திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
கண்டன அறிக்கை
கண்டன அறிக்கை
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குக் கடைசி இடமா? திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆசிரியர் கண்டனம் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது கண்டன அறிக்கை வருமாறு:
திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33 ஆம் பட்டமளிப்பு விழா வரும் ஜூலை 28 அன்று நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பங்கேற்கவிருக்கிறார். இந்நிலையில் இது குறித்துச் செய்தியாளர்களைச் சந்தித்த அப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் சந்திரசேகர், ‘ராஜ் பவனில் (‘லோக் பவன்’ என்று மாற்றப்பட்டாலும், துணைவேந்தர் ‘ராஜ் பவன்’ என்று தான் சொல்லியிருக்கிறார்.) இருந்து சொல்லிவிட்டார்கள். முதலில் வந்தே மாதரம், பிறகு தேசிய கீதம், பிறகுதான் தமிழ்த் தாய் வாழ்த்து’ என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தாய் வாழ்த்தை மூன்றாவதாகப் பாடச் சொல்ல ஆளுநர் மாளிகைக்கு என்ன அதிகாரம்?
தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறை யார் கையில் இருக்கிறது? ஆளுநர், குடியரசுத் தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் வந்தே மாதரம் பாடப்பட வேண்டும் என்ற ஆணையும், தேசியகீதத்துக்கு முன்பு அது பாடப்பட வேண்டும் என்ற விளக்கமும் ஒன்றிய அரசால் தரப்பட்டுள்ளது. அதை நடைமுறைப்படுத்துவதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், ஒன்றிய அரசு தந்துள்ள விளக்கத்திலேயே மாநிலப் பாடல்கள் பாடப்படுமானால், அதற்கு அடுத்து வந்தே மாதரமும், கடைசியாக தேசிய கீதமும் பாடப்பட வேண்டும் என்று விளக்கம் சொல்லப்பட்டுள்ளது. அதை ஊடகங்களும் தெரிவித்திருக்கின்றன. ஆனால், தமிழ்த் தாய் வாழ்த்தை மூன்றாவதாகப் பாடச் சொல்ல ஆளுநர் மாளிகைக்கு என்ன அதிகாரம்?
தொடர் அவமதிப்புகளுக்கு
மாநில அரசின் பதில் என்ன?
மாநில அரசின் பதில் என்ன?
அதிலும், தமிழ்த் தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்திலேயே அவருக்கும் அவமதிப்பு, தமிழ்நாட்டு ஆணைக்கும் அவமதிப்பா? ஒன்றிய அரசிடம் பேசிவிட்டோம். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இனி அவமதிப்பு இருக்காது என்று மாநில அரசினரும், அமைச்சர்களும் சொன்னது என்னாயிற்று? இந்தத் தொடர் அவமதிப்புகளுக்கு மாநில அரசின் பதில் என்ன?
தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்காது!
ஆளுநர் மாளிகையின் அதிகார அத்துமீறல்களுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மாநில உரிமைகள் கிள்ளுக் கீரைகளல்ல! 28 ஆம் தேதி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்தை முதலில் பாடத் தமிழ்நாடு அரசு ஆவன செய்ய வேண்டும்! இந்த நிலைமை நீடிப்பதைத் தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்காது.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
