணர்ந்தனர். அவர்களில் காலஞ்சென்ற சி.ஆர். தாஸ் என்பவரும் ஒருவர். “விலகி நின்று கூச்சலிடுவது பயன் தராது. கோட்டைக்குள் சென்று எதிரிகளை மடக்க வேண்டும்” என்ற கொள்கையுடன் சுயராஜ்யக் கட்சியைத் தொடங்கினார் இவர். இக்கட்சியை ஈ.வெ.ரா. ஆதரிக்கவில்லை; எதிர்த்தார். காந்தியார் முதலிய மற்றும் பலரும் ஒப்புக் கொள்ளவில்லை. திரு. சி. ராஜகோ பாலாச்சாரியாரும், ஈ.வெ.ரா.வையே பின்பற்றினார். காந்தியாரின் தலைமைக்கடங்கிய இவர்கள் வைதிக ஒத்துழையாதார் அல்லது “மாறுதல் வேண்டாதார்” என்று அழைக்கப்பட்டனர். ஆயினும் சுயராஜ்யக் கட்சி வளர்ச்சியடைந்து வந்தது. தென்னாட்டிலும் இக்கட்சி உரம் பெற்றது. அப்பொழுது நமது மாகாணத்தில் நீதிக்கட்சியின் பேரால் பார்ப்பனரல்லாதார் அதிகாரம் நடத்தினர். பார்ப்பனர்களால் இதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. அதற்காகவே சுயராஜ்யக் கட்சியை ஆரம்பித்தார்கள் என்றும், தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் சுயராஜ்யக் கட்சியை ஆதரித்து நின்றனர் என்றும் சொல்ல வேண்டும். “பார்ப்பனரல்லாதார் கட்சியை அதிகாரத்திலிருந்து விரட்ட வேண்டும். சுயராஜ்யக் கட்சியின் பேரால் நாமே அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்” என்பது அக்காலச் சுயராஜ்யக் கட்சியின் நோக்கம். இதனாலேயே பார்ப்பனர்கள் அனைவரும் ஒருமுகமாக அக்கட்சியைப் போற் றினர், ஆதரித்தனர். இவ்வுண்மையை ஈ.வெ.ரா.வும் அறிந்து கொண்டார்.

மலையாளத்தில் வைக்கம் என்ற ஊரிலுள்ள தெருவில் தாழ்த்தப் பட்டவர்கள் நடக்கக் கூடாது என்பது வெகு நாளைய கட்டுப் பாடாய் இருந்து வந்தது. அங்கிருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் சுயமரியாதையுணர்ச்சி கொண்டனர். தெருவில் நடக்கும் உரிமை பெற விரும்பினர். அதற்காக ஒரு சத்தியாக்கிரகத்தைத் தொடங்க வேண்டுமென்று கேரள காங்கிரஸ்  தலைவர்கள் கருதினர். அதன்படியே தொடங்கினர். காலஞ்சென்ற ஜார்ஜ் ஜோசஃப் உள்பட 19 பேர் வரிசையாகத் திருவாங்கூர் அரசாங்கத்தாரால் கைது செய்யப்பட்டு விட்டனர். தலைவர் இல்லாத திண்டாட் டத்தால் சத்தியாக்கிரகம் நின்றுவிடும் போலாகிவிட்டது. சிறையிலிருந்தபடியே யோசித்துத் தோழர்கள் ஜார்ஜ் ஜோசப்ஃபும் குரூர் நீலகண்ட நம்பூதிரியும் ஈ.வெ.ரா.வுக்கு ஒரு கடிதம் எழுதினர். “பெரிய காரியத்தைத் தொடங்கி விட்டோம்; அடக்குமுறை பலப்பட்டு விட்டது; இவ்வளவு சீக்கிரத்தில் நாங்களெல்லோரும் கைது செய்யப்படுவோமென்று எதிர்பார்க்கவில்லை; தாங்கள் உடனே வைக்கம் வந்து சத்தியாக்கிரகத்தை ஏற்று நடத்தினால்தான் கேரளத்தினுடைய மானமும், எங்களுடைய மானமும் மிஞ்சும்; காலதாமதம் செய்யவோ, யோசித்துப் பார்க்கவோ நேரமில்லை. உடனே வரவும்” என்று ஜெயிலில் இருந்தபடியே இரகசியமாக ஆள்வசம் கடிதம் கொடுத்தனுப்பினார்கள். ஈ.வெ.ரா. குளித்தலை அரசியல் மாநாட்டில் இருந்தபடியே மதுரை ஜில்லா சுற்றுப் பயணம் சென்றிருந்தார். அங்கு வயிற்றுக்கடுப்பு ஏற்பட்டு திடீரென்று புறப்பட்டு ஈரோடு வந்து நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்தார். இச்சமயத்தில்தான் வைக்கத்திலிருந்து அனுப்பப்பட்ட கடிதம் அவருக்குக் கிடைத்தது. அன்று வருஷப் பிறப்பு. அதைப் பார்த்தவுடன் நாகம்மையாரிடம் தம் நோய் குண மாகி விட்டதென்று பொய் சொல்லிவிட்டு, படுக்கை, துணிமூட்டை முதலியவற்றைச் சற்றுப் பெரிதாகவே கட்டிக் கொண்டு அன்றிரவே வைக்கத்திற்குப் புறப்பட்டு விட்டார்.

மறுநாள் பகல் 2 மணிக்கு வைக்கம் சேர்ந்தார். உடனே தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இவரும் கைது செய்யப்பட்டு விடுவாரென்று மக்கள் கருதினர். ஆனால், காரியம் அப்படி நடக்கவில்லை. இராமசாமியார் வைக்கம் வந்து சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்ட சங்கதி திருவாங்கூர் அரசருக்கு எட்டிற்று. அவர் உடனே போலீஸ் கமிஷனரை அழைத்து ஈ.வெ.ரா.வைக் கைதியாக்க வேண்டாமென்று சொல்லி விட்டார். பிறகு திவான் பேஷ்காரையழைத்து இராமசாமி திருவாங்கூரில் இருக்கும் வரையில் அவருக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்து, அரசாங்க விருந்தாளிபோல், குறிப்பாகக் கவனித்துக் கொள்ளும் படி உத்தரவிட்டார். இது அப்போதிருந்த திவான் ராகவய் யாவுக்குப் பிடிக்கவில்லை. என்றாலும் போலீஸ் கமிஷனர் ‘பட்’ துரையும், திவான் பேஷ்கார் சுப்பிரமணிய அய்யரும் சத்தியாகிரக நிலையத்திற்கு வந்தார்கள். அவர்களைப் பார்த்த பொதுமக்கள் ஈ.வெ.ரா.வைக் கைது செய்வதற்காகத்தான் வந்திருக்கிறார்களெனக் கருதினார்கள்; ராமசாமியாரும் அவ்விதமே கருதினார். மூட் டையைக் கட்டிக் கொண்டு தயாரானார். ஆனால், நடந்ததென்ன? அதிகாரிகள் இருவரும் அவரிடம் சென்றார்கள். அவரை வணங்கினார்கள். அவருடைய நலனைப் பற்றி விசாரித்தார்கள். அவரது சவுகரியத்திற்காகத் தாங்கள் என்னென்ன செய்ய வேண்டுமென்று கேட்டார்கள். ஈ.வெ.ரா.வைப் பார்த்து, “சத்தி யாக்கிரகம் வேறு; அரச மரியாதை வேறு” என்று சொன்னார்கள். அதற்கு ராமசாமியார், “நான் சத்தியாக்கிரகம் சம்பந்தமாக வந்திருக்கிறேனெயொழிய விருந்தாளியாகவோ, அரச மரியா தையைப் பெறவோ வரவில்லை. ஆதலால், தாங்கள் சட்டப்படி செய்ய வேண்டியதைச் செய்யலாம்” என்று சொன்னார்.

இதற்குள் ஏராளமான மக்கள் அவ்விடத்தில் கூடிவிட்டனர். அதிகாரிகள் ஈ.வெ.ரா.வுக்கு செய்யும் மரியாதையைப் பார்த்த பொதுமக்கள் குழப்பமடைந்து விட்டார்கள். அவர் நன்மைக்கு வந்தாரோ, தீமைக்கு வந்தாரோ, சத்தியாகிரகத்தை நிறுத்தி விடுவாரோ என்று சந்தேகப்பட ஆரம்பித்து விட்டார்கள். கடைசியாக அதிகாரிகள், “மகாராஜா அவர்கள் தமது வரவேற்பைத் தெரிவிப்பதற்காகவே எங்களை இங்கு அனுப் பினார்கள்” என்று சொன்னபோதுதான் அரசருக்கும் தமக்கு முள்ள பரிச்சயமும் அதன் சந்தர்ப்பங்களும் ராமசாமியாருக்கு ஞாபகத்திற்கு வந்தன. அதன் விவரம் என்னவென்றால், திருவாங்கூர் அரசர் டில்லிக்குப் போகும் சந்தர்ப்பங்களில் எல்லாம் நடுவில் இறங்கிக் குளித்துச் சாப்பிட்டுப் போவதற்காக ஈரோடு ஸ்டேஷனில் இறங்கும்போதெல்லாம் அரசர் ஈ.வெ.ரா.வின் ரயில்வே ஸ்டேஷன் பங்களாவிலும் அவரது பரிவாரங்கள் ராமசாமியாரின் சத்திரத்திலும் தங்கி உணவருந்திப் போவது வழக்கம், அவ்விதமே பல தடவை வந்து போயிருக்கிறார். அதன்மூலம் அரசருக்கும், சில அதிகாரிகளுக்கும் ஈ.வெ.ரா.வின் குடும்பத்தாருக்கும் அறிமுகமுண்டு. இதன் காரணமாகத் தாம் பல தடவை பெற்ற உபசாரங்களுக்குப் பதில் உபசாரங்கள் செய்வதற்கு இப்போது சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாக அரசர் கருதினார். ஆகையால்தான் அதிகாரிகளை ஈ.வெ.ரா.விடம்  அனுப்பினார். அரசர் அவர்கள் தன்னைப் பற்றித் தப்பாக நினைக்கக் கூடா தென்றும், தம் கடமையைச் செய்ய வந்திருப்பதாகவும், அரசர் அவர்களும் தமது கடமையைச் சட்டப்படி செய்வதில் தமக்காக எவ்வித தாட்சண்யமும் பார்க்கக் கூடாதென்றும் ஈ.வெ.ரா. கூறி அவர்களுக்கு நன்றியும் தெரிவித்து அனுப்பி விட்டார்.

பிறகு இச்சத்தியாக்கிரகத்தில் ராமசாமியாரும் அவருடன் கூடச் சென்ற தோழர் அய்யாமுத்துவும் சிறைப்பட்டனர். உடனே நாகம் மையார் தோழர் எஸ்.ராமநாதன் அவர்களுடன் ஈரோட்டிலிருந்து வைக்கம் வந்து சேர்ந்தார். சிறிது காலம் தோழர் ராமநாதன் அவர்கள் தலைமை தாங்கி சத்தியாக்கிரகத்தை நடத்தினார். பின் நாகம்மையார் இதில் முக்கிய பங்கு கொண்டார். இச்சமயம் தமிழ்நாட்டிலிருந்தும், மலையாளத்திலிருந்தும் ஏராளமான பெண்கள் இக்கிளர்ச்சியில் பங்கு கொண்டனர். இச்சமயம் ஒரு மாதமானதும் ஈ.வெ.ரா. விடுதலையானார். விடுதலை ஆனவுடன் அவருக்குப் பிரஷ்ட உத்தரவு போடப்பட்டது. ஈ.வெ.ரா. அதையும் மீறினார். அதனால் மறுபடியும் கைது செய்யப்பட்டு, ஆறு மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு, திருவாங்கூர் சென்ட்ரல் ஜெயிலுக்குக் கொண்டு போகப்பட்டார். அதன் பிறகு நாகம்மை யார் தலைமை தாங்கி பல பெண்களுடன் திருவாங்கூர் முழுதும் சுற்றுப்பிரயாணம் செய்து புரட்சியான பெருங் கிளர்ச்சியை யுண்டாக்கி விட்டார். இறுதியில் சத்தியாக்கிரகம் வெற்றி பெற்றது. தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தெருவில் நடக்கும் உரிமை வழங்கப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முதல் வெற்றி பெற்றது வைக்கம் சத்தியாக்கிரகம் ஒன்றேயாகும். இச்சத்தியாக்கிரகத்தின் பின்விளைவேதான் கோவில் பிரவேசக் கிளர்ச்சி ஏற்பட்டு, திருவாங்கூர் கோவில்கள் எல்லாத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் திறந்து விடப்பட்டதாகும்.

இச்சத்தியாக்கிரகம் நாடெங்கும் புகழ் பெற்றுவிட்டது. இதனால் ஈ.வெ.ரா. “வைக்கம் வீரர்” என்ற பெயர் பெற்றார். இன்றும் தமிழ் நாட்டார் இப்பெயரை மறக்கவில்லை. “வைக்கம் வீரர்” என்றால் போதும் ஈ.வெ.ரா. என்று நன்கறிவார்கள். எனவே, தீண்டாமையை ஒழிப்பதற்காகத் திருவாங்கூர் அரசாங்கத்தாரால் இவர் இருமுறை சிறையிலிடப்பட்டார். 22.4.1924இல் ஒருமாத தண்டனை பெற்று அருவிக்குத்திச் சிறையிலிருந்தார். இது அரசர் லேசான தண்டனை கொடுக்கும்படி உத்தரவிட்டதால் ஏற்பட்டதாகும். விடுதலையான வுடன் ஒரு வாரத்தில் மறுபடியும் கைது செய்யப்பட்டார்.  ஆறு மாதம் தண்டிக்கப்பட்டுத் திருவாங்கூர் சென்ட்ரல் ஜெயிலில் கடின காவல் கைதியாக வைக்கப்பட்டார். என்றாலும் நான்கு மாதத்திலேயே அரசர் இறந்து போய்விட்டதால் அரச விளம்பரம் காரணமாக விடுதலை செய்யப்பட்டார். விடுதலையானவுடன் ஒரு வாரத்திற்கு ஓய்வு எடுக்கலாமென்றும், தம் தாயாரைப் பார்க்கலாமென்றும் கருதி ஈரோட்டுக்குச் சென்றார்.

ராமசாமியார் சுமார் ஏழு மாதங்களுக்கு முன்பு கதர்ப் பிரச்சாரம் செய்து வந்தபோது, சென்னையில் பேசிய பேச்சுக்காக அரசு வெறுப்பு, வகுப்பு வெறுப்புக் குற்றஞ் சாற்றப்பட்டு, 124-ஏ, 153-ஏ செக்ஷன்களின்படி சென்னை அரசாங்கத்தாரால் 11.9.1924இல், அதாவது ஈரோட்டுக்கு வந்தவுடனேயே சிறைப் பிடிக்கப்பட்டுச் சென்னைக்குக் கொண்டு போய், அங்குச் சில நாள் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். இதை இவர் மறுபடியும் திருவாங்கூருக்குச் சென்று, அங்குத் தொல்லை கொடுக்காமல் இருப்பதற்காகவே சென்னைஅரசாங்கத்தார் திருவாங்கூர் அர சாங்கத்திற்குச் செய்யும் உதவியென்று சொல்லிக் கொள்ளப் பட்டது. ஏனெனில், அச்சமயம் திருவாங்கூர் திவானாக இருந்தவர் ராகவய்யா. சென்னை மாகாணத்திற்குச் சட்ட மந்திரியாயிருந்தவர் சர்.சி.பி. ராமசாமி அய்யர். இவ்வழக்கில் ராமசாமியார் எதிர்வழக்காடவில்லை. என்றாலும் நியாயமற்ற வழக்கானதால் சர்க்காராலேயே பின் வாங்கிக் கொள்ளப்பட்டது. இவ்வழக்கு முடிவதற்குள் வைக்கத்தில் தெருவை எல்லோருக்கும் திறந்துவிட வேண்டுமென்று சர்க்காரே தீர்மானித்து, அதற்குள்ள வேலை களைத் தொடங்கி விட்டார்கள்.’’

(தமிழர் தலைவர், பக்கம் 65–67)

அவற்றையெல்லாம் தாண்டி, மகுடம் வைத்ததுபோல, அய்யா தந்தை பெரியார், அன்னை நாகம்மையார் மறைவின்போது எழுதிய இரங்கல் இலக்கியம்!

‘பெரியார் இலக்கியவாதி அல்ல’ என்று கூறிடும் சிலர் அறியவேண்டிய புத்திப் பாடம் அது!

‘பாரதி கண்ட புதுமைப் பெண்’ என்று எப்போதும் பேசும் சில மேடைப் பேச்சாளர்களுக்கு இது தெரிந்தால் அல்லது புரிந்தால், பெரியார் வடித்தெடுத்த ‘புரட்சிப் பெண்’ வரிசையில் அன்னையார்பற்றி ‘அனா, ஆவன்னா’ அறிய முடியும். பல கருத்தரங்கங்களை நமது தோழர்கள் நடத்தி, அன்னை நாகம்மையார்,  அன்னை மணியம்மையார் ஆகியோரின் போராட்டங்கள் குணங்களை விளக்கிப் பரப்பிடுதல் அவசியம்.

ஒரு நூற்றாண்டுக்கு முன் – அதுவும் பெண்கள் வீட்டிற்குள் முடங்கி, அடங்கிக் கிடக்கவேண்டும் என்று மனுதர்மம் கோலோச்சிய காலத்தில், அவர்களை வெளியே கொண்டு வந்தது மட்டுமல்ல, போராட்டக் களத்திலும் நிற்க வைத்த தந்தை பெரியாரின் ஒப்பற்ற ஆளுமைக்கு ஈடு இணை உளதோ?

செப்புவீர், ஜெகத்தோரே!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *