‘நீட்’ தேர்வு மோசடி டில்லியில் நால்வர் கைது

4 Min Read

‘நீட்’ தேர்வு மோசடியில் ஈடுபட்ட குஜராத்தைச் சேர்ந்த ஏஜென்ட் உள்பட 4 பேர் டில்லியில் கைது செய்யப்பட்டனர். மோசடிக் கும்பலிடம் சிக்கிய 18 மாணவர்களும் மீட்கப்பட்டனர். மேலும் ரூ.30 லட்சம் மதிப்பிலான காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த மே 3ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் மாணவர்களிடம் பணம் பறித்த 4 பேரை டில்லி காவல்துறையினர் கைது செய்தனர். நீட் தேர்வுக்கான வினாத்தாளை முன்கூட்டியே வழங்குவதாகக் கூறி 18 மாணவர்களிடம் பேரம் பேசியுள்ளனர்.

பின்னர் 18 மாணவர்களையும் முதல் நாள் இரவு பெற்றோரிடமிருந்து தனியாக வரவழைத்து ரகசிய இடத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு நீட் தேர்விற்கான வினாத்தாள் கொடுத்து எழுத வைத்துள்ளனர்.

‘நீட்’ தேர்வில் தொடர்ந்து மோசடிகள் அரங்கேறி வருவதால் பலரையும் காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். இந்த ஆண்டும் டில்லியில் மோசடியில் ஈடுபட இருந்த நான்கு முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் குஜராத் மாநிலம் சூரத்தை சார்ந்த வினோத் பாட்டியா என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மூலம் தான் முறைகேடு அரங்கேற்றப்பட்டுள்ளது. அதாவது மே 3ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது.

அந்த முதல்நாள் இரவு காவல்துறையினருக்கு  கிடைத்த ரகசிய தகவலின்படி சோதனைகளில் ஈடுபட்டனர். டில்லி உட்பட பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இறுதியாக காசியாபாத் அருகே ஒரு இடத்தில் மூன்று மாணவர்கள் அடைத்து வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சோதனை நடத்தியதில் மற்றொரு இடத்தில் 18 மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.  அவர்களிடமிருந்து மறுநாள் நீட் எழுதுவதற்கான வினாத்தாள்கள் இருந்தது கண்டறியப்பட்டன.

இது ஏதோ இப்பொழுதுதான் நடைபெறுகிறது என்று கருதவிடக் கூடாது. ‘நீட்’ என்ற ஒன்று காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டாலும் உச்சநீதிமன்றத்தில் ‘நீட்’ செல்லுபடியற்றது என்று தீர்ப்பு வந்த பிறகு ‘நீட்’ அப்பொழுதே கைவிடப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு ஒன்றிய பிஜேபி அரசால் தாக்கல் செய்யப்பட்ட பிறகு அளிக்கப்பட்ட தீர்ப்பின் மூலம் ‘நீட்’ நடைமுறையில் உள்ளது என்பது – அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான உண்மையாகும்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர் தலைமையில் நீதிபதிகள் விக்ரமஜித் சென், ஏ.ஆர்.தவே ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்திய அரசமைப்புச் சட்டம் 19, 25, 26, 29, 30 பிரிவுகளின்படி ‘நீட்’ தேர்வை நடத்தும் உரிமை மருத்துவக் கவுன்சிலுக்குக் கிடையாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டதோடு, ‘நீட்’ தேர்வுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது (18.7.2013).

மோடி தலைமையில் ஒன்றிய பிஜேபி அரசு வந்த நிலையில் மறு சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

உச்சநீதிமன்ற நீதிபதி அல்தாமஸ் கபீர் தலைமையிலான அமர்வில் ‘நீட் செல்லும்’ என்று மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய ஏ.ஆர்.தவேதான் – ஒன்றிய பிஜேபி அரசு தாக்கல் செய்த மறு சீராய்வு மனுவை விசாரித்த அமர்வுக்குத் தலைமை என்றால்  தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது தெரிந்ததுதானே! பிஜேபி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த நிலையில் ‘நீட்’ செயல்பாட்டுக்கு வந்தது என்பது கவனிக்கத்தக்கதாகும்.

‘நீட்’ செயல்பாட்டுக்கு வந்தது முதல், ஏகப்பட்ட ‘தில்லுமுல்லு’கள் நாளும் அரங்கேறின.

தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் பூரா நர்சையா கவுட், நீட் தேர்வு தொடர்பாக 2.4.2018 அன்று கேள்வி ஒன்றை எழுப்பினார்.

மருத்துவ மேல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தேர்வை நடத்தும் புரோ மெட்ரிக் எனும் அமெரிக்க நிறுவனம் ‘‘நீட் தேர்வு தொடர்பான மென் பொருளைக் கையாடல் செய்ய முடியும்’’ என ஒப்புக் கொண்டுள்ளதா, இல்லையா? என்பதுதான் அந்தக் கேள்வி!

மேற்கண்ட கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் டாக்டர் சத்யபால் சிங் அளித்த பதில் என்ன?

2017ஆம் ஆண்டுக்கான, மருத்துவ மேற்படிப்பில் சேர்வதற்கான ‘நீட்’ தேர்வை அமெரிக்க நிறுவனமான புரோ மெட்ரிக் நிறுவனம் நடத்தியது.

இத்தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக ஒன்றிய தேர்வுக் குழுமம் கொடுத்த புகாரின் பெயரில் டில்லி குற்றப் பிரிவுக் காவல்துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.

இது தொடர்பான விசாரணையில் அமெரிக்க நிறுவனத்துடன் நடைபெற்ற தொலைப்பேசி உரையாடலில், ‘தங்களது மென்பொருள் கையாடல் செய்யப்பட்டதை அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டது’ என்ற தகவலை ஒன்றிய அமைச்சர் பதிலாக அளித்தார்.

இதில் இடைத் தரகர்களும் புகுந்து விளையாடியுள்ளனர்.

‘நீட்’ தொடக்கம் முதலே ஊழலில் திளைத்தது தெரிந்ததே! அடுத்தடுத்து நடைபெற்ற ‘நீட்’ தேர்வுகளில் ஆள் மாறாட்டங்களும் நடைபெற்றன.

2020இல் ‘நீட்’ தேர்வில் நடைபெற்ற ஒரு மோசடி எடுத்துக்காட்டத் தகுந்தது. ‘நீட்’ தேர்வை எழுதிய அக்ைக்ஷ விடைக் குறிப்பை (Answer Key) வைத்துப் பார்த்தபோது 520 மதிப்பெண்கள் வந்தன.

ஆனால் தேர்வு முடிவு வந்த போது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவருடைய மதிப்பெண் சுழியம் (Zero) என்று இருந்தது. கணினிவழி விடைத்தாளை (OMR Sheet) வாங்கிப் பார்த்தபோது, அவர் கையெழுத்தே இல்லை – மாறி இருந்தது. அங்கே நீட் தேர்வு விடைத்தாளில் மோசடி நடந்தது தெரிய வந்தது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இப்பொழுது குஜராத் மாநிலத்தில் நீட் தேர்வு மோசடியில் ஈடுபட்ட நான்கு பேர் புதுடில்லியில் கைது செய்யப்பட்டனர் என்று செய்தி வந்துள்ளது.

இந்த யோக்கியதையில் ‘நீட்’ தேர்வு என்பது ‘தகுதியான மாணவர்,மாணவிகளை மருத்துவக் கல்லூரியில் சேர்ப்பதற்கான வழிமுறை’ என்று வெட்கமின்றிக் கூறுகின்றனர்.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் முதல் தலைமுறையில் படித்து மருத்துவக் கல்லூரியில் சேரத் துடிப்போருக்குக் கதவடைக்கும் பார்ப்பனத் தந்திரமே இந்த ‘நீட்’ தேர்வு என்பது – நினைவிருக்கட்டும்!

ஒடுக்கப்பட்ட மக்களிடையே விழிப்புணர்வு தேவை. அவர்கள் வீதிக்கு வந்து போராட முன் வர வேண்டும்!

‘நீட்’ என்று வந்தது முதற் கொண்டே அதை எதிர்த்துப் பிரச்சாரம், போராட்டம் என்று தொடர்ந்து செயல்பட்டு வருவது திராவிடர் கழகம், மாணவர்கள், பெற்றோர்கள் தூங்கியது போதும்! போதும்!! – விழித்தெழுக!

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *