காலம் தாழ்த்தத் தாழ்த்த குதிரை பேரத்துக்கு இடம் கொடுத்து விடும்! ஆளுநர் விரைந்து முடிவு எடுக்கட்டும்!

4 Min Read

* தனிப் பெரும்பான்மை உள்ள கட்சியை ஆட்சி அமைக்குமாறு அழைக்க ஆளுநர் மறுப்பது ஏன்?
* தி.மு.க. தலைவரின் ஜனநாயக உணர்வும் கண்ணியமும் முதிர்ச்சியும் நிறைந்த அறிக்கை பாராட்டத்தக்கது

தனிப் பெரும்பான்மையுள்ள கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் காலம் தாமதிக்கத் தாமதிக்க, குதிரை பேரத்துக்கு இடம் கொடுத்து விடும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் முடிவுகள் கடந்த மே 4ஆம் தேதி (2026) வெளியாகிய நிலையில் அதிக   (107) இடங்களைப் பெற்ற ஜோசப் விஜய் அவர்கள் தமது த.வெ.க. கட்சி ஆட்சி அமைக்கத் தமிழ்நாடு ஆளுநரைச் சந்தித்து அரசியலமைப்புச் சட்ட மரபுப்படி  முதலமைச்சர் பதவி ஏற்க உரிமை கோரினார்.

தி.மு.க. கூட்டணியை
முறித்துக் கொண்ட காங்கிரஸ்

அவருக்கு அறுதிப் பெரும்பான்மை எண்ணிக்கை (118 இடங்கள்) இல்லை என்ற நிலையில், தி.மு.க. அணியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் – விஜய்க்கு ஆதரவு தருவார்கள் என்று காங்கிரசு கட்சி அறிவித்தது.  அந்தக் கட்சியின் தமிழ்நாட்டுப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்  என்பவர் இந்தத் தேர்தல் கூட்டணி  விஜய் ஆட்சி அமைப்பதற்காக மட்டுமல்ல, வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதற்கு அடுத்து வரவிருக்கும் தேர்தல்களிலும்கூடத் தொடரும் என்ற   விசித்திரமும், விநோதமும் கலந்த ஓர் அறிவிப்பினை, நேரே த.வெ.க. அலுவலகத்திற்குச் சென்று வெளியிட்டார். காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்களும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்குத்  தி.மு.க.வோடு உள்ள கூட்டணி உறவை முறிக்க சில மாதங்கள் முன்பிருந்து முயற்சித்தவர்களும் இச்சந்திப்பின்போது உடன் இருக்க, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்களையும் சேர்த்துப் பார்த்தாலும் எண்ணிக்கை 112 தான் உள்ளது; அறுதிப் பெரும்பான்மைக்குத் தேவையான மேலும் 6 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுக் கடிதம் தந்தால்தான் பதவி ஏற்புக்கு அழைப்பேன் என்று ஆளுநர் கூறினார்.

ஆளுநரை 3ஆவது முறை சந்தித்த த.வெ.க. தலைவர்!

அதுவரை செய்யப்பட்டு வந்த பதவியேற்பு  விழா ஏற்பாடும் பாதியிலேயே கைவிடப்பட்டு, பிறகு நேற்று (8.5.2026) மூன்றாவது முறையாகச் சந்தித்து  இடதுசாரி எம்.எல்.ஏ.க்கள் 4 பேரின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் அவர்களிடம் கொடுத்தும் கூட,  ஆட்சி அமைக்கவும், பதவி ஏற்கவும்  அழைக்காதது மட்டுமல்ல, 118 எம்.எல்.ஏ.க்களின்  ஆதரவு கடிதத்துடன் வந்தால்   மட்டுமே பதவி ஏற்பு வாய்ப்பு என்று பிடிவாதமாகக் கூறி வருகிறார்.

