சென்னை, மே 7 தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி நடிகர் விஜய்யின் தவெக 108 இடங்களிலும், திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதனால் தமிழ்நாட்டில் தொங்கு சட்டமன்றம் அமைந்துள்ளது. தவெக அதிக இடங்களை வென்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைப்பதற்கு 118 இடங்கள் தேவை என்பதால் மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கத் தயாராகி வருகிறது.
அதே சமயம் தி.மு.க. தலைவரும், மேனாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், தனது கோட்டையாகக் கருதப்பட்ட கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் சுமார் 8 ஆயிரத்து 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.
இந்நிலையில் சென்னை ஆழ்வார் பேட்டையில் மு.க.ஸ்டாலினின் இல்லத்திற்கு நேரில் சென்ற நடிகர் ரஜினிகாந்த் அவரைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, தேர்தலில் வெற்றிபெறும் நேரத்தில் மட்டுமல்ல, இக்கட்டான சூழலிலும் உடன் இருப்பேன் என மு.க. ஸ்டாலி னுக்குத் தனது ஆதரவைத் தெரிவிப்ப தாகவும், அவருக்குத் துணையாக இருப்பேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் உறுதியளித்ததாகத் தகவல்கள் வெளியாகி யுள்ளன.
சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பு, மரியாதை நிமித்தமான வருகை மட்டுமல்லாது, தற்போதைய அரசியல் சூழலில் மு.க. ஸ்டாலினுக்கு ஆறுதல் கூறும் ஒரு செயலாகவும் கருதப்பட்டது. மேலும் இந்தச் சந்திப்பு தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய்யின் தமிழ்நாடு வெற்றிக் கழகம் அதிக இடங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில், நீண்ட கால நண்பர் என்ற அடிப்படையில் மு.க. ஸ்டாலினை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துப் பேசியுள்ளதும் மக்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பு தொடர்பான ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
