சென்னை, மே 6- 2026 தேர்தல் மாயை போன்றது. நமக்கான எதிர்காலம் உறுதியாக உள்ளது. யாரும் மனம் தளர வேண்டாம் என்று தே.மு.தி.க. தொண்டர்களுக்கு பிரேமலதா அறிக்கை மூலம் தெரிவித்து உள்ளார்.
பிரேமலதா
இதுகுறித்து தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மதச்சார்பற்ற வெற்றிக் கூட்டணி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். தேர்தல் களத்தில் கூட்டணி தர்மத்தை மதித்து மிகச் சிறப்பாக பணியாற்றிய அனைவருக்கும் பாராட்டுகள். தோல்வியுற்ற வேட்பாளர்கள் யாரும் மனம் தளராமல் இருக்க வேண்டும்.
மாயை போன்றது
நமக்கான எதிர்காலம் உறுதியாக உள்ளது. 2026 தேர்தல் ஒரு மாயை போன்றது; இதில் வெற்றியும் தோல்வியும் யாராலும் கணிக்க முடியாத வகையில் முடிவுகள் அமைந்துள்ளன. இது நிரந்தரமானது அல்ல. மாற்றம் மட்டுமே மாறாதது என்பதால் உறுதியுடன் இருந்து சவால்களை எதிர்காலத்தில் நாம் எதிர்கொள்ள வேண்டி தைரியமாக சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும், மாவட்ட கழக செயலாளர்களுக்கும், ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் மதச்சார்பற்ற வெற்றி கூட்டணியில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