இது அரசியலமைப்புச் சட்டப்படி, ஆளுநருக்கு உள்ள (Discretionary  Rights) என்ற போதிலும், உச்சநீதிமன்றத்தில்   எஸ்.ஆர். பொம்மை vs ஒன்றிய அரசு  வழக்கின்  தீர்ப்புப்படி மேலும் காலதாமதம் செய்யாமல், சட்டமன்றத்தில்  திரு. ஜோசப் விஜய் அவர்களின் கட்சியின் ஆதரவையும் பலத்தையும் நிரூபிக்கச் சொல்வதே சரியான முறையாகும்.

தி.மு.க. தலைவரின் முதிர்ச்சியும் கண்ணியமும் நிறைந்த அறிக்கை

தேர்தல் முடிவுகளின்படி வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில், தி.மு.க. தலைவர் மானமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடக்கம் முதலே முரண்பாடற்ற சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

  1. மக்கள் தீர்ப்பை தி.மு.க. ஏற்பதுடன் அதற்குத் தலை வணங்குகிறது.
  2. முன்பு ஆளுங் கட்சியாக இருந்து சிறப்பாகச் சாதனை செய்ததுபோல இனி பொறுப்புள்ள ஓர் எதிர்க்கட்சியாகத்தமிழ்நாட்டின் உரிமைகளுக்கும், வளர்ச்சிப் பாதுகாப்பிற்கும் உறுதுணையாகப் பாடுபடும்.
  3. வெற்றி பெற்ற கட்சி ஆட்சிஅமைக்க நாங்கள் இடையூறு செய்ய மாட்டோம்.
  4. முந்தைய அரசின் வளர்ச்சித் திட்டமான மகளிர் உரிமைத் தொகை திட்டங்களைத் தொடர வற்புறுத்துவோம்!
  5. புதிய ஆட்சிக்கு நல்லாட்சி தர ஆறு மாதங்களுக்கு அவகாசமும் தருவோம்.

வெற்றி வாய்ப்பை இழந்துள்ள எந்தக் கட்சியும் இவ்வளவு அரசியல் முதிர்ச்சியுடனும், பண்பாட்டுடனும் பேசிய வரலாறு இல்லை.  மக்கள் தங்களுக்கு வாக்களிக்காத நிலையிலும் அதை ஏற்கும் சிறப்பான நாகரிகத்தோடும்,  பக்குவத்தோடும் அவர் கூறியது வரலாற்றில் மிகவும் தனித்தன்மையான சிறப்பாகும்!

மாற்றம் – தடுமாற்றம் ஆகலாமா?

நேற்று தி.மு.க. தலைவர் வெளியிட்ட  அறிக்கையில்,

‘‘புதிய அரசு அமைக்க ஆளுநர் காலம் தாழ்த்தக் கூடாது. புதிய அரசு அமைவது காலத்தின் கட்டாயம்’’ என்று, தமிழ்நாடு ஆளுநருக்குப் பொறுப்புள்ள, பலம் வாய்ந்த  எதிர்க்கட்சியின்  தலைவர், மேனாள் முதலமைச்சர் என்ற முறையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இதை ஏற்று, புதிய அரசைப் பொறுப்பேற்க செய்து சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வண்ணம் ஆளுநர் கேட்கலாம்!

குதிரை பேரங்களைத் தடுக்க வேண்டுமானால் குறைந்த அவகாசத்தைத் தரலாம், அது ஆளுநரின் முடிவுக்கு உட்பட்டது.

ஆளுநர்  கால தாமதம் செய்யாமல்,  அரசியலமைப்புச் சட்டப்படி சரியாகச் செயல்படுவது இன்றிமையாதது!

இன்றேல் ஜனநாயகம் பிழைக்காது! வாக்களித்தவர்களை கோபமடைய செய்துவிடக் கூடாது.

முதிர்ந்த தெளிந்த பிரகடனத்தை வெளியிட்ட தி.மு.க. தலைவரின் கருத்தினை வரவேற்கிறோம்.

பெரு மாற்றம் என்று கூறியது தடுமாற்றமாகி, ஏமாற்றமாக முடியலாமா?

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

9.5.2026

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *