தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில், 2026 மே மாதம் ஒரு கருப்பு அத்தியாயமாகவே அமைந்துவிட்டது என சமூக வலைதளங்கள் எங்கும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் இருக்கும் ஆபத்துகள் குறித்தும், கழகத் தலைவரின் கடந்த அய்ந்து ஆண்டுக்கால செயல்பாடுகள் குறித்தும், நூற்றுக்கணக்கான பதிவுகள் எழுதப்பட்டுள்ளன.
‘கடந்த அய்ந்தாண்டுக்கால தி.மு.க. ஆட்சி, என் அனுபவத்தில் நான் கண்ட சிறந்த ஆட்சி என்பதில் எனக்கு அய்யமில்லை. குறைகளற்ற ஆட்சி என்று எதுவும் கிடையாது. ஆனால், சிறந்த முன்னெடுப்புகளைச் சாத்தியப்படுத்திய ஆட்சி. அதற்குக் கிடைத்துள்ள தேர்தல் தீர்ப்பு ஆரோக்கியமானதல்ல’ எனக் குறிப்பிட்டுள்ளார் அரசியல் விமர்சகர் ராஜன் குறை கிருஷ்ணன்.
‘எனது அனுபவத்தில் தமிழர் நலன், ஜனநாயகப் பண்பு, கூர்மையான அரசியல் கொள்கை என இவற்றில் தேர்ந்த தலைவர் என அறிஞர் அண்ணாவை அடுத்து மு.க.ஸ்டாலினைக் கருதுகிறேன். அவர் தனது தொகுதியில் தோல்வியுறுவாரானால், அதற்காக அம்மக்கள் பின்னாளில் வருந்துவர் என உறுதியாக நினைக்கிறேன். தொங்கு சட்டமன்றம், பாசிச-பாயாச அரசியலின் நடைமுறையைப் பார்க்கப் போகிறோம். ஒரு ‘கட்சி’ எனும் அளவில் தி.மு.க. வலுவாகவே உள்ளது. தனது கடமையை அது ஆற்றும்’ எனக் குறிப்பிட்டுள்ளார் எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன்.
‘தி.மு.க. சிறந்த ஆட்சியைத் தரவில்லை என்று குற்றம் சாட்டியவர்களுக்கு, ‘தி.மு.க.வைவிட சிறந்த ஆட்சியை யாராலும் வழங்க முடியாது’ என்பதை அடுத்த அய்ந்தாண்டுகள் உணர்த்தும். தங்களின் தொகுதிக்கு மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் அவர்களைவிட, சிறப்பாகச் செயல்பட்டவர்கள் யாரும் இருக்க முடியாது. மக்களின் தகுதிக்கு ஏற்பவே தலைவன் அமைவான்” எனக் குறிப்பிட்டுள்ளார், சமூகச் செயல்பாட்டாளர் மணிரத்தினம்.
