புதுடில்லி மே 06 பாஜகவின் தேர்தல் வெற்றிப் பயணத்திற்கு பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
பஞ்சாபில் உள்ள கபூர்தலா இல்லத்தில் ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், பாஜக அரசு ஜனநாயகத்தை அழித்து வருவதாகக் கடுமையாகச் சாடினார்.
வாக்காளர் பட்டியலில் முறைகேடு
பாஜக தேர்தல்களில் பல்வேறு முறைகேடுகளைச் செய்து வருவதாகக் குறிப்பிட்ட கெஜ்ரிவால், “இந்தியாவில் ஜனநாயகம் தற்போது பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. மேற்கு வங்கத்தில் பாஜக செய்ததைப் போலவே, டில்லியில் உள்ள எனது தொகுதியிலும் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கி முறைகேடுகளில் ஈடுபட்டனர். 2014-இல் மோடிக்கு ஆதரவாக வீசிய அலையைப் பயன்படுத்தி அவர்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தனர். ஆனால், 2015 டில்லி தேர்தலில் அவர்களால் வெறும் 3 இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது,” என்றார்.
பஞ்சாப் மாநில அரசியல் சூழல் குறித்துப் பேசிய அவர், “ஒருவேளை பஞ்சாபில் பாஜக ஆட்சிக்கு வந்தால், அந்த மாநிலத்தையே சீரழித்துவிடுவார்கள். வரவிருக்கும் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல்தான் பிரதமர் மோடிக்குக் கடைசித் தேர்தலாக அமையும். இந்தத் தேர்தலில் ஏற்படும் தோல்வியைத் தொடர்ந்து, மத்தியில் உள்ள மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கவிழ்ந்துவிடும்,” எனத் தெரிவித்தார்.
இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
இந்திய பொருளாதார வரலாற்றில் முதல்முறையாக அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நேற்று முன்தினம் ரூபாய் 95 கீழ் சரிந்தது. இந்திய ரூபாய் மதிப்பு நேற்றும் சரிந்தது. வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி சந்தையில் ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 23 காசுகள் சரிந்து ரூபாய் 95.25 என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.
